Tuesday, March 19, 2019

புனைவு ஓர் அறிவுஜீவித வினைபுரிவாக : மனிதவாத மையம் விலகிய சாத்தியங்கள்:



புனைவு ஓர் அறிவுஜீவித வினைபுரிவாக : மனிதவாத மையம்  விலகிய சாத்தியங்கள்:
(பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் கதைகள் குறித்து)
                                                                              : பிரவீண் பஃறுளி

( கல்குதிரை இதழில் வெளியானது) 

புதுக்கவிதை என்ற இடத்தில் நவீன கவிதை என்ற சொல்லும்  சிறுகதை, நாவல் என்ற இடத்தில் புனைவு என்ற சொல்லும் தன்னியல்பாகப் புழங்கத் தொடங்கியதன் பின்னான   தொண்ணூறுகளின்  உருமாற்றங்களுக்குள் சாராமாக நின்றவை  எவை.   எழுத்தின்  பிரக்ஞை சுயமையிலிருந்து  பிறிதின் நிலைகள் நோக்கி நீர்மமடைந்ததும்  எழுதுவெளி  பன்மிய அடையாளங்கள், வரலாறுகள், நினைவுத் தொகுப்புகள்  நிரம்பிய கூட்டுப் பிரதியாக உருமாற்றம் பெற்றதும் ஒரு காரணாமகாலாம். ஆசிரிய மையம் கலைந்து எழுத்தும் வாசிப்பும் மயங்கி வார்ப்புற்ற தளங்களும் அதில் ஒரு அம்சம். காலனித்துவ நவீனத்துவம்  கையளித்த  பகுத்தறிவு, நிரூபணவாதம், புலனறி மெய்ம்மை சார்ந்த யதார்த்தவாத மொழிபுகளிலிருந்து விடுபட்டு ஞாபகம் சென்றடையமுடியாத நீட்சிக்குள்ளிருந்து  தொடர்ந்து வரும் மொத்த மொழிப் பிரபஞ்சத்துக்குள்ளும் எல்லையற்ற சுதந்திரத்தோடு  திறந்துகொள்ளும் சாத்தியத்தில்தான்  கதை என்பது புனைவு என்னும் பெரும் பரப்புக்குத் தாவியது.   புனைவுக்குள் கதை ஒரு கூறு மட்டுமே. அது சம்பவ வரிசைகள், மாந்தர்கள், பெயர்கள் போன்ற புறவயமான கதைக்கூறுகளை ரத்து செய்தும், மொழிவெளியாக வேறு வகையில் மானுட கூட்டு நினைவின் அதார தளத்திலும் நிகழும் தன்மையது. நேரடியான இயல் எதார்த்தம் என்னும் சிறுபுலத்திலிருந்து  விடுபட்டு   தொன்மங்கள், வழக்காறுகள்,  நினைவுத் தொகுதிகள்,  கனவுக்கூறு,  மிகுபுனைவு  சேதன அசேதன அறிநிலைகள்  யாவும் சூழ்ந்த  மொழியின் முடிவின்மைக்குள் புனைவு திறந்துகொள்ளக்கூடியது. மொழி என்னும் மாபுனைவோடு கட்டப்பட்டதன் வழி எந்தப் புனைவும் தனக்கு முன்னும் பின்னுமான ஆயிரம் புனைவுகளோடு தொட்டும் ஊடியும் இயங்கியபடியே உள்ளது. இந்நிலையில்தான் வழமையான புலப்பதிவு வாழ்வியல் கதைகள் மொழியினூடாக கிளைக்கும் பெருமரபிலிருந்து துண்டித்துக்கொண்டு மூடிக்கொள்கின்றன.  கதைசொல்லி ஆசிரியனிடமிருந்து முற்றிலும் விடுபட்டுக்கொண்டதும் கதை புனைவாக விரிவு கொண்டதன் ஒரு முக்கிய அம்சம்.  கதைசொல்லியின் தோளிலிருந்து இறங்கி ஆசிரியன் ஒதுங்கிக் கொண்டு புனைவை அதன் கதிக்கு விட்டது முக்கிய இடம். கவிதை எத்தனை புறவய விரிவும் மற்றமை  நோக்கியும் பரந்து சென்றாலும் அதில் கவிஞனின் தன்னிலை இருப்பு  நீடித்துக்கொண்டே இருக்கிறது. புனைவில் ஆசிரிய தன்னிலையின் விலக்கம் என்பது முற்படுநிலையாகிவிடுகிறது .   தொண்ணூறுகள் தொடங்கி தமிழில் கவிதை  தொடர்ந்து புனைவுத்தன்மை அடைந்து வருவதற்குள் மற்றமைகளின் உலகம் நோக்கி கவிதை  ஈர்ப்படைந்தது  ஒரு முக்கிய அம்சம்.  தன் நீக்கம் பெற்ற பிரதியாகப் புனைவைத் திறந்து மற்றமையாகிப் பரந்த அத்தனைப் பிரபஞ்சத் தொகுதிகளுக்கும் இடமளிப்பது புனைவாளியின் பெரும் பொறுப்புமாகிவிடுகிறது.

நவீனத்துவம் அண்டவெளி அறிவியலில்  பூமியை மையமிழப்பு செய்தாலும்  அதற்கு நேரெதிராக அரசியல், தத்துவ, கலைப் புலங்களில் புவிமையத்தையும் , மனிதமையவாதத்தையும்  ஓங்கிப் பிடித்தது. மனித இருப்புதான் நவீனத்துவம் சுமந்த ஆதாரமான விசாரனையாகியது.  மனிதம் கழிந்த இந்த உலகத்தின் பொருட்டு என்ன. மூச்சு முட்டும் அசேதனக் கூட்டங்களின் பேரண்டத்தை புனைவாளன்றி யாவர் திறந்துகாண முடியும். 

தொல்கதையாடியின் மந்திர நாவுகள்


                                                                              
* குமார் அம்பாயிரத்தின் ஈட்டி தொகுப்பு குறித்து 

                                                  பிரவீண் பஃறுளி ( மணல் வீடு இதழில் வெளியானது)
                                             
 குமார் அம்பாயிரம் கதைகள் தொல்கதையாடிகளின் மந்திர நாவுகள் கொண்டவை. அவை தொல்கதைகளின் புதைபடிவுகளுக்குள்ளேயே ஆவிகளை உசுப்பியபடி நவீனத்துவம், சமகாலம்,  வரலாறு போன்ற வரம்புகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய வேறொரு ஞாபக வெளியில்  புனைவுறுபவை.  நிலத்திலும் காலத்திலுமான கோடுகளுக்கு  முன்னும் பின்னுமென ஊசலாடிச் செல்லும் தொன்மங்கள் , வழக்காறுகளின் எல்லையின்மையும்   நாடோடிக் குணமும் கொண்டவை.    நவீனத்துவ அறிமுறைகளால் குருடுமையான  நம் புலன்களைக் கழட்டி எறிந்து  நமது உடலில் பூடகமான  வேறுவித புலன்களைப் பொருத்தக்கூடியவை. அன்றாடம் என்ற நமது அலுப்பூட்டும் தகவல்-விவரண  நினைவை ரத்துசெய்து தொன்மம், புனைவுகள் , ஐதீகங்கள், வழக்காறுகள்  போன்றவற்றின்  தொனிகளை வரித்துக்கொண்டு  , நவீனம் கடந்த அறிதிறன்களின் புதிய ஒரு  மெய்ம்மை கொண்டதாக அவரது கதைகள் இருக்கின்றன. கீழைத்தேய அல்லது உலக தொல்சமூகங்கள்  சார்ந்த தனித்த  மனமும்  அழகியலும் அவற்றை வழிநடத்துகின்றன.  இத்தன்மையில் சமகால சித்திரம்,  நடப்பு அரசியல் கூட அதில் வேறொரு புனைவாக உருமாற்றப்படுகிறது. குமாரின் கதைசொல்லி  நடப்பு உலகைப் பற்றி கதைகூறத் தொடங்கும் போது கூட அதன் புற அடையாளங்கள் , தகவல்  குறிப்பீடுகள் , தினசரித் தன்மை  என்ற மேலோட்டமான படலத்தை  நீக்கி அதன் உலகளாவிய மற்றும்  காலவரையற்ற  பொது  நினைவின் புதையுண்ட அடுக்குகளை அது புனைவாக்கம் செய்கிறது.  இன்றைய புனைவுவெளியில் குமார் அம்பாயிரத்தின்  கதைகள் தனித்துவம் அடையும் இடம்  முக்கியத்துவம் வாய்ந்தது.





கதை என்பது புனைவு என்னும் பரப்புக்குத் தாவியதும்,  படைப்பு பிரதி என்றானதும்,  ஆசிரியனில்  இருந்து கதை சொல்லி தன்னை விடுவித்துக் கொண்டதும் தொண்ணூறுகளில் நிகழத் தொடங்கிய முக்கிய மாற்றங்கள்.