Wednesday, June 4, 2025

கோர்கனாயிட் , அறிவியல் புனைவு


கோர்கானாயிட் : 
லீனா க்ரோன்.

கோர்கனாயிடின் முட்டை, நிச்சயமாக , வழவழப்பானது அல்ல.  கோழி முட்டையைப் போலில்லாமல், அதன் புறப்பரப்பு  புலப்படத்தக்க வகையில் கரடானது. அதன் சிவந்த தடித்த சருமத்துக்குக் கீழே, விரல்களை நினைவூட்டும் திடமான இழைகள் போன்றவை அடர்ந்துள்ளன. அவை இளக்கமான , பல கணுக்களாலான  விரல்களின் பின்னலாக , அல்லது ஒரு முஷ்டிபோல நெரிபட்டு உள்ளன.   

ஆனால், அந்த விரல்கள் என்னவாக இருக்கக் கூடும். ?

அது ,கோர்கனோய்டின் கருவைத் தவிரவும் வேறில்லை.

ஏனென்றால், கோர்கனாயிட் இரண்டு திரிகளால் ஆனது. ஒன்று  தன்னை ஒரு வளையமாக  திருகிச் சுருண்டு  கொள்கிறது. மற்றொன்று தன்னோடே பிணைந்துகொள்வது போல ஒரு சுருளாக அதன் மீது சுற்றிக் கொள்கிறது.  ஓடுகளிலிருந்து உடைந்து அபோதுதான் வெளியேறிய கோர்கனாயிடுகள்  வெளிறியும் சிவப்பு வண்ணக்  கோடுகளும் கொண்டுள்ளன.    அந்த வண்ணப் பூச்சு  நகரின் எந்த சிறுகடையிலும் கிடைக்கும் பெப்பர்மிண்ட் மிட்டாயைப் போல இருக்கிறது. 

முதிர்ந்த கோர்கனாயிடில் அந்தக் கோடுகள் அடர்சிகப்பாகின்றன.   அது குருதிச் சிவப்புக்  கருவிழியின் இமைகளற்ற பெரிய விழிக்கோளத்தை உருவாக்குகிறது. 

நான் ஒரு தடிமனான தோலைப் பற்றிச் சொன்னேன். ஆனால் நிச்சயமாக அது  துல்லியமான விவரணை கிடையாது.  சொல்லப்போனால் அது முற்றிலும் பிழையானது.   நீங்கள் எளிமையாக அந்த முட்டை ஓடு விலங்குத்தோல் போல் உள்ளது என புரிந்துகொள்கிறீர்கள். அது உண்மையில் தோல் அல்ல, மூட்டுக் காலிகளின் புறவோடு போன்றதோ , சுண்ணச்சாந்தோ இல்லை. அல்லது வேறெதுவோ ஒரு வஸ்துவும் அல்ல. குறித்துக் கொள்ளுங்கள் : அது எந்த ஸ்தூலப் பொருளாலும் ஆனது அல்ல. இந்த ஜீவிகள் உண்மையில் உயிர்க்கூறு கொண்டவை அல்ல. அல்லது உயிர்க்கூறு அற்றதும் அல்ல. ஏனென்றால் கோர்கனாயிடுகள் அருவமானவை. அவை  கணித இருப்புகள்.  என்றாலும்  அவை சடப் பொருள் போன்றே புலப்படத்தக்கவை. அவை நகர்கின்றன. இணை சேர்கின்றன, நமது  கணினி முனையங்களில் பெருகுகின்றன.  அதன் சகாக்கள், நமது கணினித் திரைகளில் நீடிக்கின்றன. அவற்றின் சந்ததிகள் நொடிகளில் முதிர்ந்து பெரியவர்களாகின்றன.  ஆனால் அவை எப்படி இருப்புகொள்கின்றன ,  அப்படியென்றால் எப்படி உயிர்த்திருக்கின்றன, என்பது முற்றிலுமாக ஒரு தனிக்கேள்வி.   நாமறிந்தவரை கோர்கனோயிட்  வெறுமனே பிரத்யேகமாக அது எப்படித் தோன்றுகிறதோ அப்படியே உள்ளது. 

 ஆனால், நான் என்ன சொல்கிறேன்.  நான் சொன்னதிலிருந்து  நானே முரன்படுகிறேனே. கோர்கனாயிடின் முட்டை ஓடு தோல் போல உள்ளது, ஆனால் தோல் போலவும் இல்லை  என நான் சொல்லவில்லையா. இங்கு என்னைத் தொந்தரவு செய்யும் ஏதோ ஒரு  முரண் உள்ளது.   ஒருவேளை,  கோர்காயிட் தான் எப்படித் தோன்றுகிறதோ அப்படியேதான் இருக்கிறது என நான் சொல்லியிருக்க வேண்டும்.  அது நிஜத்தில் எப்படி உள்ளது என எவரும் சொல்லத் துணிவதில்லை. 

பார்வைக்கு புலப்படக்கூடிய எல்லாமே ஸ்தூலமானது அல்ல. கோர்கனாயிடுகள் பார்வைக்குத் தெரிகின்ற ஆனால் அருவமான ஜீவிகள்.  அவ்வகையில்  எந்த ஒரு தனிமனித மனத்திலும் தூலப்பொருளாக இல்லாமலே தோன்றும் மனப்படிமங்கள், கனவுருக்கள்  போன்ற வகையைச் சார்ந்தவை கோர்கனாயிடுகள்.  ஆனால் மறுபக்கம், நாமோ   புலப்படக்கூடியவர்களாகவும் தூலப்பொருளாகவும் இருக்கிறோம்.  இதனோடு , விண்பௌதீகவாதிகள் சொல்வது போல  புலப்பாடு இல்லாத பொருள்களும்  இப்பிரபஞ்சத்தில் இருப்பு கொண்டுள்ளன. அவர்கள், மொத்த பிரபஞ்சமும் சில்லிட்ட , புலப்படாத இருண்ட  பருப்பொருளால் ஆனது என்கிறார்கள். அவை புலப்படக்கூடிய பருப்பொருளை  விட  முடிவிலாத தொகுதி,  என  நம்புகிறார்கள். இருண்ட மறைநிறைக்கு  நடுவே புலப்படக்கூடிய  பருப்பொருளின் சன்னமான இழைகள் மினுங்குகின்றன. .. 

ஆனால், கண்ணுக்குப் புலப்படாததும் சூக்குமமானதுமான அதனைப் பற்றி அவர்களும் ஏதும் அறியவில்லை. அது பூரண சாத்தியமற்றது. வகைதொகைக்க முடியாதது. அறியமுடியாதது மடுமல்ல, அறியப்படமுடியாததும்.  நம்மால் அவ்வகை ஜீவிகளை உணர முடியாது, ஆனால்  அவற்றின் இருப்பை  மறுப்பதற்கு அது காரணமாகாது. 

• • • •

கோர்கனாயிட் மடுமன்றி,  டுயுபனைட், பாக்மாண்டிஸ், லிஸாஜூன் ஆகியவற்றின் வளர்ச்சியையும்  கண்டறிய எனக்கு வாய்த்திருந்தது. டியூபனைடு , இடையூழி காலத்து, சில அம்மோனைட்டுகள் – மெல்லுடலிகள்  போல தோற்றமளிக்கிறது.  அது அம்மோனிய கடலில்  வசிக்கும்  நிப்போனைட் மிராபிலிஸ் எனும் தோடுடலிகளுக்கான ஒரு கணித மாதிரி.  

லிஸாஜூனின் கோள உருக்கள் என்னை மிகவும்  மயக்கின.  நாம் விரும்பும்போதெல்லாம்  , லிஸாஜூனின் துல்லியமான மலர்க் கோளங்கள்   நமது கணினி முனையங்களில் மலர்கின்றன.  அவை சீரற்ற சுருள்களாக வளார்கின்றன. அதில், ஒவ்வொரு ரூபத்தின் உருக்கோடும் இறுதியில் தனது தொடக்கப் புள்ளிக்கே திரும்புகிறது. பகா எண்கள்  வினைப்பாட்டுக்கு வரும்வரை வளைவு எப்போதும் மூடப்பட்டிருக்கும்.  அது மிக அரிதாகவே நிகழ்கிறது.  

ஓ, லிஸாஜூனின் மணமற்ற வடிவியல் எத்தனைத் திகைப்பூட்டும் வனப்பு ! அதன் வனப்பு இயற்கையானது அல்ல,  அரூபத்  தேவையின்  பிசிரற்ற தர்க்கத்தின் வசீகரம். அதனுடன் மனிதன் சார்ந்ததையோ பருப்பொருளையோ ஒப்பிட முடியாது.  இருந்தாலும்  இந்த  உருவங்கள் , பௌதீக வாழ்வு மற்றும் இயற்கையான வளர்ச்சிமுறையின் வெறும்  கணித நகல்களே.    

அந்தக் கழகத்தில் உள்ள  பலரும் அப்படித்தான்  நினைத்தார்கள் : கோர்கனாயிட், பாக்மாண்டிஸ், லிஸாஜூன் ஆகியவை,  அணுவின்  கட்டமைப்புகளைப் பிரதி செய்யும் உருமாதிரிகள் அன்றி வேறில்லை.  ஆனால்,  அவை ஏற்கனவே உயிர்கொண்டிருக்கவில்லை என்றாலும், உயிர்த்தன்மையிலுருந்து ஜட இருப்பைப்  பிரிக்கும் விளிம்பைக் கடந்துசெல்லும்  எத்தனத்தின் செயல்முறைமையில் அவை உள்ளன ,  என்றே வேறு சிலர் நினைத்தார்கள். 

நீங்கள் அவைகளைப் போல இருக்க விழைகிறீர்களா?  மற்றொரு உதவியாளரான ரோல்ஃப், ஒருமுறை  என்னிடம்  கேட்டார். 

 “ என்ன சொல்கிறீர்கள், அவைகளைப் போல என்றால், எந்த அர்த்தத்தில் ?”

 “சுய விருப்புறுதி இல்லாமல்” என்றார் ரோல்ஃப்.  “அவை எப்போதுமே ஒரு சுயதெரிவைச் செய்ய வேண்டியதில்லை. அது ஒரு பெரும் நலம். அவைகள் தாம் செய்வதைச்  செய்ய வேண்டும்.   தாம் செய்வதைத் தவிர  வேறெதையும்  அவை விரும்புவதில்லை. 

 “ உங்கள் சொல் திகைப்பளிக்கிறது” என்றேன்  ரோல்ஃபிடம்.” அவைகளுக்கு விருப்பு வெறுப்பு இல்லையென உண்மையாக நினைக்கிறீர்களா? அவைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட விருப்புறுதி இருக்கலாம் ? ”

   “நான் சொல்ல வருவது, அவைகளுக்கு செயல்பாடும் விருப்புறுதியும் ஒன்றுதான் ” என்றார் ரோல்ஃப்

” அவைகளுக்கு நம்மைப் போல  அக முரண்பாடு இல்லை , என்கிறீர்களா? இருப்பினும் , தாங்கள் சுயதெரிவுடன் செயல்படுவதாக அவை தம்மளவில்  நம்பக்கூடும் இல்லையா ” 

அவர் தோள்களைக் குளுக்கியபடி, கிளம்பினார். அவரது வார்த்தைகள்  என்னை ஆழமாகத் தொந்தரவு செய்தன.  

முன்னொருமுறை ,  அடிமரப்  பைனில் அமர்ந்திருந்த  கரிய  அந்துப்பூசி ஒன்றைப் பார்த்த  ஞாபகம் வந்தது.  அக்கணம்,  ஒரு அந்துப்பூச்சிக்கு சரியான தெரிவுகளை எடுக்க எப்படித் தெரிகிறது என என்னை நானே கேட்டுக் கொண்டேன்.  அது எப்போதுமே எப்படி கரிய பட்டைகளாலான அடிமரத்தையே தெரிவு செய்கிறது.. வெளிர் நிற  பிர்ச் மரத்தை தேர்வு செய்வதில்லை. ? அந்த அடிமரம்  எந்த நிறத்தில் உள்ளது என  அது அறிகிறதா.  ?

அந்துப் பூச்சி தன்னைத் தான் பார்க்கமுடியாது. ஆனால் நம்மால் முடியும்.  ஆனால் அது எப்போதுமே சரியான தெரிவையே செய்கிறது. ஆனால் மனிதர்களால் இயல்வதில்லை.  ஏன் எப்போதுமே காரண அறிவு என நாம் சொல்வதை  விட உள்ளுணர்வு துல்லியமானதாக இருக்கிறது.   மரபியல்வழி உள்ளுணர்வோ, காரணஅறிவின் சாத்தியமோ  நாம், உறுதிகூற முடியாத கோர்கனாயிடுகள், பிழைநேர்விக்காத தன்மையிலும் தமது இருப்பின் பூரணத்துவத்திலும், நம்மை விட அந்துப்பூச்சியையே ஒத்திருக்கின்றன.   

ஆனால், பலநேரம் நாமோ  பாதையைத் தவறவிடுவதற்கு  , நாம்  பிழைசெய்ய சுதந்திர விருப்புறுதி கொண்டவர்கள் என்பதுதான் காரணம். மேலும்  எதிரே இருப்பது என்ன என்பதை விட நாம் நம்மையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம். 

அவைகளைப் போலவே பிழைபாடற்றதாக,, துல்லியமானதாக , அழகானதாக  மாறும் உந்துதலில் கோர்கனாயிடாக, இன்னும் சிறப்பாக, லிஸாஜூனாக உருமாற நான் ஏக்கம்கொண்ட தருணங்கள் நிச்சயமாக உணடு. 

மேலும், நான் அவைகளைப் போல  ஆக  விரும்புவதற்கு மற்றொரு காரணம் :  அவைகளால்  எக்கணத்திலும்  இல்லாது போக முடியும். மீண்டும் முன்போலவே இருப்புக்குத் திரும்ப வரவும் முடியும்.  உண்மைதான்,  கோர்கனாயிடுகளின் அந்த கணங்கள் நம்மால்தான் வடிவமைக்கப்படுகின்றன, என்றாலும்கூட , அதனை அவை அறிவதற்கில்லை.  நமது  வாழ்வில் ஒரு இடைவெளிக்கு நாம் அனுமதிக்கப்படவில்லை.  நாம் நிறுத்தமின்றி தொடர்ந்து வாழவேண்டி  நிர்பந்திக்கப்பட்டவர்கள்.  உறக்கம் ஒரு  நிஜமான இன்மை எனச் சொல்ல முடியாது. அது போதுமானது அல்ல. இரவுகளினூடாக எல்லாமே நிறுத்தமின்றி தொடர்கிறது.  காட்சிகளின்  வெள்ளம் ஓயாமல் பாய்கிறது. கண்களின் தேவையோ, ஒளியோ இன்றி அது மாறுபட்ட சூழமைவுகளில் நிகழ்கிறது என்பது மட்டுமே வேறுபாடு.. இரவு முற்றுபெற்றதும் நாம் நமது பணி மேசைகளுக்குத் திரும்புகிறோம்.  நாம் அப்போது, முந்தைய  மாலையில் உறங்குவதற்கு முன் இருந்த அதே ஜீவியாகத் திரும்பவில்லை.  கனவுகள் கூட நம்முள் மாற்றங்களை ஏற்றியுள்ளன.  நமது மாற்றங்கள முந்தைய நிலைமகளுக்கு மீளத் திருப்ப  முடியாதவை.  ஆனால்  கோர்கனாயிடுகள், ஆரம்பத்திலிருந்தே தொடங்க முடியும்.  இருப்பில் இருந்து மறைந்த அதே புள்ளிக்கு எந்த மாற்றமும் இன்றி திரும்ப வர முடியும்.   

 ஒரு கணம் என்றாலும், , ஒரு விசைப்பலகையின் சொடுக்கலில் திரும்பி வரவே என்றாலும் நான் மறைந்து போவதற்கு, எத்தனை விரும்புகிறேன்..   நமக்கு அந்த தற்காலிகமான மரணம் சாத்தியமில்லை. ஆனால் ஒளிரும் திரை  அணைக்கப்படும்  போது   கோர்கனாயிடுகள், தாம் இருந்த இடத்திலிருந்து   அப்படியே இல்லாமல் போகின்றன.. வேறெங்கும் செல்லாமலேயே.   

ஏதோ ஒரு இடத்தில் இருப்பு கொண்ட  ஒன்று இனி எந்த இடத்திலும் இல்லை என்பதை கிரகிக்கமுடிவதில்லை. ஒருவர் மரித்து விட்டால், அவர் எங்கு போனார் என வினவாமல் இருக்க முடியுமா? 

கோர்கொனாயிடு நோய்படுவதில்லை, மூப்படைவதில்லை, அவை என்றும் மரணமடைவதுமில்லை.  மாமிச சரீரத்திலோ காலத்திலோ வாழாத இந்த சிருஷ்டிகளின் பிரத்யேக பேறு அது. அவை மற்ற  கணிநிரல்களுக்கு மாற்றப்பட்டு , முடிவிலாது  நகலெடுக்கத் தக்கவை.  

ஆனால்,  நிரல்களுக்கு வெளியே  கோர்கனாயிடுக்கு, தன்னளவில் சுயமான இருப்பில்லையா. அணைந்த திரையில் அவற்றை நாம் பார்க்கமுடிவதில்லை என்பதற்கு அப்பால்,  அக்கணம்வரை  அந்தத் திரையில் உயிர்த்திருந்த அதன் அதே வகையான  இருப்பு, பிறகு நீடிக்கவில்லை என்பது நிச்சயமானதா? 

“ என்ன நினைக்கிறீர்கள் , ரோல்ஃப் , அவை விலங்குகளா”  பணித்திட்டம் நிறைவை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், நான் ஒருமுறை கேட்டேன். 

” விலங்குகளுக்கு சரீரம் இல்லையா? திண்மை இல்லையா?” என்றார் அவர் “ அவை விலங்குகளோ தாவரங்களோ இல்லை, அவற்றுக்கு உடல் இல்லை.  நீங்கள் அதனைத் தொட முடியாது.. 

” விலங்கு என்பதற்கு உங்கள் நிபந்தனை அதுதானா? நம்மால் அதைத் தொடமுடிய  வேண்டும் என்பது.. “ 

அவை முப்பரிமாணமாகத் தோன்றுகின்றன, ஆனால் நிச்சயாமக அவை அப்படியில்லை. அவற்றின் வாழ்விருப்பு மெய்யுரு போன்ற ஒரு புனைநிலை என்பது நமது புரிதல். அது  மேலோட்டமானது.   அவை பொருட்கள். அதற்கு மேலானதில்லை. எப்படியிருந்தாலும் அது அப்படித்தான் தோற்றமளிக்கிறது. 

 நான் விரும்பியிருந்தாலும்கூட  கோர்கொனாயிடைப் போன்ற தோற்றநிலை வாழ்வை வாழ்ந்திருக்க முடியாது. அதற்குக் காரணம்,  நான்  “உள்ளார்ந்து சீரானவள்” அல்ல. கோர்கனாயிடுகளுக்கு இருப்பது போல தோன்றும் ஒரு குணம் எனக்கு நிஜமாகவே இருக்கிறது.  அது ஒரு தூலமான இருப்புநிலை ,  சுயவிருப்பு நிலை,  தூலப்பொருளில் பிரிவுபடாது சாராம்சப்பட்ட அதிலேயே கரைந்துவிட்ட  சுயத்துவமும் சுதந்திரமும் கொண்ட நிலை.  இதுதான் புலப்படு பொருட்களை  இருத்தலில்  நிறுத்துகிறது. அவற்றுக்கு கண்டுணரத்தக்க  உருவத்தை, தனித்துவத்தை, ஒப்பீட்டளவிலான  நிரந்தரத்தை   வழங்குகிறது.   அது திசையை சுயமாகத் தெரிவு செய்ய அனுமதிக்கும்  வாய்ப்புநிலை. ஆனால் அந்த அனுகூலம்  இடம் தொடர்பானதில்தான், ஒருபோதும் காலத்தினதில் இல்லை. 

 நான் உண்மையிலேயெ என் வாழ்வை கோர்கனாயிடின் வாழ்விருப்புக்கு மாற்றியிருப்பேனா.  எனது பௌதீக இருப்பை, துரிதப்படும் கணங்களை, அவற்றின் சரீரமற்ற , உள்ளீடற்ற  தனிமைக்கு , தம் பிறழ்மாற்றங்களிலும்  நிலைத்திருக்கும் அவற்றின் அசைவின்மைக்கு ஒப்புக்கொடுத்திருப்பேனா ?

• • • •

 அவைகளது வாழ்வு வெறும் ஒரு நிழல் இருப்புதான், ஒளிவீழ்த்தியில் ஓடும் படங்கள் போன்றது அது,  எனக் கருதிட யார் நமக்கு உரிமையளித்தது. நாம் நேசித்தோம், வெறுத்தோம், அஞ்சினோம், பரிதாபப்பட்டோம் என்பதில்தான், அவற்றிலிருந்து  வேறுபடுகிறோம். நமது சொந்த இருப்பின் நிகழ்வுகள் குறித்து ஓர்மை கொண்டுள்ளோம் என்பதில்தான் அந்த வேறுபாடு.  அந்த ஓர்மையை  எடுத்துவிட்டால்,   நமது வாழ்நிலையையும் அவற்றின் இருப்பையும்  வேறுபடுத்த வித்தியாசங்களே இருக்காது. 

சிலசமயம், நானும் ஏதோ ஒரு வகையில் அவற்றைப் போலவே ஆகிக்கொண்டிருக்கிறேன் என்ற பயங்கர உணர்வு ஏற்படுகிறது.  எனது இருப்பை மனிதன்  என சாரப்படுத்திய கூறுகள் உதிர்ந்து சுருங்கத் தொடங்கியதாக உணர்ந்தேன்.   

 கோர்கனாயிடுகளோடு  நான் நாட்களைக் கழித்திருந்த , அந்தக் குளிர்காலத்தில்,   நான் வீட்டுக்கு வந்தபோது, அவரது  அந்நியமான  பார்வைக்கு ஆளானேன், அல்லது அவரைப் பார்க்கவே இல்லை.   அவர் நகரில் ,  எனக்குத் தெரியாத அறைகளில், நான் அறியாத நபர்களுடன் நாட்களைக் கழித்தார்.  எது  மோசமானது எனத் தெரியவில்லை.  நான்   காத்திருந்தேன் , அவர் வீட்டிற்கு வரவில்லை  என்பதா?  அல்லது அவர்  வீட்டுக்கு வந்தார்,  ஆனால் அங்கு  யாரும் புலப்படாதது  போல                                                                                                                                                        இருந்தது என்பதா ?  எங்களுக்கிடையில் எந்த தொடர்பும் இல்லை.  கோர்கனாயிடுகளை பார்ப்பது போலவே அவரைப் பார்த்தேன். ஆனால் அவர் என்னை ஒருபோதும் பார்க்கவில்லை.  கோர்கனாயிடுகளைப் போல அவரும், எனது இருப்பை  அறியாததது போல இருந்தது.  நானும் அவரைப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டபோது,  நாங்கள் வெவ்வேறு  நிரல்களில் வசிக்கத் தொடங்கினோம்.

உள்ளிருந்து வெறுமையானது  போல எனது வாழ்வு விசித்திரமாக மெலியத் தொடங்கியது. எனக்கு இன்னும் உடல் இருந்தது. அதற்கு நிறை இருந்தது.   நான் தூலத்திலிருந்து  விலக்கம் கொண்டவளாக, அரூபமாக மாறத் தொடங்கினேன்.  ஆனால் அதன் இருப்பை நான் தற்காலிகமாகவே உணர்ந்தேன்.  இந்த நிலவரங்கள், வெளியேயிருந்து புலப்படத்தக்கதாக இல்லை.     நான் கோர்கனாயிடுகளைப் பரிசோதித்தது போல, எனது இருப்பை யாரேனும்  பரிசோதித்தால், அவர்கள் எந்த வேறுபாட்டையும் காண மாட்டார்கள்.  ஆனால் அது குறித்த நானே  அறிந்திருக்கும் வரையில்,  நான் ஒரு கோர்கனாயிட் அல்ல, அது போன்ற ஒன்று தான். 

எனக்கு உடலும்  குரலும் இருந்தது. ஆனால்  எனது உடலால் நான்  எதன் மீதும் தொடவில்லை. எந்த பொருளும் என்மீதும் தொடவில்லை.   எனது குரல் மௌனித்தது,  நானும்  “  தேவனே, நீ இருப்பது மெய்யானால், எனது ஆத்துமாவை இரட்சியும், எனக்கு ஆத்துமா  இருக்கிறதென்றால்” என்ற அந்த புராதன சொற்ளை  கூவிட விரும்பினேன்.

• • • •

கோர்கனாயிடுகள் எப்போதும்  தம் தனி உலகில் வாழ்கின்றன.  அவை நம்மை நெருங்க முடியாது. நாமும் அவற்றை  அணுகிச் செல்ல இயலாது. 

 நாம் அவற்றோடு பிணைப்புகொள்வதில்லை.  நாம் அவற்றை  நிரலாக்கம் மட்டுமே செய்கிறோம்.  நாம் அவற்றின் சிருஷ்டிகர்த்தாக்கள்.  நமக்கு நமது  கடவுளர்களைப்  பற்றித் தெரிந்தது போல அவைகளுக்கும் நம்மைப் பற்றி மிக மங்கலாகவே தெரியும். நாம் கணி நிரல்களை வடிவமைத்திருந்தாலும்,  குறிப்பிட்ட ஒரு கணத்தில் அவை என்ன செய்துகொண்டிருக்கும் என்பதை நாம் முழுமையாகக் கணிக்க முடியாது.  நமது  ஆற்றல்கள் குறித்தோ அல்லது பலவீனங்கள் குறித்தோ   அவை  ஏதும் அறிவதற்கில்லை, காரணம், நாம் அவை வசிக்கும் அதே  காலவெளித் தளத்தில் வாழவில்லை.  அவற்றின் உலகில் ஏதேனும் ஒரு  நிகழ்வுமாற்றம்  நேரும் கணத்தில், அவை  நமது இருப்பு குறித்து ஒரு சூசகாமான அறிதலைப் பெறலாம். அதாவது,  இருபரிமாண பிராணிகள், தங்கள் தட்டை உலகில் , ஒரு கோள உரு மூழ்கிப் பின் மறைவதைக் காண்பது போல இருக்கும், அந்த அனுபவம். 

 நமக்கும் அவற்றுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நான் நேரடியான கேள்வியைக் கேட்கிறேன்.  அவை எந்த அர்த்தத்தில் இருப்பு கொண்டுள்ளன. எந்த அர்த்தத்தில்  வாழ்நிலை கொள்கின்றன.  அந்த கோர்கனாயிட், டியூபனைட், பாக்மாண்டிஸ், லிஸாஜூன்… பார்வையில் மட்டும் புலப்படக்கூடிய  இந்தக் கணிதப் பிராணிகள், முப்பரிமாணமாக தோன்றினாலும் வெறும்  இரு பரிமாணங்கள் மட்டுமே கொண்ட  இவை..  

இருபரிமாணம் மட்டுமே எனச் சொன்னேனா?  அவை எந்த அர்த்தத்தில் முப்பரிமாணியாக இருக்கத் தவறுகின்றன என்று உறுதியில்லை.  நம்மால் கோர்கனாயிடின்  நிறையை அளவிட முடியாதென்றாலும் அவற்றின்  கண அளவைக் கணக்கிட்டுக் கூற முடியும். ஆய்வுக் கழகத்தின்  திட்டத்தைப் பொறுத்தமட்டில் இது எத்தனை அவசியமற்றது என்றாலும் என்னால் பின்வரும் கேள்வியிலிருந்து விடுவித்துக்கொள்ளவே முடியவில்லை.  நனவுநிலை இல்லமலே   நடத்தை  என்பது சாத்தியப்பட்டதா ?   நாம் செய்வது போலவே, தனது தனிப்பட்ட சொந்த  வாழ்வை தான் ஆளுமை செய்ய முடியும் என கோர்கனாயிட் நம்புகிறதா?   அப்படி அது செய்கிறது, அல்லது இல்லை என நிரூபனம் செய்ய வழி ஏதும் உண்டா?

அது உயிருடன் உள்ளதா என ஒருவர் கேட்டால், அதற்கு உண்மையில் என்ன பொருள்?  நான் கேட்கிறேன். அது தனது சுயவிருப்பில்  இருக்கிறதா. அப்படி இருந்தால்தான் அது உயிர் என நான் நம்புகிறேன்.  அதற்கு உணர்வு இல்லை,  வெறுமனே  அரூபமான  தட்டையான ஒரு பௌதீகம் என்றால்  அதனை உயிருள்ளதாக நான் கருத மாட்டேன்.  அதன் இருப்பு நிஜமானதாக இருக்கலாம், ஆனால் அவை உயிர்வாழ்வு கொண்டிருக்கவில்லை. அப்படியானால் அது வெறுமனே ஒரு புறவய பொருள். புறவயமாக அது நிலவுகிறது. !   என்னை விட அது கூடுதல் தீர்க்கத்துடனும் ஐயத்திற்கிடமின்றியும் இருப்பில் உள்ளது.  எனது அக ரூபத்தின் இருப்பை என்னால் எப்போதுமே நிரூபிக்க முடியாது..ஆனால் புற ரூபத்தை எளிதாக அழிக்க முடியும், ஆனால் உருமாற்ற முடியாது.  ஆனால் அது உயிருடன் இல்லை. இல்லை,  அதை நான் மறுக்கிறேன்.   

” உங்களால் முடியாது “ ரோல்ஃப் கூறினார். “ தூல யதார்த்தத்தை விட   செயற்கை யதார்த்தம்  குறைபட்ட மெய்யே என நீங்கள் எப்படி உறுதி கூற முடியும் ? “

 “வாழ்க்கை ஒரு காட்சி அல்ல “ என்றேன் நான். 

• • • •

கோர்கனாயிடுகள்  எப்போதும் தம் சொந்த உலகிலேயே வாழ்கின்றன. மனிதர்கள் தம் மாந்த உலகிலேயே வாழ்கிறார்கள்.  தம் சொந்த இன ஜீவிகள்  இல்லாமல் அவர்களால் இயங்க  முடியாது. ஆனால் ஒரு தனியனான கோர்கனாயிடும் ஒரு கோர்கனாயிட்தான். ஆனால் அனைத்து பந்தங்களிலிருந்தும் துண்டிக்ப்பட்ட மனிதன் அதற்குமேல் ஒரு மனிதன் இல்லை. அவனது வாழ்வு சகவாசிகளுடனான தொடர்பில்  உள்ளடங்கியுள்ளது.

கோர்கனாயிட் !  டியூபனைட் ! பாக்மாண்டிஸ் ! லிஸாஜூன் ! சில வகைகளில் நாம் அவற்றை போலத்தான் இருந்தோம். சில வகைகளில், அவற்றை விட இன்னும் எந்திரத்தன்மாக, அசேதனங்கள் போல இருந்தோம். 

சுயதெரிவுகளுக்கான வாய்ப்பு முடிந்து விட்டது என நிரூபனமான பின்பும், அப்படி ஒன்று எப்போதும் இருந்ததே இல்லை என்றபோதும்,  நாம் மீள மீள ஒவ்வொரு நாளும் அதற்காகக் கனவு காண்பதைப் போல,  சுயதெரிவுக்கான  கனவைக் காண்பதற்கான  சிறிய சாத்தியக்கூறும் அவற்றுக்கிருந்ததா? அங்குதான் மனிதர்கள் தனித்துவம் கொள்கிறார்கள். சுயதெரிவுக்கான சுதந்திரத்தில் அல்ல, அந்த சுதந்திரத்திற்கான கனவில்...  

இப்போதும் சொல்கிறேன்..எனது கையை உயர்த்தி குறிப்பிட்ட அந்தத் திசையில் வெளியே செல்ல  நன் விருப்பம் கொள்கிறேன். நான் கையை உயர்த்தி,  ஒரு அடி எடுத்து வைக்கிறேன்; அப்படி நான் விரும்பியதால் அதனைச் செய்தேனா அல்லது நான் என்ன செய்ய வேண்டுமோ அதனோடு எனது சித்தம் ஒத்திசைந்திருந்ததா  எனத் தெரியாமலே அதைச் செய்கிறேன்..

இப்போதும் கேட்கிறேன். நாம் எந்த அர்த்தத்தில் இருப்பு கொண்டுள்ளோம்.  புலப்படுபவர்களாகவும் புலப்படாதவர்களாகவும் இருக்கும் நாம் ?  யதார்த்தத்தின் எந்த மட்டத்தை  நாம் புலப்படுத்துகிறோம். ? அது எப்போதும் ஒரே மாதிரி உள்ளதா, அல்லது நாம் அறியாத வகையில்  சிலநேரம்  உருமாறுகிறதா ? 

 நாம் எத்தனை சுதந்திரமானவர்கள்? எத்தனை சார்ந்திருப்பவர்கள் ?

நாம் என்றும், எப்படி  இருப்பிலிருந்து இல்லாமல் போக முடியும் ?

….

தமிழில் : பிரவீண் பஃறுளி

நன்றி : கல்குதிரை


லீனா க்ரோன் 

லீனா க்ரோன்

லீனா க்ரோன் (1947) ஃபின்னிய மொழியின் தனித்துவமான ஓர் இலக்கிய அடையாளம்.  ஜடத்திற்கும் உயிர்க்கூறுக்கும், சேதனத்திற்கும் அசேதனத்திற்கும், தூலத்திற்கும் புனைரூபங்களுக்கும் இடையிலான சன்னமான வாழ்நிலைகளை அவரது எழுத்துகள் விசாரனைபுரிகின்றன. செயற்கை நுண்ணறிவின்  விவேகத்துக்குள்ளும்,  பொருட்களின் துயில்நிலைக்குள்ளும் புகுந்து மனிதனையும் மனித உலகையும் அவை வேறு விசித்திரத்தில் அறிகின்றன. மனிதர்களுக்கும்  எந்திரங்கள், செயற்கை ஜீவிகளுக்குமான  மனபந்தங்களின் இருப்பியல் தளங்கள் குறித்து  மிக  முன்னோடியான கதைகளை எழுதியவர் லீனா க்ரோன்.  அறிவுக்கூறும்  புனைவும் ஊடிழைந்து செல்லும், கட்டுரையும் புனைவும் விரவியது போன்ற மயக்க நிலை கொண்டவையாக அவரது வடிவம்  உள்ளது.   

Tainaron, Pereat Mundus , Sphinx or Robot ஆகியவை அவரது புகழ்பெற்ற நாவல்கள். சிறுகதைகள்,  நாவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், கட்டுரைகள் எனப் பல வகைமைகளில் கணிசாமாக எழுதக்கூடியவர். துண்டு துண்டான புனைவுத் தீற்றல்கள்  தம்மளவில் ஒரு தனித்துவம் கொண்டும், மறுபுறம் முழுமையில் இழைந்தும்  பனுவலாவதன்  ‘மொஸைக்’ – கூட்டிழைவு வடிவியல்பு  கொண்டவையாக அவரது  நாவல்கள் கருதப்படுகின்றன. ஃபின்லாண்டியா, ப்ரோ ஃபின்லாண்டியா, வாழ்நாள் பணிக்கான அலெக்ஸிஸ் கிவி  உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். ப்ரோ ஃபின்லாண்டிய விருதை பின்னர், அறம்சார்ந்த காரணங்களின் பொருட்டு  ,  தன் எதிர்ப்பைப் பதிவு செய்யும் முகமாக திரும்ப அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் க்ரோனின் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 

Gorgonoid என்ற  இப்புனைவுப் பகுதி , Mathematical creatures or shared Dreams  என்னும் அவரது நாவலில் இடம்பெற்றுள்ளது. ( இந்நாவலே, 1993 இல் பின்லாந்தின் மிக உயரிய ஃபின்லாண்டியா விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது) .. இங்கு கோர்கனாயிட் சிறுகதையின் மொழிபெயர்ப்புக்கான ஆங்கில மூலம்,   ANN & JEFF VANDERMEER தொகுத்த புகழ்பெற்ற , The Big Book Of Science Fiction என்ற  விஞ்ஞானப் புனைவு  நூலில் இருந்து பயன்கொள்ளப்பட்டது. 

 




No comments:

Post a Comment