புனைவு
ஓர் அறிவுஜீவித வினைபுரிவாக : மனிதவாத மையம் விலகிய சாத்தியங்கள்:
(பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் கதைகள் குறித்து)
: பிரவீண்
பஃறுளி
( கல்குதிரை இதழில் வெளியானது)
புதுக்கவிதை
என்ற இடத்தில் நவீன கவிதை என்ற சொல்லும் சிறுகதை,
நாவல் என்ற இடத்தில் புனைவு என்ற சொல்லும் தன்னியல்பாகப் புழங்கத் தொடங்கியதன் பின்னான தொண்ணூறுகளின் உருமாற்றங்களுக்குள் சாராமாக நின்றவை எவை. எழுத்தின் பிரக்ஞை சுயமையிலிருந்து பிறிதின் நிலைகள் நோக்கி நீர்மமடைந்ததும் எழுதுவெளி
பன்மிய அடையாளங்கள், வரலாறுகள், நினைவுத் தொகுப்புகள் நிரம்பிய கூட்டுப் பிரதியாக உருமாற்றம் பெற்றதும்
ஒரு காரணாமகாலாம். ஆசிரிய மையம் கலைந்து எழுத்தும் வாசிப்பும் மயங்கி வார்ப்புற்ற தளங்களும்
அதில் ஒரு அம்சம். காலனித்துவ நவீனத்துவம்
கையளித்த பகுத்தறிவு, நிரூபணவாதம்,
புலனறி மெய்ம்மை சார்ந்த யதார்த்தவாத மொழிபுகளிலிருந்து விடுபட்டு ஞாபகம் சென்றடையமுடியாத
நீட்சிக்குள்ளிருந்து தொடர்ந்து வரும் மொத்த
மொழிப் பிரபஞ்சத்துக்குள்ளும் எல்லையற்ற சுதந்திரத்தோடு திறந்துகொள்ளும் சாத்தியத்தில்தான் கதை என்பது புனைவு என்னும் பெரும் பரப்புக்குத்
தாவியது. புனைவுக்குள் கதை ஒரு கூறு மட்டுமே.
அது சம்பவ வரிசைகள், மாந்தர்கள், பெயர்கள் போன்ற புறவயமான கதைக்கூறுகளை ரத்து செய்தும்,
மொழிவெளியாக வேறு வகையில் மானுட கூட்டு நினைவின் அதார தளத்திலும் நிகழும் தன்மையது.
நேரடியான இயல் எதார்த்தம் என்னும் சிறுபுலத்திலிருந்து விடுபட்டு
தொன்மங்கள், வழக்காறுகள், நினைவுத்
தொகுதிகள், கனவுக்கூறு, மிகுபுனைவு
சேதன அசேதன அறிநிலைகள் யாவும் சூழ்ந்த மொழியின் முடிவின்மைக்குள் புனைவு திறந்துகொள்ளக்கூடியது.
மொழி என்னும் மாபுனைவோடு கட்டப்பட்டதன் வழி எந்தப் புனைவும் தனக்கு முன்னும் பின்னுமான
ஆயிரம் புனைவுகளோடு தொட்டும் ஊடியும் இயங்கியபடியே உள்ளது. இந்நிலையில்தான் வழமையான
புலப்பதிவு வாழ்வியல் கதைகள் மொழியினூடாக கிளைக்கும் பெருமரபிலிருந்து துண்டித்துக்கொண்டு
மூடிக்கொள்கின்றன. கதைசொல்லி ஆசிரியனிடமிருந்து
முற்றிலும் விடுபட்டுக்கொண்டதும் கதை புனைவாக விரிவு கொண்டதன் ஒரு முக்கிய அம்சம். கதைசொல்லியின் தோளிலிருந்து இறங்கி ஆசிரியன் ஒதுங்கிக்
கொண்டு புனைவை அதன் கதிக்கு விட்டது முக்கிய இடம். கவிதை எத்தனை புறவய விரிவும் மற்றமை நோக்கியும் பரந்து சென்றாலும் அதில் கவிஞனின் தன்னிலை
இருப்பு நீடித்துக்கொண்டே இருக்கிறது. புனைவில்
ஆசிரிய தன்னிலையின் விலக்கம் என்பது முற்படுநிலையாகிவிடுகிறது . தொண்ணூறுகள் தொடங்கி தமிழில் கவிதை தொடர்ந்து புனைவுத்தன்மை அடைந்து வருவதற்குள் மற்றமைகளின்
உலகம் நோக்கி கவிதை ஈர்ப்படைந்தது ஒரு முக்கிய அம்சம். தன் நீக்கம் பெற்ற பிரதியாகப் புனைவைத் திறந்து
மற்றமையாகிப் பரந்த அத்தனைப் பிரபஞ்சத் தொகுதிகளுக்கும் இடமளிப்பது புனைவாளியின் பெரும்
பொறுப்புமாகிவிடுகிறது.
நவீனத்துவம்
அண்டவெளி அறிவியலில் பூமியை மையமிழப்பு செய்தாலும் அதற்கு நேரெதிராக அரசியல், தத்துவ, கலைப் புலங்களில்
புவிமையத்தையும் , மனிதமையவாதத்தையும் ஓங்கிப்
பிடித்தது. மனித இருப்புதான் நவீனத்துவம் சுமந்த ஆதாரமான விசாரனையாகியது. மனிதம் கழிந்த இந்த உலகத்தின் பொருட்டு என்ன. மூச்சு
முட்டும் அசேதனக் கூட்டங்களின் பேரண்டத்தை புனைவாளன்றி யாவர் திறந்துகாண முடியும்.
நவீனத்துவத்தின் மனிதமுதல்வாத மையத்திலிருந்து சலிக்க சலிக்க உற்பத்திசெய்யப்பட்ட
யதார்த்தவாத பெருந்தொகுதிகள், மனிதன் மட்டுமே நிரம்பியிருக்கும் உலகியல்-வாழ்வியல்
புனைவுகள் யாவும் மனிதனின் அதீத தன்னினச் சுயப்பித்தின் நார்சிச பிறழ்ச்சியின் சாட்சியாகின்றன. காலனியத்துக்கும் நவீனத்துவத்துக்கும் அந்தப் பக்கம் போய்விட்டால்
வரலாற்று காலத்துக்கும் முன்பிருந்தே நம் தொல் புனைவுகள், ஆதி இனக்குழுக் கதையாடல்கள்
யாவும் அசேதனங்களோடும், அமனிதமான பிரபஞ்ச கூறுகளோடும் தீராத உரையாடல் கொண்டவையே. நாம் நம்
நீண்ட மரபோடும் மூதாதைகளோடும் ,அமனிதமான தொல்கூறுகளோடும், சமூகப்பெரு நனவிலியோடும்
உலகாளவிய தன்மையில் இணைந்துகொள்வதற்கான மீள்வழிகளை தொண்ணூறுகளில் லத்தீன் அமெரிக்கப்
புனைவுகள் புதுப்பித்தளித்தது ஒரு முக்கியப் சந்தர்ப்பம்.
இன்று
சிறுபத்திரிக்கை சார்ந்த அறிவு மரபு வெகுசன
கேளிக்கைகளில் உள்வாங்கப்பட்டு ’இடை நிலை’ எழுத்து, உற்பத்தியை நிறைத்திருக்கும் புள்ளியில்தான்
யதார்த்தவாத கதை கூறலின் உலகியலான, மனிதமைய
நேரடிப் புலப்பதிவு கதைகள் பெருகி நிறைகின்றன. எழுதுவெளியில் எல்லோருக்குமான திறப்பும்,
முன்னெப்போதும் இல்லாதபடிக்கு பன்முகமான அனைத்து சமூக வாழ்நிலைகளும் முன்வைக்கப்படுவதற்கான
சுதந்திரமும் இன்றைய மாற்றங்களின் நல்லறிகுறி. அதே சமயம் ‘எழுத்து’ என்பதன் தனித்துவமான அறிமுறைகள், விசித்திரம்,
அறப் பிரக்ஞை, மெய்யறிதல், கண்டுபிடிப்பு
என்பதன் இடத்தில் ஆவணப்படுத்தலும், குடும்ப வரலாறுகளும் மனிதர்கள் நிரம்பி வழியும் இடமாகவும் புனைவு மாறியுள்ளது. சொல்லப்படாத
வரலாறுகள், அடையாளங்கள் புனைவை ஒரு பக்கம் பன்முகப்பரப்பாக உருமாற்றியுள்ளதன் அருகாமையிலேயேதான்
சௌகரியமான தரப்புகள் ‘இடைநிலை எழுத்து’ என்னும்
மூட்டமான சூழலின்வழி தம்மைத் தகவமைத்துக்கொண்டுள்ளன. தீவிர எழுத்து – வணிக எழுத்து என்ற கோடு
கலைந்த வெளியில்தான் புனைவு என்பது வெறும் கதை கூறும் இடமாக சுருங்கியுள்ளது.
கதையளித்தலுக்கு அப்பாலான அறிதல் சாத்தியங்களை நோக்கி அவை தீவிரம் கொள்வதில்லை. சலிக்கும்
மனிதப் பரப்பாகவும் வழவழப்பான ’அன்பும்’, வாழ்வின் முரண்கள், விபரீதங்கள் மௌனமாக்கப்பட்ட மிகை நெகிழ்வுகளும், உணர்ச்சிமலிதல்களும் கூடிய இடமாகவும் அது மாறி வருகிறது. சுய பாரம்பரியங்களின் தடித்த நாவல்களாகவும் , தீவிர எழுத்து மரபில் ஏற்கனவே அடையப்பட்டுவிட்ட
யதார்த்தவாத நுண்மைகளுக்கு உள்ளேயே உழலும் மனிதவாதம் நிரம்பி வழியும் உலகியல் கதைகளுமான
இந்த இடைநிலை எழுத்து, சிறுபத்திரிக்கை மரபில் இயங்கிய எல்லா வேறுபாடுகளையும் இடைவெளிகளையும் மௌனப்படுத்தியுள்ளது. அசோகமித்திரன்
, வண்ணதாசன் போன்ற கதையாளிகளின் யதார்த்தவாத
வகைமாதிரிகளைத் தொடர்ந்து பிரதியெடுத்தலின் வழி கதை கூறலை ஒற்றைத் தன்மையுடையதாக அது நிலை நிறுத்தியுள்ளது.
சிற்றிதழ் மரபும் வணிக மரபும் புணர்ந்து உருப்பெற்றுள்ள இந்த உற்பத்தி எழுத்துக்கு அதுவே
உகந்ததாக உள்ளது.
90களில்
எட்டப்பட்ட கட்டற்ற புனைவியல் சுதந்திரங்கள், கதை கூறலின் பல்வேறு சாத்தியங்கள்
இழக்கப்பட்டு கதைஞன் மீண்டும் சுய அனுபவம் என்ற சிறிய எல்லைக்குள்ளிருந்தே சுயமிக்
கதைகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறான். தனது சுய அனுபவம், புழங்கு எல்லை , பால்யம் , உறவுகள் என்ற ஈர்ப்புமண்டலத்திலிருந்து ஓரடியும் மேலெழும்ப
முடியாத தன்பித்துதான் அதன் உட்கிடையாக உள்ளது. புனைவாளன் என்பவன் சுயானுபவப் புலத்திலிருந்து
மட்டுமன்றி, மொழி ஈர்ப்பு வெளியிலிருந்தும் , புவி ஈர்ப்பு வெளியிலிருந்தும் கூட வெளியேறி கதை
சொல்லும் சாத்தியம் கொண்டவன். புவி ஈர்ப்பில்தான்
நாம் ஒட்டப்பட்டிருக்கிறோம். நம் உடலம், காலம்,
இடம், மொழி எல்லாம் அதனுள்தான் கட்டுண்ட நிலையில்
ஈர்ப்புவிசைக்கு எதிரான திசையில் தான் மனிதனின் கனவும் கலையும் விசை கொள்ளக் கூடும்.
..
பாலசுப்ரமணியன்
பொன்ராஜின் கதைகளை இவ்விடத்தில் வைத்து வாசிக்க முடியும். அவரது கனவு மிருகம், துரதிஷ்டம்
பிடித்த கப்பலின் கதை ஆகிய இரு தொகுதிகள், அவற்றுக்குப் பிறகு கல்குதிரையில் வெளியான
பிரமிடுகளை அளக்கும் தவளை உள்ளிட்ட கதைகள்
தற்போதைய யதார்த்தவாத கதைப் பெருக்கிலிருந்து
விலகிய இயல்பும் புனைவைத் தீவிரப்படுத்தும் இயல்பும் கொண்டவையாக தம்மை முன்வைத்துள்ளன. ’கனவுநிலை, அறிவார்த்தம், தத்துவமை, பரிசோதனை,
சுதந்திரம் ‘ ஆகியவை அவற்றின் அடிப்படை புனைவியல்புகளாக உள்ளன. இன்றைய யதார்த்தவாத
அனுபவப் பதிவுக் கதைகளிலிருந்து இந்த அம்சங்கள் நெடிது கைவிடப்பட்டவை என்பது குற்பிடத்தக்கது.
புனைவின் பவிதமான சாத்தியவழிகளைத் திறந்தபடி,
புவிஈர்ப்புக்கு வெளியிலும் கண்கள் கொண்டு , மனிதவாத மையம் விலகிய தன்மையிலுமான புனைவுத்தளங்களை
அவைத் தொடுகின்றன. குறிப்பாக ’பிரமிடுகளை அளக்கும் தவளையை’ அத்தன்மையில் பொருத்திக்
காண முடியும்.
பா.பொ.
வின் கதைகளை இரு தன்மையிலானதாக அணுகலாம். ஒன்று அனுபவம்,
யதார்த்தம் என்ற தளத்தில் இயங்கும் நிலம், மாந்தர்கள், சம்பவங்கள் எனத் தூலத்தன்மை
கொண்டவை. மற்றொன்று கதையம்சம் மெலிதாக்கப்பட்ட வெகுபுனைவுத் தன்மையிலானவை. முன்னதன்
நிலம் ஓர் அதிவெளிப் பெரு நகரமாக உள்ளது.
பின்னதன் புனைநிலம் வாசிப்பின் வழி
திரண்ட பல்வேறு பிரதியியல் பிரதிபலிப்புகள்
, மொழித்தளம், கனவுத் தன்மை, மிகு புனைவு கூடிய ஒரு பிரதியியல் நிலமாக உள்ளது.
ஆப்பிள்,
சந்தன எண்ணை, தந்திகள், உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்பவர்கள், உடைந்து போன பூர்ஷ்வா
கனவு, ஜங்க், நாளைக்கு இறந்து போன நாய் போன்ற கதைகள் முதல் தன்மையிலமைந்தவை. பா.பொ. கதைகளில் அனுபவப்
புலம் சார்ந்து கிடைக்கும் கதைகள் அவை. ஒரு
ஹைபர் நகரத்திற்கே உரிய வேரற்ற தன்மையும் அந்நியமும் படர்ந்த ஒரு கதைச் சூழலை அது உருவாக்குகிறது.
பெருநகரத் தனிமை, அதன் மிகுதொழில்நுட்ப வெளிகள்,
நுகர்வியப் பின்னல், கலப்பு அடையாளங்கள் ஆகியவை சார்ந்த ஒரு கதைப் பரப்பு இவற்றில்
உருவாக்கப்படுகின்றன. இந்தக் கதைகளில் இடம் பெறும் அனைத்து உபயோக வஸ்துகளும் அவற்றின்
நுகர்விய முத்திரைகளோடே வருகின்றன. (உ-ம்: பாக்ஸர் ஷர்ட்ஸ், ரீபொக் ரன்னிக்
ஷூ, வைல்ட்கிராஃப்ட் முதுகுப்பை , அடிடாஸ் ஜெர்கின்..). அநேகமாக ஒரு பொருள் கூட அதன் நுகர்வு சார்ந்த பிராண்ட் அடையாளமின்றி இடம்பெறுவதில்லை.
இவற்றோடு இடம்பெறும் சர்வதேச இலக்கியம், சினிமா,
இசை, பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த பெயர்கள், அடையாளங்கள், குறிப்புகள் எல்லாம்
ஒரு நுகர்விய மேட்டிமைபோல தோன்றினாலும் அந்நியம் படர்ந்த ஒரு வினோத சாயலையும் தனித்துவத்தையும்
அளிக்கினறன. தமிழ்ப் புனைவுக்கு அது ஒரு புது பிராந்தியத்தை கொணர்கிறது. பெருநகரத்
தனிமைக்குள் வேரற்று திரியும் ஒரு கதைசொல்லியின்
வாசிப்பு, அந்நியமான இயல்பு , நெருக்கடிகள்,
தப்பித்தல் என்பதாக அவை இருக்கின்றன. இக்கதைகளின்
கதைசொல்லி சமூக மனவிலக்கம் கொண்ட பெருநகர உயிரியாக , சாகசங்கள், கொண்டாட்டங்கள் நோக்கி தன்னை செலுத்துபவனாக,
தேர்ந்த வாசிப்பாளனாக, நுகர்விய அலைக்கழிப்புகுட்பட்டவனாக , தனிமையுறுபவனாக, சமூக வெளி
மெய்நிகர் வெளியாகவும், தகவல் வெளியாகவும்
உருமாறும் இடத்தில் மிரட்சியுறுபவனாக , தத்துவங்கள் , நிலைப்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்
கொண்டவனாக, மதிப்பீடுகள் கலைந்தவனாக ஒரு விட்டேற்றி மனநிலையில் முன்வைக்கப்படுகிறான்.
அதனால்தான் அவனிடம் ஒரு சாரமான வாழ்வியல் சார்ந்த தூல பண்பாட்டு உடலைக் காண முடியவில்லை. மாறாக வாசிப்பும் அறிவுமாகவே
திரண்டிருக்கும் உடலோடு பயணங்கள், மர்மங்கள், அயல்வெளிகள் நோக்கி தன்னை
எப்போதும் செலுத்த விழையும் மேற்கத்திய எக்ஸ்ப்ளோரர்கள் போன்ற ஒரு குணாம்சம் அவனது சாராம்சமாகிறது. வாசிப்புதான் அவனது உடலாக இருக்கிறது. இக்கதைகளின்
புறவய சூழலை அமைக்கும் கருப்பொருள்கள்கூட வாழ்வியல் பண்பாட்டு நிலம் சார்ந்தவை அல்ல, முழுக்க நுகர்வியத்தில் புழங்கும் பிராண்டட்
பொருட்கள்தான். உதாரணங்கள் கூட வாழ்புலம் சார்ந்தன்றி அறிவு, வாசிப்பு போன்ற
தளத்திலிருந்தே வருகின்றன.
”
இரட்டையர்கள் லாரலும் ஹார்டியும் வந்து அவள்
முன்னே ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவை புரிந்தால் கூட அவளால் புன்னகைக்க மட்டுமே முடியும்…..’
’கில் பில் திரைப்படத்தில் உமா துர்மான் நிற்பதைப் போல முழு யூனிஃபார்மில் நிற்கும்
அவளை….” இவை சில உதாரணங்கள் . கதைகளில் வரும் இதர தரவுகள், உரையாடல்கள், எல்லாவற்றிலுமே ஒரு அயல்புல அறிவுச் சேகரங்களின் நிரவல் தவிர்க்கமுடியாதபடி இருக்கிறது. உலகமயத்தின்
ஹைபர் வெளிகள், அடையாள கலப்புகள், தகவல் வலைப்பின்னல், கண்காணிப்பு, பதிலி யதார்த்தங்கள்,
நுகர்வியம், அறிவுக்குவிப்பு என்பற்றுக்குள்
நுகர்ந்து அமிழ்ந்து அதனூடகவே எதிர்வினையும் கொள்ளும் அலைக்கழிப்பை இவை பேசுகின்றன. இக்கதைகளும் கூட யதார்த்த கதைகளின் வழமையான கூறுமுறைகளை மீறுபவைதான்.
இவற்றில் யதார்த்தம் அதற்கு அப்பாலான இடங்களோடும் மர்மமாக ஊசலாடுகிறது. நேரடியாக சாதாரணமான சித்தரிப்பில் சொல்லப்பட்டவைதான் என்றாலும்
சில கதைகள் மெல்ல ஒரு விசித்திரத்திற்குள்
நுழைந்துவிடுகின்றன. கதைசொல்லி தான் வளர்க்காத/இல்லாத
ஒரு நாயின் மரணம் குறித்த செய்திகளால் தொடர்ந்து
துரத்தப்படும் ‘ நாளை இறந்த நாய்’ , மனைவியைப்
பிரிந்து வாழும் ஒருவனின் ஃபிளாட்டில் உடனிருக்கும் இறந்து பல மாதங்களாகியும் அழுகாத பூனையுடலின் ‘தந்திகள் ’ போன்ற கதைகளை இத்தொடர்பில்
சுட்டலாம். ஒரு வித ஸ்ட்ரேஞ்னசும் மர்மத்தன்மையும்
கூடிய இருப்புக்கும் இன்மைக்கும் இடையில் ஊசல்கொள்ளும்
மனோரூபங்கள் இதில் உண்டு. ’உடற்பயிற்சி நிலையம்
செல்பவர்கள்’, போர்னா அடிமைகள் மீட்பு சங்கத்துக்கு செல்லும் ஒருவனை பற்றிய ’ஜங்க்’
போன்ற கதைகளும் வழமையான தமிழ்க் கதைகளில் காணப்பெறாத
ஓர் அயலுணர்வும் விசித்திரமும் சூழ்ந்தவை. இவற்றில் முக்கியமான ஒரு குணாம்சம் கொழகொழப்பாக்கப்பட்ட
அன்பு, மிகையுணர்ச்சி, அழகியல், நீதியியல்
போன்றவை நீக்கம்செய்யப்பட்ட தன்மை. இவற்றில் மனித வேட்கை, வன்முறை இயல்பு, அவனது விலங்குத் தன்மை
என்பது திறந்த கத்திபோல வைக்கப்பட்டுள்ளது.
புனைவு என்பது தப்பித்ச் செல்லும் வழித்தடமாகதான் பா.பொ. வின் கதைகளில் இருக்கிறது.
ஜங்க் கதையில் கதைசொல்லியும் அவனது வங்காள நண்பனும் சேர்ந்து கற்பனை செயயும் விசித்திரங்களும்,
யதார்த்த தளத்தை மீறிய ஊடாட்டங்களும், வாழியல் அனுபவங்களின் இடத்தில் வாசிப்புத் தரவுகளினூடக
வரும் விசாரனைகளும் தப்பிச் செல்லும் வழியாகதான் உள்ளது.
..
பா.பொ
வின் மற்றொரு தன்மையிலான புனைவுகள் என்பவை
கதைகள், சம்பவ நிரல்கள் நீக்கம்பெற்ற
புனைவுத் தீவிரமும் , அறிவார்த்தமும் முயங்கியவை. அறிவுத் தன்மை என்பது இக்கதைகளின்
ஓர் அடைப்படை அம்சம். ஆனால் இவை குறிப்பிட்ட
ஒரு வாழ்வியல் சாரத்தோடு தொடர்புள்ளவை எனக் கூற முடியாது. வாசிப்பே இவற்றின் நிலமாக
உள்ளது. முழுக்க புனைவாடல்கள், விவாத தர்க்கங்கள், அறிவுத் தரவுகள் , கருத்தியல் சலனங்களின் இடமாக இருக்கும் கதைகள் உள்ளன. கனவு மிருகம், இருள் திரவம், கொலையும் மூன்று உரையாடல்களூம்
போன்றவையும் குறிப்பாக இரண்டாவது தொகுப்பில் உள்ள பனிரெண்டு மரணங்களின் துயர் நிரம்பிய
தொகுப்பேடு, வலை, பின்னர் வெளிவந்த ’பிரமிடுளை அளக்கும் தவளை’ கதைகளையும் இங்கு குறிப்பிடலாம். ’பனிரெண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’ கதையம்சத்தை முற்றிலுமாக
நிராகரித்துவிட்டு விசாரனை, கருத்துநிலை, விவாதம்
என மொழி வெளியாகவும் சிந்தனைத் தளத்திலும் வைக்கப்பட்ட புனைவு. பனிரெண்டு மரணங்கள்
குறித்து தொடுக்கப்பட்ட உரையாடலின் வழி வன்முறையின் வரலாற்றை இக்கதை பேசுகிறது.
இவற்றில் அநேகம் அசேதனங்களின் மரணங்கள். பிரக்ஞையற்ற வஸ்துகள் மரணங்களின் வழி பேசத்தொடங்குகின்றன. வன்முறையும்
குற்றவுணர்வும் மோதிக்கொள்ளும் விவாதவெளியாகிய
கதை. விசித்திரமும் நுட்பமும் கூடிய அவதானிப்புகள்,
கவித்துவமான மனவெழுச்சிகள் என தீவிரம் கொள்ளும்
ஓர் தற்போக்கான பிரவாகமாக கதை செல்கிறது. பிரபஞ்சவியக்கத்துக்குள் வன்முறையின்
உள்ளார்ந்த இடத்தை அது விவாதிக்கிறது. பெருவெடிப்பு கணத்தை ஒரு துப்பாக்கிச் சூட்டின்
படிமமாக்கியிருப்பது ஒரு முக்கியமான இடம்.
“ மொத்த உலகமும் ஒரு துப்பாக்கிச் சூட்டிலிருந்துதான்
தோன்றியது. ஒரு துப்பாக்கிச் சூடுதான் மொத்த
உலகத்தையும் தோற்றுவித்தது. எது எப்படியிருந்தாலும் முதல் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துமே
தோன்றிவிட்டன. துகள்கள், கோள்கள், நட்சத்திரங்கள், வெற்றிடம், தூரம்…இரண்டாவது துப்பாக்கிச்
சூட்டில் மீதி அனைத்தும். பூக்களின் மகரந்த வெடிப்பிலிருந்து , துப்பாக்கிச் சூட்டின்
சத்தத்தால் பிளவுறும் ஓட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவருவது வரை…”
இது
போன்ற குறிப்பிட்ட தத்துவமோ, நிலைப்பாடோ சாராத ஆனால் தத்துவத்தன்மையும் தர்க்கங்களும் கூடிய அழகியலான விசாரணைகள் கொண்ட வரிக்கூட்டங்கள் நிரம்ப அவரது
கதைகளில் உள்ளன. அவை புனைவும் கவிதையும் மயங்கிய
நிலையில் அடையப்படவைதான். புனைவை ஆசிரியன் சிந்தனை விளையாட்டாக மாற்றும் இடம் ஒரு அற்புதம்தான் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் அவை கதையின்
ஒழுங்கு , தேவை மீறியும் நிகழ்கின்றன. ஆனால் பா.பொ கதைகளில் இது தவிர்க்கமுடியாதபடிக்கு
ஒரு சாரமான பண்பாக இருக்கிறது. தற்போக்கான
சிந்தனை எழுச்சிகள், கவித்துவ ஓட்டம், தர்க்கவியலான புனைவாடல்கள் போன்றவை அவரது அழுத்தமான ஒரு கதைக்கூறு.
பா.பொ
வுக்கு கதை என்பது மனிதவியாலான உண்ர்ச்சிக்
கூறுகளை உருக விடும் இடமாக இல்லை. மாறாக புனைவை ஒரு அறிவுஜீவித வினைபுரிவாக அவர் உருமாற்றுகிறார்.
இந்த அம்சம்தான் மனிதமையம் விலகிய தன்மையிலுமான புதிய கதை கூறலையும் புனைவுச்சாத்தியங்களையும் தமிழில் எடுத்துவைக்கிறது.
போர்ஹே கதைகளில் எல்லாமே ஓர் அறிஜீவித விளையாட்டாக/ வேடிக்கையாக உருமாறும் இடமுண்டு.
புனைவு வாழ்வியலை பிழிந்தளிக்க அல்ல அது அடிப்படையில்
வாழ்விலிருந்து தன்னை சேய்மைபடுத்தி வைக்கும் ஒரு விளையாட்டு என்ற ஒரு அம்சம்.
மேற்கண்டவற்றின் தொடர்பில் முன்னரே குறிப்பிட்டதுபோல
அறிவார்த்தம் , கனவுநிலை, சுதந்திரம், பரிசோதனை போன்ற அம்சங்கள் தீவிரம்கொண்டு இயங்கும் புனைவுகள் ’வலை’ மற்றும்
‘ பிரமிடுகளை அளக்கும் தவளை’. புனைவை சுதந்திரத்தின் எல்லையற்ற வெளியாக சாத்தியப்படுத்தியிருக்கும்
கதைகள். மிகுபுனைவு, கனவுத்தன்மை, தொன்ம உருவாக்கம்,
தத்துவத் தர்க்கம், மீபொருண்மை போன்றவற்றை வைத்துக்கொண்டு சுதந்திரமாக விளையாடப்பட்ட இடமாக
‘வலை’ கதை இருக்கிறது. இக்கதையின் ஈர்ப்புமையத்தில் வைக்கப்பட்டிருப்பது ’வலை’ என்ற படிமம். வெளியேறமுடியாத
தனித்துவமான விதித்தொகுதிகளும் ஒழுங்குகளாலும் பின்னப்பட்ட வெவ்வேறு பிரபஞ்சங்கள் ஒன்றுள்
ஒன்று வைக்கப்பட்ட ஒரு மாபுனைவின் பின்னலாக அந்தப் பெருவலை இருக்கிறது. அது மொத்தமும்
ஒரு சிறுமி வாசிக்கும் புத்தகத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது. வலையிலிருந்து தப்பித்தல்தான் ஆதார உட்கிடையாக
உள்ளது.
வெளியேறல்
அல்லது ’எட்ர்னிடி’ நோக்கிய ஒரு அலைக்கழிப்பு என்பது இக்கதைக்குள் ஒரு தத்துவத் தளம் போல இருப்பினும்
அது ஒரு புனைவு பாவனையாகவே வைக்கப்பட்டுள்ளது.
புனைவு புனைவின் விளையாட்டுக்காகவே
என்பது போல இக்கதை ஒரு சாகசமாகவும்
ஃபேண்டசியாகவும் நிகழ்கிறது. புனைவுருவாக்கத்தின் நுண்ணறிவுச் செயலும் , பொறியாண்மையும் வீச்சுடன் உள்ள இக்கதையில் புனைவு புனைவின் சாகசத்துக்காகவே
என்ற அம்சம் முக்கியமாகிறது. மிகுபுனைவு, தொன்மவியல், மாயாற்புதம் போன்ற அம்சங்கள் சரளமாக
ஆளப்படும் இக்கதையில் அந்த புனைவியல்புகள் ஒரு சாரமான கலாச்சாரதளம், சமூக அடித்தளம்
என்பதிலிருந்து விலகல் கொண்டவை. அவை நேரடியாகப் பிரதியியலாக மட்டுமே உற்பத்திபெறக்கூடியதாக இருக்கின்றன. (இங்கு ஒரு சிறு ஒப்பிடலுக்காக ) குமார்
அம்பாயிரம் கதைகளில் தொன்மம், வழக்காறுகள், புனைவதீதம் போன்றவை அழுத்தமான ஒரு
பண்பாட்டுத் தளமும், இனக்குழு தொல் வாழ்நிலையின் அறிமுறைகள், கதையாடல்கள் சார்ந்த
ஒரு நவீனத்துவ மறுதலிப்பும் உள்ளீடாகக் கொண்டு
தீவிரமடைகிறது. குமார் அம்பாயிரத்தின் கதைகள் தொல்கதையாடிகளின் உடலுக்குள்ளேயே , புதைபடிவுகளுக்குள்ளேயே
புகுந்து எழுந்தவையாக உள்ளன. அதன் புனைவாடல் கூறுகள் பிரதியியலாக மட்டுமல்லாமல் உள்ளே குருதியும் சாராம்சமும்
கொண்டவை. இந்த இடத்தில்தாதான் பா.பொ கதைகளில்
உள்ள உடல் என்பது ஒரு அறிவிஜீவித உடலாக மட்டும் உள்ளது. வாசிப்பே அதன் நிலம். ஆனால் புனைவு வாழியலிலும் மனித மையத்திலும் தான் செயல்பட
வேண்டுமா , அறிவுஜீவிய பரிசோதனைக்களனாக அதன் வேறுபட்ட சாத்தியங்கள் ? என்ற கேள்வியோடு
இந்த இடத்தைக் கடந்து செல்லலாம்.
ஒன்றில்
ஒன்று ஊடுருவி செல்லும் இணை பிரபஞ்சங்களின் சாத்தியம் நவீன இயற்பியலில் முன்வைக்கப்படும் ஒரு கருத்துரு.
ஆனால் தொல்கதைகள் தொடங்கி போர்ஹேவின் நவீன மாயாற்புதப் புனைவுகள் வரை அது புனைவின் அற்புதக்
கண்களால் எப்போதோ தொடப்பட்டுவிட்ட ஒன்று.
’வலை’ கதையில் வலை படிமத்தின் வழியாக அந்த மீபௌதீக தளம் விளையாடப்படுகிறது.
காலத்தை
விதியெனப் பின்னும் சிலந்திவலையின் மையத்தில் சிக்குண்ட ஓர் உயர் இருப்பு, அதன் கைகளில் உள்ள கண்ணடிக் குடுவைக்குள் சுழலும்
வேறொரு பிரபஞ்சம். அதில் விண்மீன் கூட்டங்களிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து மீனாக உருமாறிய, நட்சத்திரங்களுக்கும் மீன்களுக்குமிடையிலான சமன்பாட்டின்
வழி தன் பிரபஞ்ச ஒழுங்கைப் பேணவேண்டிய வலைக்குள்ளான ஜெசியா, எண்ணிக்கை ஒழுங்கு மீறி பிறந்துவிட்ட புலியை நீக்குவதற்கான புதிருக்குள் சிக்கிய புலிவுலகில் அரசன், அந்தரவெளியிலும் பள்ளங்களைத்
தேடிக்கொண்டிருக்கும் குருடன், மொத்தப் புனைவையும் உள்ளடக்கிய மறைந்து தோன்றும் புத்தகத்துக்குள் சிக்குண்ட சிறுமி என வலைகளில்
வலையாக, கதைகளின் கதையாக விரிகிறது ‘வலை’. இந்த இணை உலகுகள் ஒன்றை ஒன்று தொட்டுச் செல்லும்
இடங்கள் புனைவுநுட்பம் மிக்கவை. வலைதான், விதிக்கூட்டங்களின் பிரபஞ்சாமாக, இருப்பாக
இருக்கிறது. கண்டுபிடிப்பும் வெளியேறலும்தான் வேட்கையாக இருக்கிறது.
போர்ஹேவின்
சதுரங்கம் கவிதையை ‘வலை’ கதைக்கு அருகில் வைத்து வாசிக்கலாம். அதன் ஒரு பகுதி மட்டும்
இங்கே,
நொய்ந்த அரசன், குறுக்குச் சால் அமைச்சன்,
கொலைவெறி
அரசி , செங்குத்து
யானை,
தந்திர வீரன்
கருப்பு வெள்ளை
நிலவெளியில்
ஆயுதங்கள் ஏந்தி
அவை சமரிடுகின்றன.
யாரோ ஆடுபவரின்
விரல்களில்
தங்கள் விதிகள் சுழல்வதையோ
தங்கள் கனவை, களத்தின் வியூகங்களை
கண்டிப்பான விதிகள் சுழற்றுவதையோ அவை அறிவதில்லை.
ஆடுவோனும்
ஒரு கைதியே ( இது ஹோமரின் சொற்கள்)
கருப்பு
இரவுகளும் வெள்ளைப் பகல்களும்
மாறி
மாறி நகர்வுறும்
ஒரு
மா சதுரங்கத்தின் காய்தான் அவனும்.
கடவுள்
அவனை நகர்த்த , களத்தின் காய்களை அவன் நகர்த்த
கடவுளின்
அப்பால் நின்று நகர்த்துவது எந்தக் கடவுளரோ
இந்த
காலமும் பாழும், துயிலும் பெருந்துயருமெனச்
சுற்றும்
வட்டங்களின்
மா வியூகத்தை
..
’பிரமிடுகளை
அளக்கும் தவளை’ அண்மைத் தமிழ்க் கதை வெளியில் நிகழ்ந்துள்ள ஓர் அதி உயர் புனைவு. புனைவின்
அசாதாரணமான அறிதல்வழிகளை அது திறந்துசெல்கிறது. அதன் கதைநிலமே ஒரு சொல்வெளியாகி இயங்குகிறது. சரித்திர குறிப்புகள், தத்துவக் கூறுகள்
, ஞாபகங்கள், நூல்கள் எனப் பல்வேறு இணைப்பிரதிகளினூடாக மயங்கிச் செல்லும் அறிவார்த்தத்தின் மூர்ச்சிக்கும் சாகசப் பயணமாக அதன் புனைவாடல் இருக்கிறது. இதன் மொழி கதைகூறலின் விவரணை மொழி அல்ல. கவிதையின் அறிநிலைகளை நெருங்கிச் செல்லும் கண்டுபிடிப்பின்
உக்கிரமே அதன் மொழியாகி நிரம்புகிறது.
பூமியில்
காலாதீதமாக வாழ்ந்துவரும் நெல்லி என்ற சிறிய
தவளையும் , ஓர் ’உருமாறி’யாகிய ஹேடஸ் என்ற
வேற்றுக்கோள்( சிரியஸ்) உயிரியும் இணைந்து சரித்திரத்தின் நிழல்வெளிக்குள் மேற்கொள்ளும் அளந்தறிதலும் விசாரனையுமான பயணமே ‘பிரமிடுகளை
அளக்கும் தவளையாக’ இருக்கிறது.
இந்தக்
கதை தனக்கு வெளியே பல்வேறு பிரதிகளுடன் ஊடாடும் , சரித்திரப் புலங்கள், தத்துவம், நூல்கள்
எனப் பலவற்றுடன் ஊடிழைவுகொள்ளும் ஒரு பிரதியியல் நிலமாக இயங்குகிறது. வோல்டேரின் ‘மைக்ரோமெகாஸ்’- மேரி ஷெல்லியின் ‘ஃபிரன்கன்ஸ்டைன்’-
விட்கன்ஸ்டென் தர்க்கம் - தாமஸ் அகின்னாசின்
இறையியல் - ஷாஹி ஹம்மம் என்னும் பாகிஸ்தானின்
பாரசீக குளியல் மண்டபம் - துருக்கியருக்கும்
ருஷ்யர்களுக்குமிடையிலான டானூப் யுத்தம்- பனாரஸ் வரிக்கலகம்- கிரேக்க தொன்மவியல் - பாரோ ஸ்னெப்ரூவின் பிரமிடுகள் -கில்காமேஷ் காவியம்
- சுமேரியக் களிமண் படிவில் கிடைக்கப்பெறும் மானுடத்தின் முதல் மொழிச்சுவடாகிய குஷிம்
என்ற பெயர் - பாக்தாதின் அலாமுத் கோட்டை- ஹசன் இ சப்பா – அவரது வாசிப்பு -
இரு உலகப் போர்கள், நாஜிக்களீன் லப்ட்வஃபேயி விமானங்கள் - ராபர்ட் ஓபன்ஹெய்மரின் ட்ரினிடி அணு சோதனை-மன்ஹாட்டன்
திட்டம் - ஹிரோஷிமா, நாகாசக்கி பேரழிவுகள் ---என கால இடம் மயங்கிய சரித்திர மற்றும் அறிவுக்
களங்களுடன் நெல்லியும் ஹேடசும் மேற்கொள்ளும்
தீவிரமான தத்துவ, அறிவார்த்த பரிசீலனைகள்,
உரையாடல்களின் ஒரு பெரும் அறிவுஜீவிதப் பயணமாக
இருக்கிறது. இந்தக் கதைக்குள் வைக்கப்பட்டுள்ள இத்தனை ஊடிழைவுகளையும் அதன் மூலத்தைத் தேடி அறிந்து தொடர்புறுத்தி
வாசிக்கையில் அவை புனைவை அசாதராணமான அறிவுச்சவாலுக்கான விளையாட்டுக்களமாக மாற்றுகிறது.
தவளை ’நெல்லி’ ஓயாமல் ஏறியும் இறங்கியும் அளக்கும் அந்த பிரம்மாண்ட முக்கோணங்கள் என்பது , மானுட அறிதல்களின் எல்லைகள்,
தான் கட்டுண்ட ஈர்மப்புலத்திலிருந்து எழும்ப மானுடம் கொண்ட ஓயாத தாவல்கள், மரணத்திலிருந்து
தப்ப எத்தனித்த இடத்தில் மானுடம் வைத்த கலையும்
தத்துவமும், , மொத்த மொழி நினைவு, அதன் கொள்கலன்களாகிய நூல்கள், உலகின் அனைத்து புத்தகங்களின் புத்தகாமகும்
அந்த மீபுத்தகம் என்பதாக மொத்த மனிதஅறிதலின் படிமமாகிறது.
இதில் வரும் நெல்லி ஒரு பாலினமற்ற தவளை என்பது குறிபிடத்தக்கது.
இன உற்பத்தியும் , இரையெடுத்தலுமான உயிரியல் எல்லைக்கு அப்பால் மானுடம் கொண்ட எத்தனங்கள்,
கனவுகளாகிய கலையின் உணர்கொம்புதான் ’நெல்லி’ யாகி மொத்த
மானுடத்தையும் அளக்கிறது.
வோல்டேரின்
’மைக்ரொமெகாஸ்’ என்ற அறிவியல்மெய்ம்மைப் புனைவை ஓர் இணைபிரதியாகத் தொட்டு வேறொரு புனைவுக்களத்தை
இது உருவாக்குகிறது. மனிதமையப் பிரபஞ்சப்
பார்வை மீதும் , ஐரோப்பிய அறிவாண்மை, முற்றுண்மைவாதம் மீதுமான
பரிசீலனையாக , மனிதனை, மனிதவயப் புவியை, மனிதனுக்கு அப்பாலான அயற்புல கண்காளால் வாசிக்கும்
சாத்தியத்துக்குள் செல்கிறது வால்டேரின் ’மைக்ரோமெகாஸ்’
. இக்கதையில் எளிதில் புலப்படாத
நுண்ணுயிரியாய் மனிதன் தனக்கு தோன்றம்தரும் பிரம்மாண்டமான வேற்றுலகப் பேருயிரிகளுக்கும்
மனிதனுக்குமிடையிலான தத்துவார்த்தச் சந்திப்பைப் புனைகிறார் வோல்டேர்.
மறைந்த
இயற்பியல்மேதை ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு நேர்காணலில் ” ஒரு முடிவின்மைக்குள் நாம் வைக்கப்பட்டிருக்கிறோம்
என்பதால் மனிதனை விட நுண்ணறிவு, உயர் பிரக்ஞை
மிக்க கணக்கற்ற உயிர்கள் இப்பிரபஞ்சத்தின் தொலைவுகளில் இருக்க சாத்தியமுண்டு , அவை
பூமிக்கு வர நேர்ந்தால், மனிதர்கள் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணூயிர்களை எப்படிக் பார்க்கிறார்களோ
அது போல அவற்றுக்கு மனிதர்கள் தேவையற்ற, அழிக்கப்படவேண்டிய
நுண்கிருமித் தொகுதியாகத் தோன்றக்கூடும் “ என்றார். மனிதமையப் பிரபஞ்சப் பார்வை திகைத்து
நிற்கும் அந்த இடத்தை 1752 இலேயே புனைவின் அசாதரணம் வழி நிகழ்த்திப் பார்க்கிறார் வால்டேர்.
ஆனால் வால்டேரின் கதையில் , பூமியை விட 24000 மடங்கு அகன்ற சுற்றளவும் 39 அடிப்படை நிறங்களும்
300 வஸ்து நிலைகளும் கொண்ட சிரியஸ் மாக்கோளைச் சேர்ந்த ’மைக்ரோமெகாஸ்’ என்ற பேருயிர்
, புவியின் பெருங்கடல்களில் தன் கணுக்கால்கள்
மட்டுமே மூழ்கும் 1,20000 அடி உயரமும் 1000 புலன்களும் கொண்ட ’மைக்ரொமெகாஸ்’ என்னும்
பேரறிவாளர் , தன் சனிகோள் நண்பருடன் நுண்ணிதும்
நுண்ணிதான மனிதப் பூச்சிகளைச்( தத்துவாதிகளின் குழு ஒன்றை) சந்திக்கும்போது கொள்ளும்
கரிசனமும் அன்பும் , மானுடத்தை சரிநிகராகக் கொண்டு நிகழ்த்தும் தத்துவப் பரிவர்த்தனையும்
ஓர் அபாரமான இடம். நுண்மையும் பிரம்மாண்டமும் அறிவின் சமதளத்தின் நின்று விவாதிக்கும்
இடம். ஒரு தத்துவவாதி ‘மனிதனுக்கு தேனீக்கள் எப்படியோ அப்படி தேனீக்களுக்கு தோன்றக்கூடிய
உயிரினங்களும் பல உண்டு. மனிதனுக்கு
மைக்ரோமெகாஸ் எப்படியோ அப்படி மைக்ரொமெகாசுக்குத் தோன்றுக்கூடிய பிரமாண்ட உயிர்களும் அவைகளுக்கும் அப்பாலான சாத்தியங்களும் இந்த முடிவின்மைக்குள் உண்டு என வாதிடலும், ஒரு
தாமஸ் அக்கினாஸ்வாதி இந்த பிரபஞ்சமே மனிதனுக்காகப் படைக்கப்பட்டதுதான் எனும்போது மைக்ரோமெகாசின் அடக்கமுடியாத வெடிச்சிரிப்பும் குறிப்பிடத்தக்க
இடம். மனிதப் பூச்சிகள் மீது இரக்கமும் அன்பும் கொண்ட மைக்ரோமெகாஸ் மனிதர்களுக்காகப்
பரிசளித்துச் செல்லும் அந்த ’எல்லாவாறினதுமான’
மாநூல் பாரீஸ் அறிவியல் கழகத்தில் திறக்கப்படுகையில் அதன் வெறுமையான பக்கங்களில் ஏதொன்றும்
புலப்படுவதில்லை. பா.பொ. கதையில் பிரமிடுகளை தவளை அளப்பது என்பது மைக்ரோமெகாஸின் அந்த
அனைத்துமான ’ஏதிலி’ நூலைச் சென்றடையும் வழியாகவும்
இருக்கிறது.
பா.பொ.வின் ‘பிரமிடுகளை
அளக்கும் தவளை’ , வால்டேரின் ’மைக்ரோமெகாஸ்’
கதைக்குள் புகுந்து வெளியேறி வருகிறது. சிரியஸ்
கோளில் தான் எழுதிய ஒரு நூலுக்காக 800 ஆண்டுகள்
நீதிமன்றப் படிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மைக்ரோமெகாஸ் தன்னை விட மிகச் சிறிதான சனிக்கோள்
நண்பருடன் பூமியில் பால்டிக் கடலோரம் வந்திறங்குகையில், அவருக்கே தெரியாமல் அவருடன் பூமிக்கு வந்துவிடுவதாக
ஓரு சிரியஸ்கோள் உயிரியை( ஹேடஸ்) உருவாக்கி
தன் புனைவுக்குள் இறக்கி விடுகிறார் பா.பொ.
பலவாக உருமாறும் இயல்புடைய இந்த ஹேடசுக்கு நெல்லிதான்
மொழி என்னும் பூமியின் வினோத வஸ்துவையும் அதன் தூல வடிவாகிய புத்தகத்தையும் அறிமுகம்
செய்கிறது. ஹேடஸ் இலையென
உருமாறி பருவங்களை அளக்கிறது. பிறப்பும் மரணங்களுக்குமான சுழற்சிகளை அறிகிறது. ஒரு
குதிரையாக உருமாறி போரும் உழைப்புமான மனித உழல்வுவை அறிகிறது, பாலைவனப் பாம்பாகி ஹேடஸ்
என்ற தன்பெயருக்கு ஏற்ப பூமிக்குள் புதைந்து கிடக்கிறது, ஒரு சிறு புள்ளியாகி புத்தகத்தில் இறங்கி சொற்களின் மீதே ஊர்ந்து மொழியை நுகர்கிறது. இறுதியில் ஒரு தவளையாக உருமாறி மெகாஸின்
அந்த ’அனைத்து நூல்களின்’ நூலை அளக்கிறது.
இந்த
விசித்திர உயிரிக்கு சீயஸ், போசிடியோன்,
ஹேடஸ் சகோதர்களாகிய கிரேக்கத் தொன்மம் சார்ந்து
பெயரளிக்கிறார் பா.பொ. கிரேக்க தொன்மத்தில் சீயஸ் வானுலக வேந்தனாக, போசிடியோன் கடல்களின்
வேந்தனாக, ஹேடஸ் பாதாளங்களின் வேந்தனாக வருகிறான். நெல்லி பிரமிடில் தன் கால் அச்சிலிருந்து உருப்பெற்று
எழும் இந்த வேற்றுக்கோள் உயிரிக்கு ’ஹேடஸ்’ எனப் பெயரளிக்கிறது. பூமி எரியத்தொடங்கும்போது ஹேடஸ் எல்லா நூல்களையும் தன் ஆளுகைகக்கு உடப்பட்ட
மண்ணுக்கு அடியில்தான் பதுக்கிவைக்கிறது.
பூமி தன் முடிவுக்கு வரும்போது, அண்டத்திற்குத் தப்பிச்
செல்லும் நெல்லியும் ஹேடசும் பூமியின் பொருளாக எடுத்துச் செல்வது புத்தகங்கள்தான்.
இறுதியில் சிரியஸ்கோளுக்குத் திரும்பிய பின்னர் மைக்ரொமெகாஸ் ஹேடசுக்கு அளிக்கும் பரிசு ஒரு பிரம்மாண்டமான புத்தகம். அது மைக்ரோமெகாசின்
உயரத்திற்கு இணையாக நீண்டு செல்லும் புத்தகம்.
அது பூமியின் அனைத்து மொழிகளின் அனைத்து புத்தகங்களும் அடங்கிய ஒரு மெட்டா புத்தகம்.
வோல்டேரின் ‘ஏதிலி’
புத்தகத்தையும், போர்ஹேவின் முடிவிலியான மணல்
புத்தகத்தையும் , பாபெல் நூலகத்தையும் நினைவுறுத்தும் மைக்ரோமெகாசின் இந்த எல்லா புத்தகங்களின் மாபுத்தகம்தான் தவளையால் அளக்கப்பட்ட பிரமிடாகிறது. மானுட அறிதல்களின்
முகடுகள் , தன் உயிரியல் வரையறைக்கு அப்பால் மனிதன் எம்பிய அறிதல்கள், கலை, கனவு, தத்துவம்,
மொழி ஆகிய அவனது அனைத்து சாத்தியங்களும் பிரமிடுகளாகி புவியின் விசைக்கு எதிராக அண்டத்தை
ஊடுருவுகின்றன. மனிதன் உள்ளிட்ட இந்த மொத்த பிரபஞ்சத்தையும், ’கதை’ என்னும் தவளை காலாதீதமாக அளந்துகொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment