கவிதை ராக்கெட் - ஆலன் கின்ஸ்பெர்க்.
நன்றி : கல்குதிரை
நட்சத்திரம் நாடும் வீரானாய் இரு (கிரகோரி கார்சோ)
பழங்கால நிலவே , என் கண்கள் மனித காலடி பதிந்த புதிய நிலவு
இனியும் மதுமயங்கிய நதியின் துயர்முக ரோமியோ அல்ல அது,
குணக்கிறுக்குப் பியரியின் புருவச்சாயல் அல்ல, பைத்திய நிலா,
ஓ சாத்தியங்களின் விண்ணுலக நிலவே,
நாங்கள் சென்றடைவோம், காலத்தை விஞ்சிய பெயர்களின் ஆதி நட்சத்திரத் திரள்களை.
கடவுள் சாத்தியமானால் எல்லாமே சாத்தியம்தான் என்பது போல,
அப்பாலையான ஒரு வாழ்நிலையைச் சென்றடைவோம்.
நிலாவிய அரசியல்வாதிகள் முடிவிலாத கண்ணீரும் போருமான பூமியைப் பர்க்கிறார்கள்
கூச்சலிடும் ஹாலிவுட் பித்தர்களால் ஒரு விண்மீன் கூட சலனமுறவில்லை என்றாலும்,
ருமானியாவின் எண்ணெய் அதிபர்கள் கொழகொழத்த பச்சைநிற புளூட்டோனியரோடு ரகசிய ஒப்பந்தங்கள் புரிகிறார்கள்-
சனிக்கோளில் அடிமை முகாம்களோ, செவ்வாய் கிரகத்தில் க்யூபப் புரட்சியோ உண்டா?
பழைய வாழ்வும் புதியதும் அருகருகே,
கத்தோலிக்க திருச்சபை வியாழன்கோளில் கர்த்தரைக் கண்டறியுமா?
யுரேனஸில் முகமதுவின் தெய்வீக போதனை உண்டா,
மங்கலான உறைந்த கிரகங்களில் புத்தர் ஏற்கப்படுகிறாரா,
நெப்டியூனில் ஜூராஸ்ட்ரிய ஆலயங்கள் செழிப்பதைக் காண இயலுமா ?
மொத்த பேரண்டம் மீதும் என்ன புதிய பயங்கர திருச்சபைத் திட்டங்கள் இறந்துகொண்டிருக்கும் போப்பின் மூளையில் விரிகின்றனவோ.?
விஞ்ஞானிகளே மெய்யான கவிஞர்கள்,
அவர்கள் நமக்கு நிலவைக் கொடுத்தர்கள்
நட்சத்திரங்களை உறுதிசெய்தார்கள்.
தேவைப்படின், புதிய பிரபஞ்சத்தையே சிருஷ்டித்து அளிப்பார்கள்.
ஓ. ஐன்ஸ்டைன், தங்களுக்கு எனது எரியும் எழுத்துகளை அனுப்பியிருக்க வேண்டும்.
உங்களது ஞான நரையைக் காண நான் புனித பயணம் புரிந்திருக்க வேண்டும்.
ஆ, என் சக பயணியரே ,
ஸ்பினோசா தன் மாய ஒளிவில்லைகளைச் செதுக்கிய
ஆம்ஸ்டர்டாமிலிருந்து, பிரபஞ்சப் புள்ளியிலிருந்து உங்களுக்கு ஒரு கவிதையை எழுதுகிறேன்.
வெகு காலம் முன்னதாக,
வெகு காலம் முன்னதாக உங்களுக்கு கவிதை எழுதுகிறேன்.
ஏற்கனவே எனது கால்களை மரணம் வந்து அரவணைத்தது..
இங்கு அடையாளமிலாது நான் வெறுமையாக இருக்கிறேன்.
உடலில்லாது
மென் காகிதத்தில் பதியும் பேனா மசியின் மெல்லிய கருங் கோடுகள் மட்டுமேயாக.
நட்சத்திரத்தோடு நட்சத்திரம் உரையாடுவது போல ,
சூரிய ஒளியின் எண்ணிலாத கதிர்கள்
ஒரே அனந்த நினைவைச் சுமப்பது போல,
விட்மன் துஞ்சியிருந்த பிரபஞ்சத்தின் அதே சுழியில்
பிளேக்கும் ஷெல்லியும் கண்டார்கள்
ஒரு நட்சத்திர கோவிலில் குடிகொண்ட மில்டன் தன் அந்தகத்தில் யோசித்தபடி சகலத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதை--
அறியப்படாத ஒரு நிலவின் என் அன்புச் சகோதரர்களே,
இப்போதாவது உங்களிடம் நான் பேசமுடிகிறது.
துடிப்பான நிஜ ஜீவன்களே, புளோட்டோனிய நித்திய மூடுபனிக்குள் ஏதோ ஒரு ரூபத்தில் குந்தியிருப்போரே
நானும் மற்றொரு நட்சத்திரம்.
எனது கவிதைகளை நீங்கள் உண்பீர்களா, வாசிப்பீர்களா ?
ஒளியற்ற பக்கங்களை குருடானா அலுமினியக் தகடுகளால் துழாவுவீர்களா ?
கனவு காண்பீர்களா ? அல்லது உதாசீனமான சோம்பிய உணர்கொம்புகளால்
தரவுகளை ஏற்கவும் மொழிமாற்றமும் புரிகிறீர்களா? உங்கள்
மலர்போன்ற பச்சை ஏற்பி விழிக்கோளங்களில் நான் ஏதும் அர்த்தப்படுகிறேனா ?
உங்களுக்கு கடவுள் பற்றிய தரிசனங்கள் உண்டா?
இலட்சக்கணக்கான சூரியர்களால் சூழப்பட்ட உலகில் சூரியகாந்திகள் எத்திசை கண்டு திரும்பும் ?
இது எனது ராக்கெட் , எனது சுய அகத்தின் ராக்கெட்,
எனது தகவலை மேலே அப்பாலைக்கு ஏவுகிறேன்
அங்கு எவராவது என்னை செவிகூர்வார்கள்.
எனது அழிவிலாத நித்தியத்துவம் என்பது
எஃகு இல்லாமல், கோபால்ட், பாசால்ட், வைரம், பொன் அல்லது பாதரச நெருப்பு ஏதும் இல்லாமல்
கடவுச்சீட்டுகள், ஆவணப் பெட்டிகள், காகிதத் துண்டுகள், வெடிமுனையகம் ஏதும் இல்லாமல்
கடைசியாக என் சுயமே இல்லாமல்
தூய சிந்தனை ரூபமான தகவல்,
சர்வ இடங்களிலும் ஒன்றென்றே இருக்கும் அந்தத் தகவல்,
தனக்காகக் காத்திருக்கும் எந்தக் கோளிலும் தரையிறங்க எனது ராக்கெட்டை ஏவுகிறேன்.
இயன்றால், பொருள்மயம் அற்ற இன்சுவை மெய்யுணர்வுக் கோள்களில்
அல்லது
மரணம் ஒளிப்படம் ஓட்டிக்காட்டும் நான்காம் பரிமாணக் கோள்களில்,
பணிவுற தாவரங்கள் பண்டைய இயற்பியலை உரையாடும்,
தருக்கள் கவிதைகளை உற்பத்தி புரியும் கோள்களில்.
தனது பொன்மய சட்டைப் பையில் ஒரு கவிதை வந்து தரையிறங்கிட
பிரபஞ்சத்தின் மகத்தான அந்த சித்தம் அமர்ந்து காத்திருக்கும்
இறுதிக் கிரகத்தில்,
மற்ற குறிப்புகள், காதல் கடிதங்கள், காதல் பெருமூச்சுகள், முறையீடுகள்,
நிராசைகளின் அலறல் இசையொலிகள்,
தவளைகளின் உச்சரிக்கவியலாத இலட்சக்கணக்கான மனவோட்டங்கள்.
இவற்றோடெல்லாம் இனைந்துகொள்ள எனது கவிதையை அனுப்புகிறேன்.
எனது தலைமயிர், விந்தணு, அல்லது சரீர அணுக்களை விட
அதியற்புத வேதிமங்களால் ஆன ராக்கெட்டை அனுப்புகிறேன்,
எனது விருப்புகளுடன் மேல் நோக்கிப் பறக்கும் எனது அதிவேக சிந்தனை,
பிரபஞ்சத்தைப் போல உடனடியானது, ஒளியை விஞ்சும் வேகெமெடுப்பது,
மற்ற எல்லா வினாக்களையும் முழுமைபெறாது விட்டுவிட்டு ,
தற்போதைக்கு
பூமியில் எனது இருள்குவிந்த படுக்கையில் துயில்கொள்ளத் திரும்புகிறேன்.
