Tuesday, March 19, 2019

தொல்கதையாடியின் மந்திர நாவுகள்


                                                                              
* குமார் அம்பாயிரத்தின் ஈட்டி தொகுப்பு குறித்து 

                                                  பிரவீண் பஃறுளி ( மணல் வீடு இதழில் வெளியானது)
                                             
 குமார் அம்பாயிரம் கதைகள் தொல்கதையாடிகளின் மந்திர நாவுகள் கொண்டவை. அவை தொல்கதைகளின் புதைபடிவுகளுக்குள்ளேயே ஆவிகளை உசுப்பியபடி நவீனத்துவம், சமகாலம்,  வரலாறு போன்ற வரம்புகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய வேறொரு ஞாபக வெளியில்  புனைவுறுபவை.  நிலத்திலும் காலத்திலுமான கோடுகளுக்கு  முன்னும் பின்னுமென ஊசலாடிச் செல்லும் தொன்மங்கள் , வழக்காறுகளின் எல்லையின்மையும்   நாடோடிக் குணமும் கொண்டவை.    நவீனத்துவ அறிமுறைகளால் குருடுமையான  நம் புலன்களைக் கழட்டி எறிந்து  நமது உடலில் பூடகமான  வேறுவித புலன்களைப் பொருத்தக்கூடியவை. அன்றாடம் என்ற நமது அலுப்பூட்டும் தகவல்-விவரண  நினைவை ரத்துசெய்து தொன்மம், புனைவுகள் , ஐதீகங்கள், வழக்காறுகள்  போன்றவற்றின்  தொனிகளை வரித்துக்கொண்டு  , நவீனம் கடந்த அறிதிறன்களின் புதிய ஒரு  மெய்ம்மை கொண்டதாக அவரது கதைகள் இருக்கின்றன. கீழைத்தேய அல்லது உலக தொல்சமூகங்கள்  சார்ந்த தனித்த  மனமும்  அழகியலும் அவற்றை வழிநடத்துகின்றன.  இத்தன்மையில் சமகால சித்திரம்,  நடப்பு அரசியல் கூட அதில் வேறொரு புனைவாக உருமாற்றப்படுகிறது. குமாரின் கதைசொல்லி  நடப்பு உலகைப் பற்றி கதைகூறத் தொடங்கும் போது கூட அதன் புற அடையாளங்கள் , தகவல்  குறிப்பீடுகள் , தினசரித் தன்மை  என்ற மேலோட்டமான படலத்தை  நீக்கி அதன் உலகளாவிய மற்றும்  காலவரையற்ற  பொது  நினைவின் புதையுண்ட அடுக்குகளை அது புனைவாக்கம் செய்கிறது.  இன்றைய புனைவுவெளியில் குமார் அம்பாயிரத்தின்  கதைகள் தனித்துவம் அடையும் இடம்  முக்கியத்துவம் வாய்ந்தது.





கதை என்பது புனைவு என்னும் பரப்புக்குத் தாவியதும்,  படைப்பு பிரதி என்றானதும்,  ஆசிரியனில்  இருந்து கதை சொல்லி தன்னை விடுவித்துக் கொண்டதும் தொண்ணூறுகளில் நிகழத் தொடங்கிய முக்கிய மாற்றங்கள்.
ஐரோப்பிய பகுத்தறிவு மரபு சார்ந்த யத்தார்த்தவாத சொல்முறையிலிருந்து விலகிய,  காலனிய நீக்கம் செய்யப்பட்ட தனித்த புனைவுமொழி ஒன்று அப்போது உருவாகத் தொடங்கியது. மிகுபுனைவு, வழக்காறுகள், மொழிகதை  என புனைவு என்பது ஒரு  மொழித் திரளாக, பண்பாட்டு கூட்டு நினைவுப் புலமாக  புத்துரு அடைந்தது.  


ஐரோப்பிய   நவீனத்துவம், அறிவொளி, யாந்திரிகம்,  புறவயமான நிர்ணயங்கள் சார்ந்து உருவான யதார்த்தவாதம் என்னும்  உலகப் பார்வையின்  உள்ளார்ந்த அதிகார  செயல்திறன்கள் கட்டுடைக்கப்பட்டன. நேரடியான புலப்பதிவு யதார்த்தம், சம்பவங்கள், மாதிரி கதை மாந்தர்கள், எடுத்தியம்பக்கூடிய தூலமான கதை ஆகியன மெல்ல விடை பெறத் தொடங்கின.  ஒரு மனிதனின், குடும்பத்தின் கதை என்னும் இடத்தில் ஒரு சமூகத் திரளின், வரலாற்று இயக்கத்தின், கூட்டு அனுபவங்களின் புனைவுகள் இடம்பெறத் தொடங்கின. கதைமாந்தர்களும், நேரான யாதார்த்த கதைகளும் விடைபெற்ற இடத்தில் வழக்காறு,   பெரும்புனைவு,  மொழிகதை, மிகுபுனைவு  என  ஆசிரியன் என்பவனில் இருந்து  கதைசொல்லி தன்னை விடுவித்துக்கொண்ட சுதந்திரம் சாத்தியமாகியது. ( அக்காலத்தில் கோணங்கி, பிரேம் ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணன், போன்றோர் நவீனத்துவம் வழி பரிச்சயப்பட்டிராத வேறொரு புனைவு முறையின் வெவ்வேறு இயங்கினர்)    குடும்பம், சாதி, வீடு, அலுவலகம் என்னும் பரப்பிலிருந்து வெளியேறி  தமிழ்ப் புனைவு  காலனிய நீக்கம்,  அரசியல் மயமாதல், கீழைத்தேய கதைசொல் மனோபாவங்கள் என ஒரு பன்முகப்பட்ட வளமான மொழி மரபில்  தன்னை இணைத்துக் கொண்டது. ஐதீகங்கள்், தொன்மங்கள், கனவுத் தன்மை என நவீனத்துவ அறிதல்களுக்கு சிக்காதவை எல்லாம் புனைவுக்குள் ஊடுருவத் தொடங்கின. இந்த மாற்றங்களின் இணைகோடான காரணிகளாக :  சிறுபத்திரிக்கை வழியான நவீனத்துவத்திற்கும் சமூக விமர்சனம் சார்ந்து இயங்கிய மார்க்சிய தரப்புக்கும் இடையிலான பிளவைக் கடந்து வந்த படைப்பு மனம், திராவிட, தலித்திய , இடதுசாரி இயக்கங்களின் சமூக அசைவின் வழி கல்வி பெற்ற அடுத்தடுத்த புதிய  தலைமுறையினரின் எழுத்து அதிகாரம், நவீன அறிவு,  வெளிச்சம் படாத வாழ்க்கை பரப்புகள், அதன் நவீனம் கடந்த வரலாறு, தனித்துவமான கதைசொல் முறைகள் , மறுபுறம் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்றவற்றின் விமர்சன முறைகள், இதன் இணை கோடாக நவீனத்துவ  மறுப்பு  கதைகூறல் பிரக்ஞைக்கு ஊக்கமளித்த  லத்தீன் அமெரிக்கப் புனைவு இலக்கியஅறிமுகம் ,  ஆகியவற்றைத் தொகுக்கலாம். இதற்குப் பிறகு கடந்த  பதின்மங்களில் உலகமயம், கேளிக்கை, சந்தைக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு  உருவான  வணிகமய சமன்படுகளில் நெகிழ்ந்து குலைந்த உற்பத்தி வெளியில் புனைவெழுத்து  சுயானுபவம், குடும்ப வரலாறுகள், ஆவணங்களின் மூச்சுத் திணறடிப்பாக, பருமன்நோய் பீடித்த தடித்த பிரதிகளாக வாசகன் மீதான ஒட்டுமொத்த வன்முறையாக  நிகழ்ந்துகொண்டிருக்கிறது.  உலகமய  தகவமைப்புகளின் பன்னாட்டுச் சுரண்டல்களில் உலகமே ஒரு பெரும் வணிக மாலாகவும், வாழ்வின் சகல அலகுகளும் முத்திரையிடப்பட்ட பண்டங்களாகவும் , தகவல்களின் தகவல்களின் எல்லையற்ற பெருக்கத்தின் முற்றுகையில் , உண்மை என்ற சாத்தியமே  பிரேதப் பெட்டிக்குள் ஜில்லிட்டுக் கிடக்கும் சூழலுக்குள்ளிருந்துதான் இடைநிலை பாவனை எழுத்தும், தகவல்களும் ஆவணங்களும் ஊதிப் பெருகும் புனைவுகளும், சுய அடையாள வேட்கை பீடித்த நேரடி வாழ்வியல் புலப்பதிவுக் கதைகள், யாதார்த்தாதவாத மனிதமையவாத  , தகவல் விவரணக் கதைகள் பெருகி நிறைகின்றன. ஆனால் எந்த பொதுப் போக்கிற்கும் எதிராக தீவிர படைப்பூக்க மனம் எப்போதும் தீவிரம் கொண்டுவிடுகிறது. அப்படி கடந்த பதின்ம ஆண்டுகளில் இந்த தகவல்பெருக்க வாழ்வியல் புலப்பதிவு  யதார்த்த புனைவின் வரம்புக்கு  வெளியே புனைவின் மாறுபட்ட சாத்தியங்கள், அதன் தீவிர அறிதல், அதன் தனித்துவ புலன்களை  கூர் தீட்டிய எழுத்தும் ஓர் இணைவெளியில் கருக்கொண்டுதான் வந்துள்ளது. குமார் அம்பாயிரத்தின் கதைகள் அப்படித்தான் தமிழ்க் கதை பரப்பை முற்றிலும் வேறொரு ஞாபகத்திற்கும் நிலவெளிக்கும் திருப்புகின்றன. அதன் தொல் மனோபவம்,  கூறுமுறைகள், புனைவறிதலுக்கு முன் இந்த இடைநிலை பாவனைப் புனைவுகள், அடையாள தகவல - களஞ்சிய நாவல்கள் ஸ்தம்பிக்கத்தான் வேண்டும். தகவல்களாலும்,  விவரங்களாலும்  சூழடிக்கப்பட்டுள்ள இன்றைய தினசரி வாழ்வில்,  புனைவு  நேரடி தினசரி  யதார்த்தத்தைப் ’பதிவதைப்’ போல ஒரு வன்முறை இருக்க முடியாது. புனைவாளி இந்த தகவல்சூழ் உலகிலிருந்து ஒரு சிறிய விடுதலையை நோக்கியாவதுதான் கதை சொல்ல முடியும். குமார் அம்பாயிரம் கதைகளில் கதை மாந்தர்களும் சம்பவங்களும் நெருக்கி அடிப்பதைப் பார்க்க முடியாது. மாறாக  வழக்காறுகளின் எல்லையற்ற நாவுகள் அவற்றுக்கு உண்டு. சமகாலத்தை அவர் எழுதும்போதே இந்த புவிப்பரப்பு தொன்மையடைந்துவிடுகிறது. அதில் வேறொரு  யதார்த்தம், இணை மெய்யுலகு உருவாகி விடுகிறது.


  நவீனத்துவத்துவம் வரலாற்றில் நிகழ்த்தியுள்ள வன்முறைகள், வேட்டையாடல்கள், அதன் குடிமைப் பாசாங்கின் உள்ளொளிந்த அதிகார வேட்கைகள்  மீதான அரசியல்பூர்வமான விசாரனையும்  நவீனத்துவத்தின் ஊடுருவல் நிகழாத தொல் சமூகங்களின் அறவியல் ,அழகியல் நோக்கிய பயணம் என்பதும் அவரது கதைகள் நிலைகொள்ளும் கருத்துநிலைப் புள்ளியாக உள்ளது. தொல்குடிகளின் மொழி,  புனைவு, கலை அவர்களின் தனித்த ஞானம்  வழி பிரபஞ்சத்தை வேறு வழியில் அறிய அவரது கதைகள் முற்படுகின்றன.  மூதாதைகளின்  சொல்கதை மரபுகளின் எடுத்துரைப்பு பாவனையும் அதே சமயம் சமகால பிரக்ஞை சார்ந்த கூரிய விமர்சனமும் அவற்றில் பின்னிச் செல்கின்றன.

கதைகள், அதி கற்பனை , மந்திரங்கள், சடங்குகள்  என பழங்குடி அறிதல் முறைகள் தனித்த ஒரு விஞ்ஞானம் கொண்டவை என்பதை அம்பாயிரம் கதைகள் தொடர்ந்து கவனிக்கின்றன. கனவில் காணாமல் போன ஈட்டி முனை  நிஜத்திலும் இல்லமல் போவதும்,  வயிற்று வலியால் அவதியுறும் ஒருவனுக்கான சிகிச்சையில் அக்குழுவின் முது தாய் வயிற்றைக் கீறி ஒரு ஈட்டி முனையை எடுப்பதுமான ஈட்டி கதை தொல்குடிகளின் ரகசியமும் மர்மமும் கொண்ட ஒரு இணைமெய் உலகுக்கு இட்டுச் செல்கிறது . அந்த சமூகத்தை அவதானிப்பதும், உடன் இருப்பதும் விலகிச் செல்வதுமான நவீன மனத்தின் பதற்றத்தை, குற்ற உணர்சச்சியை முன்வைப்பதிலும் எந்த மனத்தடையும் இன்றி இக்கதை சொல்லப்பட்டுள்ளது. 

 அம்பாயிரம் கதைகள்,  பருண்மையான யதார்த்த வெளிகள்  முற்றிலும்  நீக்கம் செய்யப்பட்ட உலகம் எனலாம் . அல்லது  உருவகம், குறியீடு,  தொன்மம், சாயைகள் என வேறொரு  தளத்திற்கு யதார்த்தம் என்பது திருப்பி வைக்கப்பட்டுள்ளது எனலாம்.  இதற்கு உதாரணமாக பனம்பூல் ஏந்திய தனிப்பாடல் கதையைக் கூறலாம். உலகமயம் கொண்டு வந்துள்ள வேலைத் தொகுதிகள், அதன் பிரதிநிதியாகவும்,  மறுபக்கம் பலியாகவும்  ஊடாடும்  பணி இருப்பு,  மனித சாரம் மீதான சுரண்டல், உலகமயம் விதைக்கும் கனவு, வெற்றி போன்ற மதிப்புகள் என  நிதர்சணமான சமகாலத்தின் அசைவுகள் மீதுதான் இந்தக்  கதை இயங்குகிறது. ஆனால் அதில் நிலம், காலம் சார்ந்து எந்த குறிப்பும் பெற முடியாது. அது முற்றிலும் பூடகமான ஒர் உருவக தன்மையில் உள்ளார்ந்த அங்கதத்துடன் இருக்கிறது. உலகமயம்  பண்டங்கள் வழி உடனடி சௌகரியங்களை அளித்தலும் பின்னர் பொருளாயத பிணைப்பின் வழி  நிறுவனங்களுக்கும் நமக்கும் ஒரு வாழ்வியல்  நுகர்வு மதிப்பை கட்டமைக்க விழைதும் ’வீனஸ்’ கழுதையாக  இக்கதையில் அற்புதமாக உருவகமாகியிருக்கிறது. இருசக்கர வாகனங்களை குதிரைகளாக்கி  வாகனச்சந்தை அரசியலை  ஒரு முற்றுருவகத் தன்மையில் இக்கதை புனைகிறது. இந்தக் கதை  ஏற்கனவே சொல்லி முடிக்கப்பட்டுவிட்ட  ஒரு நாட்டார் கதையின் பாவனையைக் கொண்டுள்ளது.  குமார் அம்பாயிரத்தின் அனேக கதைகளுக்கு இந்த  பண்பு உண்டு.  அவை சமகாலத்தில் நிகழ்பவை அல்ல.  நாட்டார் கதைகளை போல காலத்திலும் , நிலத்திலும் எங்கோ தொலைவில் நிகழ்ந்ததை  மறு நினைவு செய்வது போன்ற அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையின் மேல் கதை, கதையின் மேல்கதை என படிந்து செல்வது போன்ற பாவனை கொண்டவை.  தொலைவுகள், அணுகப்படாத  ஒரு நிலவெளி, புனைவாக மாறிவிட்ட ஒரு காலம் இவற்றின் மீது  இவரது கதைகள் மிகுந்த ஊக்கம் கொள்கின்றன.   கதை மாந்தர்கள், சம்பவங்கள் ,  கால  உண்ர்வு, இட உணர்வு இவற்றை மௌனமாக்கிவிட்டு  வாய்மொழிக் கதைகள் போன்ற ஒரு டைனமிக்கான  நிகழ்புனைவாக இக்கதைகள் இயங்குகின்றன. கால இட வர்த்தமானங்கள், அடையாளக் குறிப்புகள், இனவரைவியல் கூறுகள் முதலியவற்றை இக்கதைகள் மிகுந்த விழிப்போடு தவிர்க்கின்றன. அவை நவீனத்துவத்தின் ஆவணப்படுத்தல் என்னும்  நுண்ணதிகார வெளிச்சத்திலிருந்து தப்பி தன்னை மென்மேலும் மர்மப்படுத்திக் கொள்ள விழைகின்றன எனலாம். இதனால் இக்கதைகளில் எந்த ஒரு தனிப்பட்ட நில பண்பாட்டுக் குறிப்புகளையும் காணல் அரிது. மலை , நகரம்,  ஊர், ஆகியவை எப்போதும் பெயர்களின்றியே வருகின்றன. கதையைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியையோ பண்பாட்டு குழுவை யூகிக்கும் தடயங்களை அவை திட்டமிட்டு அழித்துவிடுகின்றன.   ஏனெனெறால் இக்கதைகள் அடையாளங்களைத் தாண்டி சாரங்களையே நாடுகின்றன. நிதர்சனமான யதார்த்தம் சார்ந்த அடையாளங்கள் மீது கதைசொல்லிக்கு எப்போதும் ஒவ்வாமை இருக்கிறது. ஒருவகையில் யதார்த்தம் , தூல அடையாளங்கள் இழற்றின் அழுத்தம், சலிப்பிலிருந்து  அவை தப்பித்துகொள்ள ஒரு குறிப்பீடுகளற்ற சுதந்திர வெளியை நாடுகின்றன. கதை மாந்தர்கள் கூட வழமையான பெயர் அடையாளங்களில் வருவதில்லை.  குக்க சீ, டிம்பி, ன்யாக்,  தேடூ  போன்ற விசித்திர ஒலிக்குறிப்புத் தன்மை கொண்ட பெயர்களே  பெரிதும் புழங்குகின்றன. இவை  நடப்பில் இல்லாத  புனைவார்த்தமான பெயர்கள். பழங்குடி மனதின் உள்ளதிர்வு கொண்டவை. அவரது டிஜிருடுவின் பிரபஞ்ச ஒலித் தன்மையும் மொழி கடந்த தன்மையும் இப்பெயர்களுக்கும் உண்டு.   ஆசிரியன்- வாசகன் இருவருக்குமே  இந்த ஒலிப்புத் தன்மை மிக்க பெயர்களின் மனவெழுச்சி,  புனைவுத்தன்மை, மந்திரத் தன்மை  ஒரு விடுதலையும் எடையின்மையும் அளிப்பதாக  உள்ளது. பெயரிடுதல், மொழிப்படுத்தல் என்பதே  அதிகார உள்விழைவு கொண்டதுதான், ஒன்றை அறிதல் என்பதே அதை அகப்படுத்துதல் என்னும் அதிகாரவியலாகவே வரலாறு கட்டமைந்துவந்துள்ளதை இது உணர்த்திவிடுகிறது. “ பழங்களைப் பெயர் சொல்லி அழைப்பதினால் அவை சீக்கிரமாக அழிந்துவிடுகின்றன. கானகத்தில் சில இலைகள் பெயர் சொன்னால்  தம் இயல்பை இழந்து விடுகின்றன” போன்ற வரிகளினூடாக  சொற்களின்  வரலாறுகள் காலியாக்கப்பட்டு  ஆவிகளை ன்யாக் என அதன் பொருண்மையிலேயே கண்டடையும் தருணங்கள் சித்திக்கிறது.
இவரது  பல கதைகளில் தொன்மப் புனைவுருவாக்கம்  நிகழ்வதைக் காணலாம்.  தொன்மங்கள் கூட்டு அனுபம், கூட்டு நினைவிலிருந்து  பல தலைமுறைகள் வழி  மெல்ல பரிணமிப்பவை. தொன்மங்கள் வரலாற்றில் உருவாகும் ஒரு விரிந்த கால ஓட்டத்தை ஒரு கதைக்குள்ளேயே நிகழ்த்தி விடுகிறார் அம்பாயிரம்.  ( சிறுகதை, நாவல் என்னும் ஐரோப்பிய பாகுபாட்டுக்கு அப்பாலன சாத்தியங்கள் கீழைத் தேயம் சார்ந்த புனைவுகளுக்கு உண்டு என்பது பரிசீலிக்கத்தக்கது) ஒரு சம்பவம் அல்ல , அது பலரது நினைவின் வழி எப்படி  பல்வேறுபட்ட பாட பேதங்கள் கொண்ட தொடர் புனைவாக , நிகழ் கதையாக  உருமாறுகிறது என்பதிலேயே இத்தொகுப்பின் கதைகள் குவியம் கொள்கின்றன.  அதனால் இவை ஒற்றை கதை என்பதாக அல்லாமல், கதைகளின் கதைகளாக, ஒரு தொடர் வழக்காறு போல  உரையாடுகின்றன.  அதனால் பக்க அளவில் சிறிய கதையாக இருந்தாலும் அதன் புனைவுக் களத்தில் அது ஒரு பரந்த சொல்வெளியாக, வாசிப்பில் ஒரு  நெடிய புராண கதையாடலை செவி மடுத்ததான ஒரு விரிவு நிகழ்கிறது. ஈட்டி, க்காக்கா , தேடூ, மண் யோணி, வழக்கு எண் உள்ளிட்ட அனைத்து கதைகளிலும் இச்சாயலைக் காணலாம். ( இந்த தொன்ம உருவாக்கம்,  தொன்ம புனைவு என்பது  வழமையான தொன்மம் என எடுத்துக்கொள்ளாது அது ஒரு புனைவு பாவனை, நாட்டார் கதைக் கூறுகள் இங்கு ஒரு பாவனையாக வரித்துக் கொள்ளப்பட்டுள்ளன என அணுகலாம்). உண்மையின் பன்முகத்தன்மை, உண்மைக்கும் புனைவுக்குமான வலுவற்ற கோடு, புனைவு உண்மையினும் தீவிர உண்மையாக , வேறொரு மெய்ம்மையாக உருக்கொள்ளும் விஞ்ஞானத்தை பாரம்பரிய கதை முறைகளின் இயல்புகளோடு வசப்படுத்தியுள்ளார் அம்பாயிரம். தொகுப்பின் இறுதிக் கதையாகிய வழக்கு எண்ணை இத்துடன் இணைத்து வாசிக்கலாம்.
            இந்த தொகுப்பில்  கதைகள் முடிக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்த்தால் அவை   நவீன கதை சொல்லல் மரபிலிருந்து துண்டித்துக்கொள்ள விரும்புதை வெளிப்படையாகக் காணலாம். பெரும்பாலான கதைகள் தொன்மக் கதைகள் போன்றே முழுமையாக சொல்லி முடிக்கப்பட்ட தொனி கொண்டுள்ளன.  திடீரென தொடங்கி, அந்தரத்தில் முடிந்துவிடும்  நவீனத்துவ அம்சத்தை அவை நிராகரிக்கின்றன. கதைகள் பெரும்பாலும் ஒரு மர்மத்தை சுற்றி சுழல்கின்றன. இறுதியில் ஒளி பரவுகிறது. முடிச்சு அவிழ்கிறது. அவை  தொடக்கத்திலும் முடிவிலும் நிறைவை அடைந்துவிட்ட , என்றோ எப்பொதோ ஏற்கனவே சொல்லி முடிக்கப்பட்டுவிட்ட  மூதாதைக் கதைகளை நினைவுறுத்துகின்றன. தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்த தொனியோடு மீண்டும் கதையாடத் தொடங்கும் சுழல் வட்டத் தன்மையும் பெற்றுவிடுகின்றன.
            உலகமயம்,  நுகர்வியம், சுரண்டல்கள்  இவற்றுக்கு எதிரான அரசியல், கலை முன்னெடுப்புகளும் கூட  அவற்றின் கூறுகள் விரைவாக உள்வாங்கப்பட்டு  நேர்த்தியான பண்டங்களாக மீண்டும் சந்தைக்கு வருகின்ற  சூழலையும்  இக்கதைகள் சொல்லி விடுகின்றன. க்காக்கா, பனம்பூல் போன்ற கதைகளில் அது சார்ந்த அங்கதம்  துல்லியமாக வைக்கப்பட்டுள்ளது. அத்தொடர்பிலேயே சுட்டப்பட வேண்டிய இத்தொகுப்பிற்குப் பிறகு வந்த  ’நாய் டாக்டர்’  கதை சமகால தமிழ்ப் புனைவில் அரிய ஒரு நிகழ்வு. மிகப் பெரிய வதையுறலுக்கு உட்படாமல் இக்கதையிலிருந்து ஒருவன் தப்பித்து வெளியேறுவது கடினம்.   நாய்களை முற்றுறுவகாமாகக் கொண்டு இன்றைய உலக அரசியலின் சகல விளையாட்டுகளுக்குள்ளும்,   நம் மீது நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா வன்முறைகளுக்கும் இக்கதை குறுக்கு வெட்டாக பாய்ந்து விடுகிறது.  நாய்களின் சாதி விந்துகள் தூர நாடுகளுக்கு விமானங்களில் செல்வது ஓர் உச்சபட்ச உருவகம்.  குமார் அம்பாயிரத்தின் கூறுமுறை நவீனத்துவ உபகரணங்களை மறுதலித்து  காலதீதமான மனித அறிமுறைகளின் இயல்பூக்கங்களை கிளர்த்துகிறது. அது ஒரு விதத்தில் நவீன அறிதல்களின் போதாமைகளை உணர்த்தி அதற்கும் அப்பாலான புனைவுச் சாத்தியங்களைத் திறக்கிறது. அதேசமயம் அதன் கதைப் பொருள்கள் எரியும் மிகச் சமகால நிதர்சணங்கள் தான். அவ்வகையில் இன்றைய புனைவில் கூரிய அரசியல் பிரதிகளாக அவை வைக்கப்பட்டுள்ளன. சமகால நிதர்சனத்தின் மீதான ஊடக, செய்தி, தகவல் தொழில்நுட்ப தினசரி ஞாபகத்திலிருந்து அதன் எல்லைகளை மீறாத இடை நிலை யதார்த்த புனைவுகளிலிருந்து துண்டித்து ஒட்டுமொத்த வரலாற்றுக்குள்ளிருந்தும் மொழிக்குள்ளிருந்தும் கதைசொல்லத் தொடங்குகிறது. அதில் நிதர்சன அடையாளங்கள் யாவும் புனைவின் அசாத்தியமான அறிதல்களுக்குள் உண்மையினும் அதிதீவிர உண்மையின் இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றன.                   


No comments:

Post a Comment