Monday, March 30, 2020

சிறுபத்திரிக்கைகளின் ‘சிறு’ என்னும் சாரம்சம். மணல்வீடு இதழின் அஃ பரந்தாமன் விருது பெறும் நவீன விருட்சம்.


*மணல்வீடு இதழில் வெளியான கட்டுரை
                                                                                                                                                            சிறுபத்திரிக்கை என்பதன் உள்ளுயிர் வேறொரு சாரத்திலும் வேரொரு மரபிலும் இருந்து வருகிறது. அதன் ’சிறு’ என்ற அடையாளம் குறைந்த அச்சிடல்,  சிறிய  வாசகத்தளம் என்ற குறிப்பில் இல்லை. இருளும் தனிமையும் கொண்டு , ஒரு கருநிலை இயக்கமாக, ‘பெரிது’ என்பது சார்ந்து இயங்கும் அனைத்து அதிகாரங்களுக்கும் , பெரிது என்பது சார்ந்த அனைத்து கேளிக்கை - சந்தை மதிப்புகளுக்கும்  பொதுமைப்படுத்தல்களுகும் எதிரான புள்ளியில் தன் நியாயத்தை இருப்பை முன்னிறுத்தியே தன் ‘சிறு’ என்ற பொருண்மையை அது தக்கவைத்தது. சாராம்ச நீக்கம் செய்து மனிதனை ஒரு காலிக்கூடாக்கி அவனை  நுகர்வோன் என்னும் ஒற்றைப் பரிமாணத்தில்  நிறுத்தியிருக்கும், வணிக - சந்தை  எழுத்துக்கும்,  படைப்பூக்கச் சாளரங்கள் அற்ற கல்விப் புல இறுகிய சட்டகங்களுக்கும்  எதிர்நிலையான ஓர் கலை/அறிவு  இயக்கம் எனச் சொல்லித்தான் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் விசைகொண்டது. இங்கு  சிற்றிதழ்  எழுத்து கனவு, தீவிரத்துவம்,  பிடிவாதம், விளிம்புநிலை மூர்க்கம் , வேறுபடுதல் முதலிய குண இலட்சணங்களுடன்  கண்டுபிடிப்பு, , மெய்யறிதல், சமகால பாடுகள், புதிய யதார்த்தங்கள் என்ற உள்ளீடுகளுடன்  ‘ நவீன இலக்கியம்’  ’தீவிர இலக்கியம்’ ‘ மாற்று  இலக்கியம்’ என்றெல்லாம் முன்வைக்கப்பட்டது. புதுமைப்பித்தன் , . நா. சு. , சி.சு.செல்லப்பா என ஒரு தடத்தின் நவீனத்துவமாகவும்,  தொ.மு.சி, கைலாசபதி, வானமாமலை. கோ. கேசவன் என நீளும் மார்க்சிய பார்மபரியத்தின் ’முற்போக்கு இலக்கியம்’ என்ற சொல்லாடலாகவும், இவ்விரண்டினிடையான முரண்விசை இயக்கத்தின் நீட்சியில், என்பதுகள் தொண்ணூறுகளில் இவற்றிடையான நெகிழ்தலும், அதனூடாக வெடித்து திறந்த 90 களின் புதிய பலநூறு பாதைகளுமாக, ஈராயிரத்துக்குப் பிறகான சந்தை முற்றுகையும் வெகுசன - தீவிர என்ற கோடழிதலும், சிற்றிதழ்கள் தம் பழைய தார்மீகங்களில் இயங்கவியலா புதிய  நெருக்கடிகளும் , வரலாறும் உள்ளீடுகளும் காலியாகி  திணைமயங்கிய நுகர்பொருள்களாவும், பொத்தாம்பொதுவான தன்மையும் களைப்படைதலுமான ஒரு கலங்கிய பரப்பிலும் படைப்பூக்கத்தின் முடிவற்ற அறிதல்களின் தீவிரத்தவத்தை உயிர்ப்பிக்கும் உதிரியடைந்த எழுது விரல்களை கண்டடையும் வேட்கை கொண்டாகவேண்டிய விளிம்பில் சிற்றிதழ்கள் இன்று தம்மை வந்து நிறுத்தியுள்ளன.   இந்த நவீன எழுத்தியக்கத்தின் ஊடும்பாவுமாக வெட்டிச் செல்லும் பல்வேறு போக்குகளும் மொழித் தடங்களும் , இன்றைய குழப்படிகளுக்கும்  இடையேயான ஒரு நெடிய பாதையில்  ‘விருட்சம்’ இதழ்  தனது அசாதாரணமான நிதானத்துடனும், பற்றிக்கொள்ளலின் பிடிவாதத்துடனும் தன் தொடர்ந்த பயணத்துடன் முப்பது ஆண்டுகள் என்ற பெரும் பரப்பைக் கடந்தும் நீண்டு வருகிறது.
 ஒரு தனிப்பட்ட  கருத்தியல் குழு ,  ஒரு குறிப்பிட்ட நோக்கம், ஒரு பிரத்யேக குணம் , தனதேயான தனித்துவம்  ஆகியவை சிற்றிதழின் அடிப்படைகள். சிற்றிதழின் பல்வேறுபட்ட உள்மரபுகளின் வரலாறுகளுக்குள் விருட்சம் இதழ்  .நா.சு., சி.சு.செல்லப்பா பின்னர் வெங்கட்சாமிநாதன் வழியான ஒரு  நவீனத்துவ மரபின் ஒரு  நீட்சியிலிருந்தே உருவாகிறது.  அதில்  சிறுபத்திரிக்கை சூழலின் பல்வேறுபட்ட  ஊடாட்டமான ஓட்டங்கள்  பிரதிபலித்தாலும், தீவிரமாக வேறுபடும் எழுத்தாளர்கள்   அருகருகான பக்கங்களில் உரசிச் சென்றாலும் அந்த இதழ்களின் மொத்தப் பரப்புக்குள் ஓடும் ஆசிரிய மனம் என்பது க. ந.சு - செல்லப்பா மரபின்  நிழலிலேயே இருக்கிறது. முன்னர் குறிப்பிட்ட சிற்றிதழ் வரலாறு, மரபு அதன்  உள்ளர்ந்த இயல்புகளான  பிரத்யேகத் தன்மை,  பிடிவாதம், தீவிரத்துவம் முதலிய மதிப்புகளின் இலட்சிய குணங்களில்  ’நவீன விருட்சம் ’ ஒரு பெரும் காலப் பரப்புக்குள்  ‘சிற்றிதழின்’ தீவிர அகஉயிர் சுழலும் இடமாகவே இருந்துள்ளது.
 எண்பதுகள் தொண்ணூறுகளில் கனன்ற ஒரு புதிய மொழியை , புதிய உணர்திறன்களை  விருட்சம் தன்னூடாக  குறிப்பாக கவிதைகளின் வழி  சாட்சிப்படுத்தியுள்ளது ஒரு முக்கிய இடம்.  அதில் துடித்த அன்றின் பிரக்ஞையும் அதிர்வுகளும் ஓர் இசைக்குறிப்புகள் போல இன்றும் அதன் பழுப்பேறிய பக்கங்களில் உயிர்ப்படைகின்றன. இன்று பெரும் ஆகிருதிகளாக கொண்டாடப்படும் கவிஞர்கள், இன்றைய கவிதை விரிந்து செல்லும் முடிவற்ற பிரதேசங்களுக்கு ஆதாரமான நீரூற்றுகளை எழுப்பிய முன்னோடிகள்  பலரும் விருட்சம் என்னும் சிறிய ஏட்டில்  அருகருகாக இருக்கிறார்கள்...  வினோதமும்  தினசரியும் ஞானமும் விளையாட்டுமான தேவதச்சன்,  இயற்கையும் மெய்யறிதலும்  மனவெழுச்சிகளுமான தேவதேவன்,  சுயத்தின் காலித்தன்மையும் தனிமையும் பிளவுமான நகுலன்,  அங்கதமும்  மரபோசையும் புனைவார்த்தமுமான ஞானக்கூத்தன், மண்ணும் சொல்லுமான பழமலய், இருண்ட தேசங்களின் படிமங்களும்  அரசியலுமான இந்திரன், அறிவார்த்தம் பொறியாண்மை, கனவியல்பும், மொழிக்கூட்டமும் ஆன பிரம்மராஜன் , கொந்தளிப்பும் பிரபஞ்ச அறிதல்களும் மானுடமுமான பிரமிள் என தமிழ்க்கவிதையில் மாறுபட்ட வெவ்வேறு பிரபஞ்சங்களை  வெவ்வேறு நிறங்களை வரைந்தவர்களை விருட்சம் தன் தொடக்க இதழ்களிலேயே கண்டடைந்துள்ளது. 90களில் கிளர்ந்து இன்று மையமற்ற பெருவெளியாகியிருக்கும் இன்றைய கவிதைமொழியின் உள்விதைகளான இந்த பெரும் முன்னோடிகள் விருட்சத்தின் பதினாறே பக்கங்களிலான ஆரம்ப இதழ்களில் சாதாரணமாக இடம்பெற்றிருக்கிறார்கள். அதன் தீவிரத்துவத்தை இன்றின் கதியிலிருந்துதான் உணரமுடியும். இன்று முத்திரையிடப்பட்ட பேரங்காடிப்  பண்டங்கள் போல் வளமும் வண்ணமும் ஏறிய ’சிற்றிதழ்களை’ விடவும் 16 பக்கங்களில் அன்றைய பிரக்ஞையில் ஒரு கூரிய வாள் போல் இறங்கிய நவீனவிருட்சம் வீர்யம் மிக்கது. சிறிது என்பதன் தார்மீகமும் போக்கிரிக்குணமும் அதில்  உள்ளது.
  தீவிர தமிழ்ச் சிறுபத்திரிக்கைகள், எப்போதும், எதிர்காலவியலான ஒரு மூட்டவெளி நோக்கி அம்பெய்துபவை.  எதிர்காலவியலான மொழியை, நாளைக்கான சொற்களை,  நாளைக்கான கனிகளை எம்பித் தொடுபவை.  இன்று  பொதுவெளி நோக்கி ஊடுருவி வந்திருக்கும்  நவீன அதிர்வேறிய ஒரு தமிழை நேற்றைய    ’நவீன விருட்சம்’ உள்ளிட்ட சிற்றிதழ்தளங்களே உருவாக்கின.  எண்பதுகள் தொண்ணூறுகளின் அறிவுக் களங்களுக்கும் அதன் தீவிர மொழிகதிக்குகும்  ஒப்புக் கொடுக்கவும்  அதனூடாகப் பயணமும் சாகசமும்  செய்திடவுமான துணிவும் வேட்கையும் உண்மையும்  அன்றைய விருட்சம் இதழ்கள் கொண்டிருந்துள்ளன.
விருட்சத்தின் சிற்றிதழ் சார்ந்த  குரலை, மனச்சான்றை  அதன் தொடக்க இதழ்களிலேயே  உறுதியுடன் காணமுடிகிறது.  இரண்டாவது இதழ், முகப்பில் ஆதிமூலத்தின் க.நா.சு.  கோட்டோவியம் தாங்கி வருகிறது. இமைதாழ்ந்த ஒரு தீவரப்பிரக்ஞையின்  ரேகைகளே அங்கு   . நா. சு என்னும் கோடுகளாகியுள்ளன. ஆதிமூலத்தின் தீற்றலில் அது ஒரு தனிமனிதனின் முகஉருச்சித்திரமாக அல்ல. க. .சு என்ற ஒரு சாராமசத்தின் , இயக்கத்தின் , ஒரு சிந்தனை வடிவத்தின்,    தீவிரத்துவமே அங்கு கோட்டுருக்களாகியுள்ளன. பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சமூர்த்தி தொடங்கி நவீன எழுத்தின் பல்வேறு ஆகிருதிகளை வார்த்த ஆதிமூலத்தின் ஒவ்வொரு கோட்டுமொழியிலும் சிற்றிதழ் எழுத்தாளனின் மூர்க்கமும் , எதிர்ப்பும் , சுய குலைவும், தீவிரமும், தனிமையுமே  கோட்டுப்படிமங்களாக உருமாறியுள்ளன.  
விருட்சம் 2 ஆவது இதழில்   . நா.சு மறைவு குறித்து ஞானக்கூத்தன் எழுதிய அஞ்சலிக் கட்டுரை ஒரு தலையங்கம் போலவும் வாசிக்கத் தகுதி படைத்ததே. சிற்றிதழ்மனம், அதன் அகவுயிர், பெரிது சார்ந்த எந்த சமூக பிம்பங்களையும் கேலி செய்தும் எதிர்த்தும்  நிமிர்ந்து செல்லும் அதன் அழகும் சுயமாண்புமே  அதில் முன்வைக்கப்பட்டுள்ளது.  . நாசு., செல்லப்பா வழி பெற்றுக்கொண்ட நவீனத்துவத்தின் பரப்பெல்லைகளே  நவீன விருட்சம் நிலைகொள்ளும் இடம். மெல்ல,  விருட்சத்தில் புனைவு மொழியும் விமர்சன மொழியும் அடுத்தடுத்த இதழ்ளில் தன்னியல்பான கதியில் வந்திணைகின்றன. கோபிகிருஷ்ணனின் தூயோன் கதை தொடங்கி புனைவெழுத்தில் பலவிதமான தடங்களும்  அதனூடாகச் சென்றுள்ளன.  நண்பனின் தாய் நோயுற்றிருக்கிறாள். அங்கு ஒன்றமுடியாது தன் விருப்பங்களே முக்கியமாக குடித்துவிட்டு வருபவன்தான் தூயோன். தான் உள்ளே யாராக இருக்கிறானோ அப்படியே வெளியேயும் நடந்துகொள்கிறான். பாசாங்கான சரித்தன்மைகளை அவனால் பேணமுடிவதில்லை. நன்மை-தீமை என்ற மொராலிட்டிக்கு- நீதியியலுக்கு  வெளியே இருப்பவன்தான் தூயோன். இன்று  மிகைநவற்சி அன்பும் நீதியியலும் உருகிவழியும் இடைநிலை ’யதார்த்த’ எழுத்துக் குவியல்களின்முன் ‘தூயோனை’ நிறுத்த வேண்டும். அதன் காத்திரமும் உண்மையும் இன்றைய அரசியல்சரித்தன்மைகளிலிருந்து கையாளவேமுடியாத  ஒரு திறந்த கத்தி போல உள்ளது.
ஆரம்ப இதழ்களில் வந்த ஆத்மாநாம்  குறித்த கட்டுரை , பழமலயின் சனங்களின் கதை குறித்த மத்ப்புரை, ஜெயமோகனின் ஆற்றூர் ரவிவர்மா - சுரா இடையான கவிதை விவாதம் குறித்த பதிவு, அடுத்த இதழில் ரவிவர்மாவின் மறுப்புரை, நகுலனின் தன் நில்வாபோ கவிதை குறித்த சுய வாசிப்பை பகிரும் அரிய ஒரு  குறிப்பு,  ரா.ஸ்ரீனிவாசனின் கவிதை வடிவம் குறித்த தொடர் பதிவுகள் எல்லாம் எண்பதுகள் இறுதியில் மாறிக்கொண்டிருக்கும் ஒரு புதிய காலத்தின் சுழல்வை முற்கூரும் முக்கியச் சுவடுகள். குற்றாலம் கவிதைக் கூட்டம் குறித்த ஞானியின் பதிவு அமைப்பியல் குறித்த மென்பகடி கொண்டது. செவ்விலக்கியங்கள் மீதான கட்டுடைப்பையும்  நவீன கவிதையின் மீதான பிரதியியலான் தொழில்நுட்ப பிரித்துப் போடல்களையும் அவர் தன் சந்தேகங்கள் , அசௌகரியங்களோடு புதிய வரவுகளை அனுமதித்துப் போகிறார். சிற்றிதழ்கள் எப்படி கருத்துகளின் மோதுகளமாக காலத்தின் ஒரு நிகழ்தளமாக, இருந்துள்ளது என்பதும் இன்று ’ஏதும் நிகழ்வில்லை ’ என்னும் வெறும் உற்பத்திக் கேந்திரமாக  அது  உருமாறியிருக்கும் இடமும் எதிர்நிறுத்தி விருட்சத்தின்  அழுத்தமான இடம் உணரப்படுகிறது.
அதே நேரம் 90 களில் பெரும் உரையாடலும் விமர்சன விவாதங்களாகவும் கொதிநிலையடைகிறது சிற்றிதழ்வெளி. நிறுனவவாத மார்க்சியத்துக்கு அப்பாலன புதிய அறிவுக்களங்கள்,  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட நூறு அடையாளங்கள்  வெவ்வேறு வரலாறுகளின் புதிய விரல்களின் எழுத்துப் பிரவேசம்,   படைப்பை பிரதியாக்கி அதன் பொறியாண்மையை  உரையாடத் தொடங்கிய  அமைப்பியல் , ஒற்றைத் தன்மையினிடத்தில் பன்மையும், விளையாட்டும் கொண்டுவந்த பின் நவீன பேச்சுகள்,   . .சு, செல்லப்பா, வெ.சா வின் நவீனத்துவ எல்லைகளை கடந்து வந்த உடைப்புகள், படைப்புத் தளத்தில் லத்தீன் அமெரிக்க ஊக்கங்கள், யதார்த்தவாதம் நெருக்குண்ண்டு புனைவதீமும் , கனவுத் தன்மையும், வழக்காற்றுக்கூறுகளும், மொழி வெளியும் என  நூறு நாவுகளாலான கதைவெளி, அகத்தீவிரம், தத்துவ அழுத்தம் என்னுமிடம் புறவய நெகிழ்வு, உரை நடை, உடலின் சொற்கள், புனைவு மொழி என புதிய துடிப்புகளில் மலர்ந்த கவிதைவெளி; வித்தியாசம், படிகள், மேலும், மீட்சி, கல்குதிரை, லயம், நிகழ், மன ஓசை, நிறப்பிரிகை, கல்குதிரை, புனைகளம் என வெவ்வேறு களங்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளும் முரண்படு கருத்தியல் குழுக்களாலும் ஒன்றையொன்று ஊடியும் மறுத்தும் சமர்புரிந்த  வார்த்தைப் பெருவெளியாகி 90 கள்  வேறுபாடுகளின்  தீவிரத்தால் அதன் வெவ்வேறு குரல்களால் அதிர்வேறிய தசாப்தம். இதனூடாக விருட்சத்தின் பயணம் யாது.  இந்த துடிப்பு மிக்க காலகட்டத்தின் மாறுபட்ட பலவிதமான எழுத்துவிரல்களும் விருட்சத்தின் பக்கங்களில் குறுக்கும் நெடுக்குமாக உரசிச் செல்கின்றன. அருருகாக இடம்பெற்றுள்ளன. எல்லோருக்குமான ஒரு பொதுமேசையாக அது இருந்துள்ளது. முரண்படுபவர்கள் அருகருகாக எழுதியிருக்கிறார்கள். முரன்பட்ட விசைகளால் இழுக்கப்பட்ட  90 களின் ஊடாட்டமான காலத்தினூடே விருட்சம்  பெரிய உருமாற்றங்களன்றி, ஒருவித பொத்தாம் பொதுத்தன்மையும் அசாதாரணமான நிதானமும் கொண்டு மௌனப் பயணமாக கடந்து செல்கிறது. எதிர்வினையாற்றலின் இடத்தில் நிசப்தப் பார்வையாளனாக அது அமைதிகொள்கிறது. நீண்டு வரும் அதன் முப்பதாண்டு  பெரும் பரப்பில்  பெரிய தோலுரிதல்களோ வளர்சிதைவுகளோ அன்றி நிதானனமும் , பொதுத்தன்மையும் பேணுதலாக முன்பே கூறிய  . .சு தொடங்கி வெஙட்சாமி நாதன் வரையான ரசனை-அழகியல்வாத  நவீனத்துவத்தில் ஊன்றியபடியே புதுமையடைந்து வரும் காலத்தினூடாகவும் தன் பழைய நாஸ்டால்ஜியாவின் மன ஊக்கத்தோடும்  அது தொடர்ந்து முன்னகர்ந்து வந்துள்ளது. அழகிய சிங்கரின் அலுவலகம் செல்லும் மத்தியதர வர்க்கத்தின் சலிப்புகள், அதன் அழகியல், ஞானம் என்பதான அவரது கவிதைகள், கதைகள், அவரது பத்தி எழுத்து போன்ற  கட்டுரைகள், பார்வைகள்,  மதிப்பீடுகள், மற்றும்  ஞானக்கூத்தன், வெங்கட்சாமிநாதன், வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், நகுலன் ஆகிய படைப்பாளிகளின் பிரதானமான பங்களிப்புகளே நவீன விருடத்துக்கான தனிக்குனம் , பிரத்தியேகத் தன்மை என்ற ஒன்றை வார்த்துள்ளது.  விருட்சத்தின்  முக்கோணப் பக்கங்களாக அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வெங்க்ட்சாமிநாதன் இருந்திருக்கிறார்கள். மற்றபடி ஒவ்வொரு காலத்தின் வெவ்வேறு அலைகளில் எழுந்துவரும் வேறுபட்ட படைப்பாளிகளும்  நவீன விருட்சத்திற்குள் தடையின்றி பிரவேசிக்கிறார்கள். தொடர்ந்து விருட்சம்  புதியவர்களுக்கும் அறிமுகமற்ற புதிய பயில் விரல்களுக்கும் தன்னைத் திறந்துவைத்து வந்துள்ளது. மனத்தடைகளற்று அதன் இடம் எல்லோருக்குமான களமாக இருந்துள்ளது. கடந்த தசாப்தங்களிலான இணைய சமூக ஊடக வெளிகளில் முகிழ்ந்த எழுத்தாளர்களுக்கும் அது தொடந்து இடமளித்துள்ளது.
   எல்லோரையும் அனுமதித்தலும் தனது அடிப்படைப் பொருண்மையில் நெடிய காலப் பரப்பிலும் ஒருவித மாறாத்  தன்மையும்  அல்லது அதன் காலமற்ற தன்மையைம் விருட்சத்தின் மீதான விமர்சனமாக அன்றி அதன் பிரத்யேக தனிச் சுபாவமாக  நாம் கடந்து செல்லலாம். விருட்சத்தின் இந்த பண்பியல்பை அதன் ஆசிரியரே ஒரு தலையங்கத்தில்  சுட்டிக்காட்டுகிறார்.  விருட்சம் பழைய ஏன்பதுகள் சிற்றிதழ் வரலாற்றின் ஓர் எச்சமாக மூன்று தசாபதங்கள் கடந்தும் தொடர்கிறது.
அதேசமயம்  இன்று சிறுபத்திரிக்கைத் தளங்களை ஊடுருவியிருக்கும் கேளிக்கைகள், வெகுசனச் சீரழிவுகள், பொதுவெளி அதிகாரங்கள் நோக்கிய பிறழ்வுகள், இடைநிலை எழுத்து பாவனையிலான சமரச சமன்பாடுகள் என்பவற்றிற்கு சிறிதும் உட்படாது,  விலகி நின்று  நவீன விருட்சம் தன் தார்மீகம் சிதையாது துணிந்தும் தனித்தும் சிற்றிதழ்கால பிடிவாதத்தையும் செருக்கையும், தன் இருப்பை உரத்து வைக்கும் இடமே அதன் தனித்துவமும் அழகும் ஆகிறது. மணல் வீட்டின் இந்த விருது விருட்சத்தின் மூத்த கரங்களை சென்றடையும்  அன்புக்கும் விழைவுக்கும் அந்தத் தளமே ஆதரமாகிறது.
 அழகிய சிங்கரின் தலையங்கங்கள், பத்தி எழுத்து போன்ற குறுங்கட்டுரைகள், மதிப்பீடுகள் போன்றவற்றில் முந்தைய  சிற்றிதழ் மரபின்  அகஉயிர் , ஒரு நீரோட்டம் வந்தபடியே இருக்கிறது. அதில் ’வெற்றி’ என்ற  நுகர்விய மதிப்பீட்டுக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட புதியகால இடைனிலை எழுத்துகளின் மீதான  சந்தேகம் இருக்கிறது. விருட்சத்தின் பழைய இதழ்களில் எப்போதும் பரிசோதனைகளுக்கான அழைப்பு இருக்கிறது. வணிக எழுத்து என்ற வரையறுக்கப்பட்ட எதிர் நிலையை முன்னிறுத்தி நவீன எழுத்தின் , தீவிர எழுத்தின் பற்றுதல் இருக்கிறது.   இந்த தலையங்கங்களில்  இயங்கும் அழகிய சிங்கரின்  ஆளுமை குணாம்சம் என்பது ஆவேசமோ தன்முனைப்போ அற்றது. பெரிய அதிர்வுகளற்று மெல்லியல்பான அவதானங்களுடன்  , தன் முன்வைப்புகள் குறித்து தானே தயக்கங்கள் கொள்வதும் கூட.  கடந்த பதின்மங்களின்  மாறி வரும் காலம் , சிற்றிதழ் வெளிகள் பொதுத்தளங்களுக்கு நகர்ந்திருப்பதும் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் வெகுசன கேளிக்கை நாயகர்கள் ஆகிவருவதும் குறித்த திகைப்புகள்  அதற்குண்டு.  குமுதம் தீராநதியின்  வருகை குறித்தும் உருமாற்றமடைந்த ஒரு பெரும் காலப் பரப்பின் தடித்த நூல்களின் பிரவேசம் குறித்தும் ஒருவித அசௌகரியமும் பதற்றமும் கொள்ளும் மனம் ஒரு தலையங்கத்தில் வெளிப்படுகிறது.  மாறுபட்ட காலங்கள், போக்குகளினூடே விருட்சம் தனதேயான ஒரு சாராம்சத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்துள்ளது. மணல்வீட்டின் தலையங்கம் எப்போதும் சாடல்கள் விமர்சனங்களின் அதிர்வோடு , சூழலின் பிறழ்வுகளின் மீது முறைப்பாடுகளும் சீற்றமும் கொண்டதாகவே இருந்துள்ளது.  மணல் வீடு அறிவித்துள்ள இந்த விருது என்பது எல்லா முரன்பாடுகளையும் மௌனித்துவிட்டு அதிகாரத்தின் கேளிக்கைக் கேந்திரங்கள் நோக்கி நடையிடத் தொடங்கிய நேற்றைய சிற்றிதழ் எழுத்தாளர்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு குறியீடான விமர்சனம்தான்.

No comments:

Post a Comment