Monday, March 30, 2020

சிறுபத்திரிக்கைகளின் ‘சிறு’ என்னும் சாரம்சம். மணல்வீடு இதழின் அஃ பரந்தாமன் விருது பெறும் நவீன விருட்சம்.


*மணல்வீடு இதழில் வெளியான கட்டுரை
                                                                                                                                                            சிறுபத்திரிக்கை என்பதன் உள்ளுயிர் வேறொரு சாரத்திலும் வேரொரு மரபிலும் இருந்து வருகிறது. அதன் ’சிறு’ என்ற அடையாளம் குறைந்த அச்சிடல்,  சிறிய  வாசகத்தளம் என்ற குறிப்பில் இல்லை. இருளும் தனிமையும் கொண்டு , ஒரு கருநிலை இயக்கமாக, ‘பெரிது’ என்பது சார்ந்து இயங்கும் அனைத்து அதிகாரங்களுக்கும் , பெரிது என்பது சார்ந்த அனைத்து கேளிக்கை - சந்தை மதிப்புகளுக்கும்  பொதுமைப்படுத்தல்களுகும் எதிரான புள்ளியில் தன் நியாயத்தை இருப்பை முன்னிறுத்தியே தன் ‘சிறு’ என்ற பொருண்மையை அது தக்கவைத்தது. சாராம்ச நீக்கம் செய்து மனிதனை ஒரு காலிக்கூடாக்கி அவனை  நுகர்வோன் என்னும் ஒற்றைப் பரிமாணத்தில்  நிறுத்தியிருக்கும், வணிக - சந்தை  எழுத்துக்கும்,  படைப்பூக்கச் சாளரங்கள் அற்ற கல்விப் புல இறுகிய சட்டகங்களுக்கும்  எதிர்நிலையான ஓர் கலை/அறிவு  இயக்கம் எனச் சொல்லித்தான் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் விசைகொண்டது. இங்கு  சிற்றிதழ்  எழுத்து கனவு, தீவிரத்துவம்,  பிடிவாதம், விளிம்புநிலை மூர்க்கம் , வேறுபடுதல் முதலிய குண இலட்சணங்களுடன்  கண்டுபிடிப்பு, , மெய்யறிதல், சமகால பாடுகள், புதிய யதார்த்தங்கள் என்ற உள்ளீடுகளுடன்  ‘ நவீன இலக்கியம்’  ’தீவிர இலக்கியம்’ ‘ மாற்று  இலக்கியம்’ என்றெல்லாம் முன்வைக்கப்பட்டது. புதுமைப்பித்தன் , . நா. சு. , சி.சு.செல்லப்பா என ஒரு தடத்தின் நவீனத்துவமாகவும்,  தொ.மு.சி, கைலாசபதி, வானமாமலை. கோ. கேசவன் என நீளும் மார்க்சிய பார்மபரியத்தின் ’முற்போக்கு இலக்கியம்’ என்ற சொல்லாடலாகவும், இவ்விரண்டினிடையான முரண்விசை இயக்கத்தின் நீட்சியில், என்பதுகள் தொண்ணூறுகளில் இவற்றிடையான நெகிழ்தலும், அதனூடாக வெடித்து திறந்த 90 களின் புதிய பலநூறு பாதைகளுமாக, ஈராயிரத்துக்குப் பிறகான சந்தை முற்றுகையும் வெகுசன - தீவிர என்ற கோடழிதலும், சிற்றிதழ்கள் தம் பழைய தார்மீகங்களில் இயங்கவியலா புதிய  நெருக்கடிகளும் , வரலாறும் உள்ளீடுகளும் காலியாகி  திணைமயங்கிய நுகர்பொருள்களாவும், பொத்தாம்பொதுவான தன்மையும் களைப்படைதலுமான ஒரு கலங்கிய பரப்பிலும் படைப்பூக்கத்தின் முடிவற்ற அறிதல்களின் தீவிரத்தவத்தை உயிர்ப்பிக்கும் உதிரியடைந்த எழுது விரல்களை கண்டடையும் வேட்கை கொண்டாகவேண்டிய விளிம்பில் சிற்றிதழ்கள் இன்று தம்மை வந்து நிறுத்தியுள்ளன.   இந்த நவீன எழுத்தியக்கத்தின் ஊடும்பாவுமாக வெட்டிச் செல்லும் பல்வேறு போக்குகளும் மொழித் தடங்களும் , இன்றைய குழப்படிகளுக்கும்  இடையேயான ஒரு நெடிய பாதையில்  ‘விருட்சம்’ இதழ்  தனது அசாதாரணமான நிதானத்துடனும், பற்றிக்கொள்ளலின் பிடிவாதத்துடனும் தன் தொடர்ந்த பயணத்துடன் முப்பது ஆண்டுகள் என்ற பெரும் பரப்பைக் கடந்தும் நீண்டு வருகிறது.
 ஒரு தனிப்பட்ட  கருத்தியல் குழு ,  ஒரு குறிப்பிட்ட நோக்கம், ஒரு பிரத்யேக குணம் , தனதேயான தனித்துவம்  ஆகியவை சிற்றிதழின் அடிப்படைகள். சிற்றிதழின் பல்வேறுபட்ட உள்மரபுகளின் வரலாறுகளுக்குள் விருட்சம் இதழ்  .நா.சு., சி.சு.செல்லப்பா பின்னர் வெங்கட்சாமிநாதன் வழியான ஒரு  நவீனத்துவ மரபின் ஒரு  நீட்சியிலிருந்தே உருவாகிறது.  அதில்  சிறுபத்திரிக்கை சூழலின் பல்வேறுபட்ட  ஊடாட்டமான ஓட்டங்கள்  பிரதிபலித்தாலும், தீவிரமாக வேறுபடும் எழுத்தாளர்கள்   அருகருகான பக்கங்களில் உரசிச் சென்றாலும் அந்த இதழ்களின் மொத்தப் பரப்புக்குள் ஓடும் ஆசிரிய மனம் என்பது க. ந.சு - செல்லப்பா மரபின்  நிழலிலேயே இருக்கிறது. முன்னர் குறிப்பிட்ட சிற்றிதழ் வரலாறு, மரபு அதன்  உள்ளர்ந்த இயல்புகளான  பிரத்யேகத் தன்மை,  பிடிவாதம், தீவிரத்துவம் முதலிய மதிப்புகளின் இலட்சிய குணங்களில்  ’நவீன விருட்சம் ’ ஒரு பெரும் காலப் பரப்புக்குள்  ‘சிற்றிதழின்’ தீவிர அகஉயிர் சுழலும் இடமாகவே இருந்துள்ளது.
 எண்பதுகள் தொண்ணூறுகளில் கனன்ற ஒரு புதிய மொழியை , புதிய உணர்திறன்களை  விருட்சம் தன்னூடாக  குறிப்பாக கவிதைகளின் வழி  சாட்சிப்படுத்தியுள்ளது ஒரு முக்கிய இடம்.  அதில் துடித்த அன்றின் பிரக்ஞையும் அதிர்வுகளும் ஓர் இசைக்குறிப்புகள் போல இன்றும் அதன் பழுப்பேறிய பக்கங்களில் உயிர்ப்படைகின்றன. இன்று பெரும் ஆகிருதிகளாக கொண்டாடப்படும் கவிஞர்கள், இன்றைய கவிதை விரிந்து செல்லும் முடிவற்ற பிரதேசங்களுக்கு ஆதாரமான நீரூற்றுகளை எழுப்பிய முன்னோடிகள்  பலரும் விருட்சம் என்னும் சிறிய ஏட்டில்  அருகருகாக இருக்கிறார்கள்...  வினோதமும்  தினசரியும் ஞானமும் விளையாட்டுமான தேவதச்சன்,  இயற்கையும் மெய்யறிதலும்  மனவெழுச்சிகளுமான தேவதேவன்,  சுயத்தின் காலித்தன்மையும் தனிமையும் பிளவுமான நகுலன்,  அங்கதமும்  மரபோசையும் புனைவார்த்தமுமான ஞானக்கூத்தன், மண்ணும் சொல்லுமான பழமலய், இருண்ட தேசங்களின் படிமங்களும்  அரசியலுமான இந்திரன், அறிவார்த்தம் பொறியாண்மை, கனவியல்பும், மொழிக்கூட்டமும் ஆன பிரம்மராஜன் , கொந்தளிப்பும் பிரபஞ்ச அறிதல்களும் மானுடமுமான பிரமிள் என தமிழ்க்கவிதையில் மாறுபட்ட வெவ்வேறு பிரபஞ்சங்களை  வெவ்வேறு நிறங்களை வரைந்தவர்களை விருட்சம் தன் தொடக்க இதழ்களிலேயே கண்டடைந்துள்ளது. 90களில் கிளர்ந்து இன்று மையமற்ற பெருவெளியாகியிருக்கும் இன்றைய கவிதைமொழியின் உள்விதைகளான இந்த பெரும் முன்னோடிகள் விருட்சத்தின் பதினாறே பக்கங்களிலான ஆரம்ப இதழ்களில் சாதாரணமாக இடம்பெற்றிருக்கிறார்கள். அதன் தீவிரத்துவத்தை இன்றின் கதியிலிருந்துதான் உணரமுடியும். இன்று முத்திரையிடப்பட்ட பேரங்காடிப்  பண்டங்கள் போல் வளமும் வண்ணமும் ஏறிய ’சிற்றிதழ்களை’ விடவும் 16 பக்கங்களில் அன்றைய பிரக்ஞையில் ஒரு கூரிய வாள் போல் இறங்கிய நவீனவிருட்சம் வீர்யம் மிக்கது. சிறிது என்பதன் தார்மீகமும் போக்கிரிக்குணமும் அதில்  உள்ளது.
  தீவிர தமிழ்ச் சிறுபத்திரிக்கைகள், எப்போதும், எதிர்காலவியலான ஒரு மூட்டவெளி நோக்கி அம்பெய்துபவை.  எதிர்காலவியலான மொழியை, நாளைக்கான சொற்களை,  நாளைக்கான கனிகளை எம்பித் தொடுபவை.  இன்று  பொதுவெளி நோக்கி ஊடுருவி வந்திருக்கும்  நவீன அதிர்வேறிய ஒரு தமிழை நேற்றைய    ’நவீன விருட்சம்’ உள்ளிட்ட சிற்றிதழ்தளங்களே உருவாக்கின.  எண்பதுகள் தொண்ணூறுகளின் அறிவுக் களங்களுக்கும் அதன் தீவிர மொழிகதிக்குகும்  ஒப்புக் கொடுக்கவும்  அதனூடாகப் பயணமும் சாகசமும்  செய்திடவுமான துணிவும் வேட்கையும் உண்மையும்  அன்றைய விருட்சம் இதழ்கள் கொண்டிருந்துள்ளன.
விருட்சத்தின் சிற்றிதழ் சார்ந்த  குரலை, மனச்சான்றை  அதன் தொடக்க இதழ்களிலேயே  உறுதியுடன் காணமுடிகிறது.  இரண்டாவது இதழ், முகப்பில் ஆதிமூலத்தின் க.நா.சு.  கோட்டோவியம் தாங்கி வருகிறது. இமைதாழ்ந்த ஒரு தீவரப்பிரக்ஞையின்  ரேகைகளே அங்கு   . நா. சு என்னும் கோடுகளாகியுள்ளன. ஆதிமூலத்தின் தீற்றலில் அது ஒரு தனிமனிதனின் முகஉருச்சித்திரமாக அல்ல. க. .சு என்ற ஒரு சாராமசத்தின் , இயக்கத்தின் , ஒரு சிந்தனை வடிவத்தின்,    தீவிரத்துவமே அங்கு கோட்டுருக்களாகியுள்ளன. பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சமூர்த்தி தொடங்கி நவீன எழுத்தின் பல்வேறு ஆகிருதிகளை வார்த்த ஆதிமூலத்தின் ஒவ்வொரு கோட்டுமொழியிலும் சிற்றிதழ் எழுத்தாளனின் மூர்க்கமும் , எதிர்ப்பும் , சுய குலைவும், தீவிரமும், தனிமையுமே  கோட்டுப்படிமங்களாக உருமாறியுள்ளன.  
விருட்சம் 2 ஆவது இதழில்   . நா.சு மறைவு குறித்து ஞானக்கூத்தன் எழுதிய அஞ்சலிக் கட்டுரை ஒரு தலையங்கம் போலவும் வாசிக்கத் தகுதி படைத்ததே. சிற்றிதழ்மனம், அதன் அகவுயிர், பெரிது சார்ந்த எந்த சமூக பிம்பங்களையும் கேலி செய்தும் எதிர்த்தும்  நிமிர்ந்து செல்லும் அதன் அழகும் சுயமாண்புமே  அதில் முன்வைக்கப்பட்டுள்ளது.  . நாசு., செல்லப்பா வழி பெற்றுக்கொண்ட நவீனத்துவத்தின் பரப்பெல்லைகளே  நவீன விருட்சம் நிலைகொள்ளும் இடம். மெல்ல,  விருட்சத்தில் புனைவு மொழியும் விமர்சன மொழியும் அடுத்தடுத்த இதழ்ளில் தன்னியல்பான கதியில் வந்திணைகின்றன. கோபிகிருஷ்ணனின் தூயோன் கதை தொடங்கி புனைவெழுத்தில் பலவிதமான தடங்களும்  அதனூடாகச் சென்றுள்ளன.  நண்பனின் தாய் நோயுற்றிருக்கிறாள். அங்கு ஒன்றமுடியாது தன் விருப்பங்களே முக்கியமாக குடித்துவிட்டு வருபவன்தான் தூயோன். தான் உள்ளே யாராக இருக்கிறானோ அப்படியே வெளியேயும் நடந்துகொள்கிறான். பாசாங்கான சரித்தன்மைகளை அவனால் பேணமுடிவதில்லை. நன்மை-தீமை என்ற மொராலிட்டிக்கு- நீதியியலுக்கு  வெளியே இருப்பவன்தான் தூயோன். இன்று  மிகைநவற்சி அன்பும் நீதியியலும் உருகிவழியும் இடைநிலை ’யதார்த்த’ எழுத்துக் குவியல்களின்முன் ‘தூயோனை’ நிறுத்த வேண்டும். அதன் காத்திரமும் உண்மையும் இன்றைய அரசியல்சரித்தன்மைகளிலிருந்து கையாளவேமுடியாத  ஒரு திறந்த கத்தி போல உள்ளது.
ஆரம்ப இதழ்களில் வந்த ஆத்மாநாம்  குறித்த கட்டுரை , பழமலயின் சனங்களின் கதை குறித்த மத்ப்புரை, ஜெயமோகனின் ஆற்றூர் ரவிவர்மா - சுரா இடையான கவிதை விவாதம் குறித்த பதிவு, அடுத்த இதழில் ரவிவர்மாவின் மறுப்புரை, நகுலனின் தன் நில்வாபோ கவிதை குறித்த சுய வாசிப்பை பகிரும் அரிய ஒரு  குறிப்பு,  ரா.ஸ்ரீனிவாசனின் கவிதை வடிவம் குறித்த தொடர் பதிவுகள் எல்லாம் எண்பதுகள் இறுதியில் மாறிக்கொண்டிருக்கும் ஒரு புதிய காலத்தின் சுழல்வை முற்கூரும் முக்கியச் சுவடுகள். குற்றாலம் கவிதைக் கூட்டம் குறித்த ஞானியின் பதிவு அமைப்பியல் குறித்த மென்பகடி கொண்டது. செவ்விலக்கியங்கள் மீதான கட்டுடைப்பையும்  நவீன கவிதையின் மீதான பிரதியியலான் தொழில்நுட்ப பிரித்துப் போடல்களையும் அவர் தன் சந்தேகங்கள் , அசௌகரியங்களோடு புதிய வரவுகளை அனுமதித்துப் போகிறார். சிற்றிதழ்கள் எப்படி கருத்துகளின் மோதுகளமாக காலத்தின் ஒரு நிகழ்தளமாக, இருந்துள்ளது என்பதும் இன்று ’ஏதும் நிகழ்வில்லை ’ என்னும் வெறும் உற்பத்திக் கேந்திரமாக  அது  உருமாறியிருக்கும் இடமும் எதிர்நிறுத்தி விருட்சத்தின்  அழுத்தமான இடம் உணரப்படுகிறது.
அதே நேரம் 90 களில் பெரும் உரையாடலும் விமர்சன விவாதங்களாகவும் கொதிநிலையடைகிறது சிற்றிதழ்வெளி. நிறுனவவாத மார்க்சியத்துக்கு அப்பாலன புதிய அறிவுக்களங்கள்,  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட நூறு அடையாளங்கள்  வெவ்வேறு வரலாறுகளின் புதிய விரல்களின் எழுத்துப் பிரவேசம்,   படைப்பை பிரதியாக்கி அதன் பொறியாண்மையை  உரையாடத் தொடங்கிய  அமைப்பியல் , ஒற்றைத் தன்மையினிடத்தில் பன்மையும், விளையாட்டும் கொண்டுவந்த பின் நவீன பேச்சுகள்,   . .சு, செல்லப்பா, வெ.சா வின் நவீனத்துவ எல்லைகளை கடந்து வந்த உடைப்புகள், படைப்புத் தளத்தில் லத்தீன் அமெரிக்க ஊக்கங்கள், யதார்த்தவாதம் நெருக்குண்ண்டு புனைவதீமும் , கனவுத் தன்மையும், வழக்காற்றுக்கூறுகளும், மொழி வெளியும் என  நூறு நாவுகளாலான கதைவெளி, அகத்தீவிரம், தத்துவ அழுத்தம் என்னுமிடம் புறவய நெகிழ்வு, உரை நடை, உடலின் சொற்கள், புனைவு மொழி என புதிய துடிப்புகளில் மலர்ந்த கவிதைவெளி; வித்தியாசம், படிகள், மேலும், மீட்சி, கல்குதிரை, லயம், நிகழ், மன ஓசை, நிறப்பிரிகை, கல்குதிரை, புனைகளம் என வெவ்வேறு களங்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளும் முரண்படு கருத்தியல் குழுக்களாலும் ஒன்றையொன்று ஊடியும் மறுத்தும் சமர்புரிந்த  வார்த்தைப் பெருவெளியாகி 90 கள்  வேறுபாடுகளின்  தீவிரத்தால் அதன் வெவ்வேறு குரல்களால் அதிர்வேறிய தசாப்தம். இதனூடாக விருட்சத்தின் பயணம் யாது.  இந்த துடிப்பு மிக்க காலகட்டத்தின் மாறுபட்ட பலவிதமான எழுத்துவிரல்களும் விருட்சத்தின் பக்கங்களில் குறுக்கும் நெடுக்குமாக உரசிச் செல்கின்றன. அருருகாக இடம்பெற்றுள்ளன. எல்லோருக்குமான ஒரு பொதுமேசையாக அது இருந்துள்ளது. முரண்படுபவர்கள் அருகருகாக எழுதியிருக்கிறார்கள். முரன்பட்ட விசைகளால் இழுக்கப்பட்ட  90 களின் ஊடாட்டமான காலத்தினூடே விருட்சம்  பெரிய உருமாற்றங்களன்றி, ஒருவித பொத்தாம் பொதுத்தன்மையும் அசாதாரணமான நிதானமும் கொண்டு மௌனப் பயணமாக கடந்து செல்கிறது. எதிர்வினையாற்றலின் இடத்தில் நிசப்தப் பார்வையாளனாக அது அமைதிகொள்கிறது. நீண்டு வரும் அதன் முப்பதாண்டு  பெரும் பரப்பில்  பெரிய தோலுரிதல்களோ வளர்சிதைவுகளோ அன்றி நிதானனமும் , பொதுத்தன்மையும் பேணுதலாக முன்பே கூறிய  . .சு தொடங்கி வெஙட்சாமி நாதன் வரையான ரசனை-அழகியல்வாத  நவீனத்துவத்தில் ஊன்றியபடியே புதுமையடைந்து வரும் காலத்தினூடாகவும் தன் பழைய நாஸ்டால்ஜியாவின் மன ஊக்கத்தோடும்  அது தொடர்ந்து முன்னகர்ந்து வந்துள்ளது. அழகிய சிங்கரின் அலுவலகம் செல்லும் மத்தியதர வர்க்கத்தின் சலிப்புகள், அதன் அழகியல், ஞானம் என்பதான அவரது கவிதைகள், கதைகள், அவரது பத்தி எழுத்து போன்ற  கட்டுரைகள், பார்வைகள்,  மதிப்பீடுகள், மற்றும்  ஞானக்கூத்தன், வெங்கட்சாமிநாதன், வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், நகுலன் ஆகிய படைப்பாளிகளின் பிரதானமான பங்களிப்புகளே நவீன விருடத்துக்கான தனிக்குனம் , பிரத்தியேகத் தன்மை என்ற ஒன்றை வார்த்துள்ளது.  விருட்சத்தின்  முக்கோணப் பக்கங்களாக அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வெங்க்ட்சாமிநாதன் இருந்திருக்கிறார்கள். மற்றபடி ஒவ்வொரு காலத்தின் வெவ்வேறு அலைகளில் எழுந்துவரும் வேறுபட்ட படைப்பாளிகளும்  நவீன விருட்சத்திற்குள் தடையின்றி பிரவேசிக்கிறார்கள். தொடர்ந்து விருட்சம்  புதியவர்களுக்கும் அறிமுகமற்ற புதிய பயில் விரல்களுக்கும் தன்னைத் திறந்துவைத்து வந்துள்ளது. மனத்தடைகளற்று அதன் இடம் எல்லோருக்குமான களமாக இருந்துள்ளது. கடந்த தசாப்தங்களிலான இணைய சமூக ஊடக வெளிகளில் முகிழ்ந்த எழுத்தாளர்களுக்கும் அது தொடந்து இடமளித்துள்ளது.
   எல்லோரையும் அனுமதித்தலும் தனது அடிப்படைப் பொருண்மையில் நெடிய காலப் பரப்பிலும் ஒருவித மாறாத்  தன்மையும்  அல்லது அதன் காலமற்ற தன்மையைம் விருட்சத்தின் மீதான விமர்சனமாக அன்றி அதன் பிரத்யேக தனிச் சுபாவமாக  நாம் கடந்து செல்லலாம். விருட்சத்தின் இந்த பண்பியல்பை அதன் ஆசிரியரே ஒரு தலையங்கத்தில்  சுட்டிக்காட்டுகிறார்.  விருட்சம் பழைய ஏன்பதுகள் சிற்றிதழ் வரலாற்றின் ஓர் எச்சமாக மூன்று தசாபதங்கள் கடந்தும் தொடர்கிறது.
அதேசமயம்  இன்று சிறுபத்திரிக்கைத் தளங்களை ஊடுருவியிருக்கும் கேளிக்கைகள், வெகுசனச் சீரழிவுகள், பொதுவெளி அதிகாரங்கள் நோக்கிய பிறழ்வுகள், இடைநிலை எழுத்து பாவனையிலான சமரச சமன்பாடுகள் என்பவற்றிற்கு சிறிதும் உட்படாது,  விலகி நின்று  நவீன விருட்சம் தன் தார்மீகம் சிதையாது துணிந்தும் தனித்தும் சிற்றிதழ்கால பிடிவாதத்தையும் செருக்கையும், தன் இருப்பை உரத்து வைக்கும் இடமே அதன் தனித்துவமும் அழகும் ஆகிறது. மணல் வீட்டின் இந்த விருது விருட்சத்தின் மூத்த கரங்களை சென்றடையும்  அன்புக்கும் விழைவுக்கும் அந்தத் தளமே ஆதரமாகிறது.
 அழகிய சிங்கரின் தலையங்கங்கள், பத்தி எழுத்து போன்ற குறுங்கட்டுரைகள், மதிப்பீடுகள் போன்றவற்றில் முந்தைய  சிற்றிதழ் மரபின்  அகஉயிர் , ஒரு நீரோட்டம் வந்தபடியே இருக்கிறது. அதில் ’வெற்றி’ என்ற  நுகர்விய மதிப்பீட்டுக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட புதியகால இடைனிலை எழுத்துகளின் மீதான  சந்தேகம் இருக்கிறது. விருட்சத்தின் பழைய இதழ்களில் எப்போதும் பரிசோதனைகளுக்கான அழைப்பு இருக்கிறது. வணிக எழுத்து என்ற வரையறுக்கப்பட்ட எதிர் நிலையை முன்னிறுத்தி நவீன எழுத்தின் , தீவிர எழுத்தின் பற்றுதல் இருக்கிறது.   இந்த தலையங்கங்களில்  இயங்கும் அழகிய சிங்கரின்  ஆளுமை குணாம்சம் என்பது ஆவேசமோ தன்முனைப்போ அற்றது. பெரிய அதிர்வுகளற்று மெல்லியல்பான அவதானங்களுடன்  , தன் முன்வைப்புகள் குறித்து தானே தயக்கங்கள் கொள்வதும் கூட.  கடந்த பதின்மங்களின்  மாறி வரும் காலம் , சிற்றிதழ் வெளிகள் பொதுத்தளங்களுக்கு நகர்ந்திருப்பதும் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் வெகுசன கேளிக்கை நாயகர்கள் ஆகிவருவதும் குறித்த திகைப்புகள்  அதற்குண்டு.  குமுதம் தீராநதியின்  வருகை குறித்தும் உருமாற்றமடைந்த ஒரு பெரும் காலப் பரப்பின் தடித்த நூல்களின் பிரவேசம் குறித்தும் ஒருவித அசௌகரியமும் பதற்றமும் கொள்ளும் மனம் ஒரு தலையங்கத்தில் வெளிப்படுகிறது.  மாறுபட்ட காலங்கள், போக்குகளினூடே விருட்சம் தனதேயான ஒரு சாராம்சத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்துள்ளது. மணல்வீட்டின் தலையங்கம் எப்போதும் சாடல்கள் விமர்சனங்களின் அதிர்வோடு , சூழலின் பிறழ்வுகளின் மீது முறைப்பாடுகளும் சீற்றமும் கொண்டதாகவே இருந்துள்ளது.  மணல் வீடு அறிவித்துள்ள இந்த விருது என்பது எல்லா முரன்பாடுகளையும் மௌனித்துவிட்டு அதிகாரத்தின் கேளிக்கைக் கேந்திரங்கள் நோக்கி நடையிடத் தொடங்கிய நேற்றைய சிற்றிதழ் எழுத்தாளர்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு குறியீடான விமர்சனம்தான்.

Friday, February 7, 2020

இருபதிருபதில் தமிழ்க் கவிதை- உன்னதங்கள் எல்லாம் கவிழ்க்கப்பட்டுவிட்ட காலத்திலும் கவிதை ஒரு அதீதத்தை நோக்கித்தான் எம்புகிறது



கவிதை போன்ற, மொழியின் ஒரு அக இயக்கத்தை  சரித்திரம் என்னும் நமது திட ஞாபகத்தின்  காலவெட்டில் வைத்து அனுமானிப்பது மிகச் சிக்கலானது. ’கவிதைக் கலை’ என்பது போர்ஹேவின் ஆடியில்

..அது தண்ணீராலும் காலத்தாலும் ஓடும் நதி
நகர்ந்து கொண்டிருப்பினும்  நகர்வற்றது போலவும் தோன்றி,
தன்னைப் போலவே ஒன்றெனவும் மாறிக்கொண்டுமிருக்கும்  
மாறாத ஹெராக்ளிடசின் கண்ணாடியென மயக்கம்தரும்
கடந்துகொண்டிருக்கும் நதியைப் போல”

 என  நகர்ந்துகொண்டும் நகராமலிருப்பதாகவுமான பாவனைகொண்ட ஒரு  நதியின் சித்திரமாக இருக்கிறது. காலம், இடம், நேற்று ,  நாளை போன்ற பௌதிக அலகுகள் கவிதையில் மயக்கமடைந்துவிடுகின்றன. கவிதை ஒரே நேரம் நவீனமாகவும் தன் ரத்தத்தில் செவ்வியலாகவும், தொல்லுயிராகவும்கூட இருக்கிறது. ”இரண்டாயிரத்துக்குப் பின் கவிதை” எனச் சொல்லும்போது அது வரலாறு குறித்த அறிதலே அன்றி கவிதை குறித்ததாகுமா என்ற கேள்வியை உறுதிப்படுத்திக் கொண்டே அதில் நிதானிக்க வேண்டியுள்ளது. இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களாகாவது சமகால கவிதை மொழியில் பேரற்புதங்களுடன் தீவிரம்கொண்டிருக்கிறார்கள். மையம் கலைந்த ஒரு கொண்டாட்டமும், கட்டற்ற ஒரு சுதந்திரமும், பலநூறு பாதைகளுமாக திறந்துகொண்டுள்ள அந்த இடத்திலிருந்து பெயர்களை, சில செல்நெறிகளை, சில மையங்களைத்  தொடும் அடையாளச் செயல்பாடு அர்த்தமற்றதாகிவிடும். இரண்டாயிரத்துக்குப் பிறகான கவிதையின் சில பொதுச் சுபாவங்களைக் கவனித்துப் பார்க்கலாம்.

மொத்தமாக பதுங்கு குழிகளில் வந்து விழுந்தார்கள்
”அப்பா நாம் ஏன் பாம்பைப் போல
படுத்தபடியே நகர்கிறோம்”
இறைவன் வானிலிருந்து 
திராட்சைகளை வீசிக்கொண்டிருக்கிறார் மகளே!
அவை புளிக்கும் திராட்சைகள்
உனக்குப் பிடிக்காதல்லவா  (ச.துரை)

 இன்றைய கவிதை மனச்சூழலின் ஒரு சிறு உதாரணமாக இக்கவிதை. எவ்வளவு அடர்த்தியான துயரமும் பேரவலமும் எத்தனை எடையற்று, ஒரு இறகு போல அசாதரணமான எளிமையுடனும் அபத்தநகையாகவும் இதில் சொல்லப்பட்டுள்ளது எனப் பார்க்கலாம்.  ரத்தத்தின் பேராற்றை ஒரு மலராக இக்கவிதை மாற்றிவிடுகிறது. யுத்தப் பெருந்துயர்களை காவியங்கள் செவ்வியலாக மாற்றும் ஒரு ருசியும் வலியின் பேராழமும் இந்த நான்கு வரிகளில் ஒரு விளையாட்டு போல தொடப்பட்டுவிட்டது.  வேடிக்கை, விளையாட்டு, அபத்தங்கள், பாரமற்ற தன்மை, உரைநடை, பகடி, புனைவுத் தன்மை எல்லாம் இன்றைய கவிதையின் இயல்புகளாகியிருக்கின்றன.

சமகால கவிதையின் தோற்றுவாய்கள் தொண்ணூறுகள் என்னும் பித்தும் கனவுமான பெரும் சுழல்களின் ஒரு பதின்மத்தில் பொதிந்துள்ளன. அகநிலையில்,  சிறுபத்திரிக்கை கையளித்த படைப்பு மொழியும் ஞானமும் ஒரு பரிணாம உச்சிக்கும் , புற நிலையில் மொழியின் அதிகாரப் புலங்களிலிருந்து விலக்கப்பட்டிருந்த பெருந்திரளானோர் வாசிப்பிலும் –எழுத்த்திலும் பிரவேசித்ததும் உடனிகழ்ந்ததன் ஒரு பெரும்பருவம் அது.  அழகியல் – அரசியல் , வடிவம்- சாரம்,  மனம் – உடல்,  புனைவு – யதார்த்தம்  என்ற பழைய இருமைகள் எல்லாம் பாகுபாடு நீங்கி முயங்கியதன்  புதிய ஒரு அழகியலால் கவிதையில் பல தேவதைகளின் நடனம் தொடங்கிய காலம். ஷங்கர்ராமசுப்பிரமணியன், லக்‌ஷ்மி மணினவண்ணன், ராணிதிலக், ஸ்ரீநேசன், பாலைநிலவன், கண்டராதித்தன், பெருந்தேவி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, யவனிகா ஸ்ரீராம், யூமா வாசுகி, என்.டி.ராஜ்குமார், பிரான்சிஸ் கிருபா என (முழுமையற்ற) ஒற்றைத் தன்மையில் கிடைமட்டமாக வரிசைபடுத்திவிடமுடியாத பன்மையான பாதைகள் திறந்த காலம். தொண்ணூறுகளை அதற்கு முந்தையதிலிருந்து சற்று வேறுபடுத்த வேண்டுமானால் , அதற்கு முன்பு  நவீன கவிதை என்றாலே  அகவயத் தீவிரம், இறுக்கமான மொழி, கவிஞனின் தன்னிலை, சுயத்தின் அழுத்தம், மனமே ஒரு நிலப்பபரப்பாக இருப்பது, ஒரு துயருணர்வு மேலோங்கி இருப்பது போன்ற சில பொது இயல்புகளைக் கூறலாம். தொண்ணூறுகளில் இருந்து இரண்டாயிரங்களில் முகிழ்த்த கவிதை பல பொருள்களும் கதாமாந்தர்களும் கொண்டதாக, உடலின் சொற்களாக, காட்சிகளும் புனைவுகளும்  கூடியதாக,  கொண்டாட்டமும் விளையாட்டுகளுமானதாக உருமாறி வந்தது.  இவை எல்லாம் சில பொதுவியல்புகள் மட்டுமே. தொண்ணூறுகளில் இருந்து இரண்டாயிரங்களில் முகிழ்த்த இக்கவிஞர்களின் ஒவ்வொரு தனியுலகும் நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்குமான இடைவெளிகளுடன் பிரத்யேகம் கொண்டவை.
   
பெண்ணுடல் ஒரு ஆண்மைய சமூக , பண்பாட்டு , மொழிப் புனைவாக  முடக்கப்பட்டிருப்பதினின்றும் விடுவித்து ,  அதன் சுய பபாலிமை ஆற்றலையும் படைப்புத் தீவிரத்தையும் முன்வைத்து உடலரசியல் கவிதைகளாக ஒரு பயணம் தீவிரப்பட்டது. மாலதி மைத்ரியின் கவிதையொன்றில் யோனி ஒரு பட்டாம்பூச்சியாக பறக்கும் விடுதலைக் களிப்பு..  குட்டி ரேவதியில் பெண்ணுடலுக்கும் பிரபஞ்சத்துக்குமான நீரோட்டங்கள்..  சுகிர்தராணி, சல்மா என நீளும் ஒரு வரிசை..  

இனி, இன்று உலகயமாதலின்  இரண்டாம் மூன்றாம் அலைகளுக்குப் பிறகு ,  சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக இலக்கிய வெளிகளும் உருமாறும் காலத்தில்,  வாழ்வின் எல்லா கூறுகளும் நுகர்விய மதிப்புகளுக்குள்ளும், மனித இருப்பே ஒரு பண்டமயத் தொகுதியாக , உலகம் ஒரு பிரம்மாண்டமான அங்காடியாக  மாறியிருக்கும் இடத்தில்,  இலட்சியவாதங்கள், அதன் அடர்ந்த சொற்கள் எல்லாம் விதை நீங்கிய  தேய்வழக்குகளாக,  தெர்மகோல்  தக்கைகளாக மிதக்கத் தொடங்கிய வேடிக்கையில் , இந்த குழப்படிகளினூடாக  கேள்வி, அழகு, அறிதல்,  என்னும் நித்திய குணங்களுடன் ஊடுருவிச் செல்லும்  ஆவேசம்கொண்டதாக கவிதை வடிவமே முதன்மையானதாக இருக்கிறது.  

ஒரு பக்கம் எல்லையற்ற சுதந்திரத்திலும் ஒவ்வொரு கணமும் புத்துருவாகிக்கொண்டும் ஆயிரம் உடல்கள், ஆயிரம் வரலாறுகளின் பல்லுடலியாகவும்  மறுபக்கம் வரலாற்றால் மொத்தமாக வெறுமைசெய்யப்பட்டு மதிப்புநீக்கமான மனித இருப்புக்குள் நுகர்வுதாண்டிய உயிர்ப்பை உசிப்பியபடியும் இன்றைய கவிதை இயங்குகிறது.  இன்றைய கவிதையின் சிறப்பம்சமே அதன் குறிப்பிட்ட திசையற்ற தன்மைதான்.  உண்மையில் ஒவ்வொரு தொகுதியும் ஒவ்வொரு கவிஞரும் ஒரு தனிப் போக்கு, தனி இயக்கம்.  இந்த மையமிழப்புதான்  நிகழ்கவிதையின் கொண்டாட்டமும் ஊழும்கூட.

இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், சபரிநாதன், பெரியசாமி இசை, நரன், பெரு விஷ்ணுகுமார், பச்சோந்தி, மௌனன் யாத்ரிகா, ச.துரை, வே.நி.சூர்யா, றாம் சந்தோஷ், என முடிவற்று நீளும் இவையெல்லாம் ஒரு நபர்களை மட்டும் குறித்த பெயர்களல்ல. சபரிநாதன்  கவிதையில் இந்த பிரபஞ்ச இருப்பே ஒரு மகா அபத்தாமாகியும் மறுகணம் பேரழகுமாகித் தெரிகிறது.  ஒரு பக்கம் நமது காலத்தின் உள்ளீடின்மையை, குழப்படிகளை வேடிக்கை செய்தபடியே செவ்வியலான மகத்துவங்களையும் எட்டிப் பிடிக்கும் அருங்குணம்கொண்டவை சபரிநாதன் கவிதைகள்.
மின்மினியே…
யார் தொட்டு எழுப்பியது உனை
எந்தக் கரம் உனக்குப் பார்வை தந்தது
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்
கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்
பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்..
இதுவரை சொன்ன சமகால கவிதைப் பொதுவியல்பில்பின் எல்லா வரையறையையும்  அபத்தமாக்கும் செவ்வியலான, பாடல்போன்ற, நித்தியத் துயரமும் அழகுமான  இக்கவிதையின் அகாலத் தன்மையை  எந்த மதிப்பீட்டு வரம்பிலும் பொருத்திவிட முடியாது.  இவரது ‘மனித மூளை பற்றிய சில சிந்தனைகள்’ என்னும் சற்று நீண்ட கவிதை  உங்கள் ’மூளை’யை சரித்திரத்தின் மேல் துண்டித்து அந்தரத்தில் நிறுத்தும்.

   அதிகாரம் , ஒடுக்குமுறைகளின் அரசியல் விஞ்ஞானங்களை உச்சபட்ச கவித்துவத்துவத்துடன் அழகியலுடன் ஊடறுத்தலும்,  நவீனம்,  செவ்வியல், வழக்காறுகள் எனப் பல வெளிகளில் மயங்கிச் செல்லும் மர்மமும் ஆயுதங்களும் பொதிந்தவை வெய்யில் கவிதைகள்.

ஒரு நுண்ணியிரி
விரும்பியபடியே
யானையைத் தன் உணமேசைக்கு வரவழைத்துப்
புசிக்கிறது.
அதில் எந்த மர்மமும் இல்லை என்கிறது விதி.
பற்களை இழுத்துச் செல்லும் எறும்புகள் கோர்க்கின்றன
மதயானையின் புன்னகையை.. ( வெய்யில் )
இதில் உள்ள நாடகம், வன்முறை, ஊழ், விளையாட்டு எல்லாவற்றையும் ஒரு கதவு போல எளிதாகத் திறந்துவிடுவது சாத்தியமல்ல.  வே.நி.சூர்யாவில் மனிதத்தலை எப்போதும்  கில்லட்டினுக்கு அடியில் துண்டிக்கப்பட தயாராக இருக்கிறது. 

அவன் நினைவுகளின் தண்டவாளங்களில்
புகைரதம் போல்
ப்ளேடொன்று புகைவிட்டபடி போய்க்கொண்டிருந்தது
ஸ்டேஷன்களை மறந்த ரயில்
அவன் கழுத்துக்கு திடீரெனப் பாய
(பார்ப்பதற்கு மான் துள்ளுவதைப் போல)
சிவப்பாய் கடுமழை பொழிந்ததங்கு .. ( வே.நி.சூர்யா)

’ழ’ என்ற பாதையில் நடமாடும் பெரு  விஷ்ணுகுமாரின் விளையாட்டு, விசித்திரம், விபரீதப் புனைவு  என, காலம் இடத்தில் அடுக்கப்பட்ட  பொருள்களை  பல தலைகீழாக்கங்கள் செய்யும்,  நமது  நிதான புலன்களை ரோலர் கோஸ்டர் அதிர்வுக்குள்ளாக்கும் கவிதைகளை மீண்டும் மீண்டும் அணுக வேண்டும்.

…அவர் நூதனக் கிறுக்கனாயிற்றே..
தன் காது தும்மலிடும் துளைகளையெல்லாம்
அடிக்கடி இடமாற்றிக்கொள்வார்
டம்ளருக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருப்பார்
தலையணையுறைக்குள்
மொட்டைமாடியை நுழைத்துக்கொண்டிருப்பார்
சட்டைப் பொத்தான்களை மாத்திரைகளாக விழுங்கிக் கொண்டிருப்பர்
உயரதிகாரி ஒருவரை அறைந்துகொண்டிருப்பார்
இன்றேல்  அந்தப்பக்கம்
யாரிடமாவது போய்
அவரைப்பற்றியே விசாரித்துக்கொண்டிருப்பார். (பெரு. விஷ்ணுகுமார்)

அறிவியல் மெய்ம்மைகளுடன் கவிதையின் விளையாட்டைத் தொடங்கும்  பாம்பாட்டி சித்தனின் இஸ்ரேலியம் தொகுப்பு ஒரு தனிப்பாதை. பகடியால் எல்லா மகத்துவங்களையும் தொட்டுக் கவிழ்க்கும் இசையின் கவிதையொன்றில் , கடவுள் தன் கைகளில்  நம்மை ஒரு பந்தென  ஏந்தி மேலும் கீழும் என தட்டி அசைத்துக்கொண்டே ”உன்னைக் கைவிடுவதுமில்லை விட்டுவிடுவதுமில்லை” என வேடிக்கை செய்வதும் , மனிதன் தேவனே எம்மை தயவுசெய்து விட்டுவிடும் என மன்றாடுவதுமான  இடம் நமது கடவுளற்ற காலத்தின் அற்புதமான ஒரு நகைச் சித்திரம்.  

பாசிச அரச முறைகள் , ஒற்றைப் பேரடையாளங்களின் சித்தப்பிறழ்வான  கும்பல்   கொலைக்களங்களில் ஒவ்வொரு நாளும் பீதியடைந்துகொண்டிருக்கும் நமது பொது இருப்பையும் பன்மிய  நனவிலியையும்  தூண்டியபடி ‘பீஃப்’ கவிதைகளுடன்  வரும் பச்சோந்தி  சமகாலத்தின் தீவிர அரசியல் மனச்சான்றாகி  மொத்த கவிதைப் பரப்பையும் கலவரப்படுத்துவதை எளிதில் கடந்துசெல்ல முடிவதில்லை. 

இன்று இருபதிருபதில் நிற்கும்போது , கவிதை பல சுழல்கள், பல கண்கள் கொண்டதாக இருக்கும்போதே நுகர்விய மதிப்புகளும் சந்தை ஊக்கங்களும் தொடர்ந்து இலக்கிய வெளிகளை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கும் காலத்திலும் இருக்கிறோம்.  மனிதனை வெறும்  நுகர்வோனாகச் சுருக்கும்,  அவனது புலன்களை பூதாகரப்படுத்திக்கொண்டே 

சாரத்தை நோய்மையிலாழ்த்தும்  பயன்மதிப்புகளுக்கு எதிராகத்தான் கவிதை தொடர்ந்து தீவிரம்கொள்கிறது. உன்னதங்கள் எல்லாம் கவிழ்க்கப்பட்டுவிட்ட காலத்திலும் கவிதை ஒரு அதீதத்தை நோக்கித்தான் எம்புகிறது.

முலையை கனியோடு ஒப்பிடமாட்டேன். கனி ஒரு  நுகர்பொருள். புசிக்க புசிக்க  அது மெல்லச் சிறுத்து சூன்யத்தில் முடிந்து இல்லாமல் போகிறது, எனவே முலைகளை மலர்களோடே ஒப்பிடுவேன்  என்பது  போன்ற  ஷங்கர்ராமசுப்பிரமணியன்  ஒரு கவிதை இருக்கிறது.. அதில் ஒரு பகுதி..

“முலை ஒரு கனி அல்ல. கனியின் சாறும்  தசையும்,  பசியை ஆற்றக் கூடியது.
கனிகளை அணில்கள், குருவிகள், என் கவிதையில் வரும் செம்போத்துப் பறவைகள் மற்றும் வீட்டு விலங்குகள் சிலவும் உட்கொள்ளும். நான் கவிஞனென்பதால் முலைகளை மலரென்று அழைப்பேன். உபயோக மதிப்பைத் தாண்டி  நீங்கா அழகின் இறவாமைக்குள் அதன் அலகு நீள்வதால் முலைகளை நான் மலரென்றே அழைப்பேன்.”     

நுகர்வுக்கும் பயன்மதிப்புக்கும் வெளியிலேயே எப்போதும் அசாதாரணமாக உயிர்த்திருக்கும் கவிதையையும் இதில் அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.

( *அந்திமழை இதழில் வெளியானது)