Wednesday, July 7, 2021

தி.ஜானகிராமனின் அவலும் உமியும் -பிரவீண் பஃறுளி

 தி.ஜானகிராமனின் அவலும் உமியும் :  வீழ்ச்சிக்கும் மீட்சிக்குமான தத்தளிப்பு 



   நன்மை தீமை, தூய்மை மாசு போன்ற எதிரிடைகளை பாவித்து அதில் சலித்தலாக மனித இருப்பு தன்னை சாரப்படுத்திக்கொள்கிறது. உமியென்றுமான அவலென்றுமான இருமைப்பட்ட ஒரு பிளவில் வைத்து மனதின் ஒரு தத்தளிப்பை ஜானகிராமனின் இக்குறுநாவல் திறந்துபார்க்கிறது. தூய்மை, மீட்சி நோக்கி அந்த மனதுக்கு ஓயாத எம்புதல் உண்டு. ஆனால் நிதர்சனத்தில் அது எப்போதும் பாதாளங்களில் சரிந்து விழுகிறது. தஸ்தாவஸ்கியின் அடி உலகக் குறிப்புகளில் மனிதன் வன்மத்தை விழைபவன், தன் ’உன்னதத்துக்கு’ நேரெதிரான குலைவை நோக்கி வசீகரிக்கப்படுபவன் என்ற காட்சி இருக்கிறது. ஜானகிராமன் போன்ற ஒரு படைப்பாளியிடம் வாழ்வின் அழகும் மேன்மையும் மகத்துவம்கொள்ளும்போதே உள்ளே பொதிந்திருக்கும் விபரீதமும் மனிதனின் விசித்திர இருளும் கூட எதிரிடையாக வைக்கப்படுகிறது. மனிதன் தன் கருத்து நிலையில் பாவிக்கும் எல்லா மதிப்புகளுக்கும் நேரெதிராக அவனது ஆழத்தில் , அவனை வீழ்த்துகின்ற வன்மமும் அற்பமும் அத்தனை பளபளப்பானவை. தன் குரூரங்களில் தீவிர இருப்பு கொள்ளும் மனிதத் தத்தளிப்பின், கீழ்மைக்கும் மேன்மைக்குமான அவனது பரிதாப ஊசலாட்டத்தின் விளையாட்டுதான் அவலும் உமியும். செல்வம் குவியுமிடத்தின் வெறுமையும் ஆங்காரமும்தான் காயாப்பிள்ளையின் தன்மையம். தான் – பிறிது என்ற பிளவின் தன்மையத்தின் வழியே மனிதஉயிர் வலி- துக்கமென்னும் ஊழைப் பற்றிக்கொள்கிறது. தான், தான் சார்ந்த என்ற ஒரு அச்சிலிருந்து உலகைப் பிரித்துணரும் மனித மனம் பிறிதின் ஆக்கம்கண்டு கொள்ளும் அசூயை புராதன வலிமை கொண்டது. இந்த புராதனத் தத்தளிப்பில் அமிழ்ந்து துடிக்கும் காயாப்பிள்ளை இறுதியில் தன்மீட்சி அல்லது விடுதலை போன்ற ஒரு ஒளியை கண்டடையும் ஒரு சித்திரம்தான் அவலும் உமியும். நவீன சமூக யதார்த்தம், நவீன பாடுகள் என்பதற்கு அப்பால் தமிழ் நவீன இலக்கியம் என்பது உள்ளார்ந்து ஒரு இந்திய வைதீக தத்துவ மனதில் மையங்கொண்டதன் வரலாற்று மூலங்கள் தனித்துப் பேசத்தக்கன. தன் பெயரக் குழந்தையின் நோய்மையும் மாற்றான் குழந்தையின் பொலிவும்தான் காயாப்பிள்ளையின் மனதை வதைக்கும் ஆற்றாமை. எத்தனை ஓம்பியும் தன் நான்கு வயது பெயரக்குழந்தை லட்சுமணன் சூம்பி, ’சூணாவயிறாய்’ இருப்பதன் மனக்குறையே, அவரை பிறிதின் ஆக்கம் நோக்கிக் குமைய வைக்கிறது. தனது வீட்டில் குடித்தனமிருக்கும் , கோவில் குமாஸ்தா செல்லையாவின் குழந்தை ஏகாம்பரத்தின் வாகும் வளப்பமும் கண்டு காயாப்பிள்ளை பொருமுகிறார். தனது வீட்டுக்கு தினசரி விளையாட வரும் அந்தக் குழந்தையின் பொலிவான உடம்பும், இடையில் அரைஞானில் பளிச்சிட்டு ஆடும் நாய்க்காசுச் சரமும், வக்கற்றவர்களின் வளப்பமும் அவருக்குள் வன்மத்தைக் கட்டற்று தூண்டுகிறது. அவர் தீட்சை எடுத்துக்கொண்டு சிவபூஜை செய்பவர். கம்பராமாயணம்,பாரதம், கைவல்ய நவநீதம், பிரபுலிங்கலீலை, அருட்பா போன்றவற்றைப் படித்தவர். உலகியல் விவேகமும் மெய்ப்பொருள் தேடலும் கொண்டவர். ஆனால் அவரது மனம் தன் சூம்பிய பெயரனையும் பருமனும் வாகும்கொண்ட ஏகாம்பரத்தையும் நேர் நிறுத்திப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் லௌகீக மனக் குரூரங்களின் அதள பாதாளத்தில் கவிழ்கிறது. தன் பெயரனுக்காக வாங்கி அடுக்கியிருக்கும் திண்பண்டங்களை ஏகாம்பரம் ஏங்கிப்பார்க்கும் போதும் ‘தாத்தா தாத்தா’ என நச்சரித்துக் கேட்கும் போதும் தேன்குழல் தட்டத்தாலேயே குழந்தையின் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார். பதறி வந்து கேட்கும் தாய் மீனாட்சியிடம், தட்டோடு கேட்டு பிடிவாதம் செய்து பின் குழந்தை தானே தலையை சுவரில் மோதிக்கொண்டதாக சொல்லி சமாளிக்கிறார். பின்னர் தனது கீழான நடத்தைக்கு மனம் குமைகிறார். இது தொடர்ந்து நடக்கிறது. ஒவ்வொரு முறையும் குழந்தை ஏகாம்பரத்தின் மீது தன் வன்மத்தை பிரயோகிப்பதும் ,அது பகிரங்கமாகிவிடாமல் சாமர்த்தியமாக சமாளிப்பதும், பின்னர் குற்ற உணர்வில் தவிப்பதுமென மீண்டும் மீண்டும் நடக்கிறது. நடுநிசி வானத்தில் தோன்றும் நட்சத்திரங்கள் எல்லாம் அவரது வன்மத்திலிருந்து தொலைவாக தப்பிச் சென்றுவிட்ட குழந்தைகளென பிரமை தந்து அவரை வெருட்டுகின்றன. ஆனாலும் அசூயை என்னும் தொல்சக்க்தி மீண்டும் மீண்டும் அவரை பலவந்தமாக வீழ்த்துகிறது. ஒரு முறை தூங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தை ஏகாம்பரத்தைப் பார்த்துக்கொள்ளும்படி காயாப்பிள்ளையிடம் விட்டுவிட்டு மீனாட்சி அம்மாள் கோயிலில் கதாகாலட்சேபம் கேட்கப் போகிறாள். விழித்துக்கொண்டு குழந்தை அழ, கோவிலுக்கு கூட்டிச் சென்று மீனாட்சியிடமே விட்டு விட நினைக்கிறார் பிள்ளை. குழந்தை தூக்கச் சொல்லி அழுகிறது. அதைத் தூக்கி அணைத்த கணமே அதன் பருத்த மேனியை உணர்ந்த மாத்திரத்தில் காயாப்பிள்ளைக்கு சுள்ளென்று பொங்கிவருகிறது. வழியிலெயே யாருமற்ற இடத்தில் குழந்தையை இறுக்கியபடியே அதன் தொடையிலும் கண்ணத்திலும் பூரித்த செழுமையைக் கடுகத் திருகி தன் வக்கிரம்தீர தசைகளைக் கிள்ளுகிறார். அலறியழும் குழந்தையை ஏதும் அறியாதவர் போல தாயிடம் ஒப்பட்டைத்துவிட்டுத் திரும்புகிறார். வழி எங்கும் தன்னைத் தான் நிந்தித்தபடி தன் கீழ்மையை எண்ணித் துடிக்கிறார். ஒரு முக்கில் தன்னைத் தான் தாக்கிக்கொள்கிறார். ஏகாம்பரத்தை அடித்து துன்புறுத்துவதாக அவருக்கு உறக்கத்திலும் கனவுகள் வருகின்றன. குழந்தையின் அலறலும் உடலில் ரத்தம் கன்றிய தடங்களும்கண்டு பதறும் மீனாட்சியும் செல்லையாவும் இது அந்த கிழவனின் வேலைதான் என யூகித்துவிடுகின்றனர். மீனாட்சி நேரடியாகவே காயாப்பிள்ளையிடம் சென்று சீறுகிறாள். பிள்ளையோ கைக்கூப்பி அவர்களை உடனே வீட்டைக் காலி செய்துவிடும்படி கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறார். மறுநாளே அவர்கள் மௌனமாக வீடடைக் காலி செய்து வேறு தெருவுக்குக் குடியேறிப்போகிறார்கள் . தன் மீது பெரிதாக எதிர்ப்போ வெறுப்போ அவர்கள் காட்டாததும் தன் குற்றத்தை பகிரங்கம்செய்யாததும் அவரை மேலும் ஆழ்ந்த சுயநிந்தனைக்குத் தள்ளுகிறது. தன் குற்றத்திலிருந்து, வினையிலிருந்து தனக்கு மீட்சியே இல்லையா எனப் பிள்ளை தவித்துப்போகிறார். தன் வாழ்நாள் சேமிப்பாக பழுக்காபெட்டியில் தான் பத்திரப்படுத்தியிருந்த அறுநூறு ரூபாய் ரொக்கத்தையும் கடுக்கண், நமசிவாயம் எழுதிய மோதிரம் உள்ளிட்ட அணிகளையும் நகைக்கடைக்கு எடுத்துக்கொண்டுபோய் அவற்றுக்கு மாற்றாக குழந்தைக்கான பொன்னாபரணங்களை வாங்குகிறார். அந்த சேமிப்புகள் அவரது இறுதிக் காரியங்களுக்காக அவர் பத்திரப்படுத்தி வந்தவை. நேராக தையற்காரத்தெருவில் குடியேறிய செல்லையா மீனாட்சியின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து குழந்தயைப் போய் பார்க்கிறார். தான் வாங்கி வந்திருந்த பொற்சங்கிலியையும் வளைகளையும் அதற்கு அணிவித்து, சிறிய முருக வேல் ஒன்றையும் அதன் கைகளில் திணிக்கிறார். குழந்தை ஏகாம்பரம் அதை நாக்கில் வைத்து ருசி பார்க்கிறது. குழந்தை பொன்னெறும் வஸ்துகளென்றும் உலகை அறிவதில்லை. உலகின் வஸ்துகளெல்லாம் அதற்கு நாவால் ருசித்தறிய வேண்டிய பண்டங்களே. அந்த கணம் பிள்ளை தன் வினையிலிருந்து தான் முழுமையாக மீட்சிபெற்றுவிட்டதாக உணர்கிறார். “யப்பா முருகா” என உடைந்து அழும் அவர் , எத்தனை ஊதி ஊதியும் அகலாமல் சூழ்ந்த உமி இக்கணம் விலகி அவலாக மட்டும் ஒளிர்வதாக அமைதிகொள்கிறார். குழந்தையை அள்ளி அணைத்து மகிழ்ந்து பின், விடுவிடுவென்று வெளியேறி ரயிலடி நோக்கி நடக்கிறார். பின்னே ஓடிவந்து தடுக்க முயன்ற செல்லையாவை நிறுத்தி பின்தொடரவேண்டாம் என்றும் தான் தன் வீட்டை விட்டும் குடும்பத்தை விட்டுமே வெளியேறிவிட்டதாக சொல்கிறார். உலகியலை உதிர்த்து துறவு நாடி பழநிமலை நோக்கி அவர் பயணம் தொடங்குகிறது. ரயிலில் உடன்பயணிக்கும் சாய்பு ஒருவரிடம் தன் மகன் பழநியில் இருப்பதாகவும் அவனைப் பர்க்கவே தான் செல்வதாகவும் கூறுகிறார். தன் பிள்ளையின் பெயரைத் 'தண்டபாணி எனச் சொல்கிறார். முருகன் “பாலகவடிவு” கொண்டு அருள்கூரும் ஸ்தலமே அவர் நாடும் மீட்சியின் இடமாக இருக்கிறது. கடவுளை குழந்தையென்றும் குழந்தையைக் கடவுளென்றும் காணும் ஒரு மரபில், காயாப்பிள்ளை ஒரு குழந்தை மீதான தன் வன்மங்களின் தீவினைலிருந்து விடுதலைவேண்டி அதன் மூலப் படிமமொன்றில் சரண்நாடி பழநிக்கு செல்கிறார். ரயிலுக்கு வெளியே ஒரு மின்கம்பத்தில் பெரிய காகமொன்றை சிறிய வலியன்குருவி தலையில் கொத்திக் கொத்திப் பறப்பதை சாய்புவுக்கு காட்டுகிறார். அக்கணம் அது தானாகவும் தன் உமியைச் சுட்ட குழந்தை ஏகாம்பரமாகவும் அவருக்குத் தோன்றக்கூடும். லௌகீக சித்திரரமாகத் தொடங்கும் கதை காயாப்பிள்ளையின் ஆன்மீகம் சார்ந்த ஒரு நகர்வுடன் முடிகிறது. இனி, ஜானகிராமன் என்ற ஆளுமைப் பேருருவிலிருந்து விலகி இக்கதையை நம்முன் உள்ளது ஒரு பிரதியென அதன் மௌனப்பட்ட இடைவெளிகளையும் அணுகிப் பார்க்கலாம். அவலும் உமியும் காயாப்பிள்ளையின் மனஓட்டத்தினூடாகவே நகர்கிறது. காயாப்பிள்ளையின் மன வக்கிரம் , அதனுடனான அவரது போராட்டம், அவர் கண்டடையும் தன்மீட்சி என காயாப்பிள்ளையின் ஆன்மீகசுயமே கதையின் குரலாக இருக்கிறது. அங்கு குழந்தை ஏகாம்பரமும் அந்தக் குடும்பமும் அங்கு காயாப்பிள்ளையின் ஆன்ம மீட்சிக்கான துணைக்கருவிகாளாக, உப இருப்புகளாக குரலற்றவர்களாக வைக்கப்படுகின்றனர். காயாப்பிள்ளையின் மன இயக்கம், தன் மனவக்கிரத்துடனான அவரது இடையறாத மோதல், தூய்மைபெறல், உமி நீங்கி அவலாக ஒளிர்தல் எல்லாம், தான் என்ற ஒரு சுயமுனைப்பின் புறத்தெறிவாகவே வெளிப்படுகின்றன. குழந்தை மீதான வன்மத்திலிருந்து வெளியேறி தூய்மையடைதல் என்ற ஒரு சுயஒளி அடைதலாக இருக்கிறதேயன்றி அது மற்றமை இருப்பை அறிந்துகொள்வதாக அதன் தன்னிலைச் சுயத்துடன், நியாயத்துடன் ஊடாடி நிகழும் தன்னுடைப்பாக இல்லை. குழந்தை மீதான வன்மங்களுக்கு பரிகாரம் என்பது காயாப்பிள்ளைக்கு தன் சேமிப்புகளையெல்லாம் பொன்னாபரணங்களாக்கி குழ்ந்தைக்கு அணிவித்தல் என்ற ஒரு பொருள் சார்ந்த பதிலீட்டின் அமைதிகாணலாகவே இருக்கிறது. கதையின் குரலை காயாப்பிள்ளை என்னும் மையத்திலிருந்து நகர்த்தி குழந்தை ஏகாம்பரம், அவனது தந்தை செல்லையா ,தாய் மீனாட்சி என மாற்றி வைக்கும்போது , அவர்களது குரல்கள் என்னவாக இருக்கக் கூடும். குற்றத்தின் தரப்பிலான காயாப்பிள்ளை, கொடுக்கும் நிலையில் தன்னை உயர்த்தி தான் மனத்தூய்மை எய்தலோடு விடுதலை பெற்றுக்கொள்கிறார். பாதிக்கபடும் தரப்பிலுள்ளவர்கள் சுயமற்றவர்களாக காயாப்பிள்ளையின் மீட்சி, ஆன்ம ஈடேற்றம் என்ற பிரதியின் நோக்கத்திற்கு பணிந்தொப்புபவர்களாக செயலூக்கமற்ற மௌனத்தரப்பாக இருத்தப்பட்டுள்ளனர். ஒரு முதியவர் மாற்றான் குழந்தையின் ஆரோக்கியம் கண்டு பொருமுகிறார். வன்மத்தை ஏவுகிறார். பின்னர் மனந்துடித்து திருந்தினார் என்ற உலகியான ஒரு தளத்துக்கு அப்பால் அதனை காயாப்பிள்ளையின் ஆன்மத் தூய்மைக்கான சோதனைக் களமாக்கி ஒரு தத்துவார்த்த மேலெழுப்பல் என்பது குழந்தையின் தரப்பு மீது செலுத்தப்பட்ட இன்னுமொரு வன்முறையாகவே இருக்கிறது. மனித மனத்தின் உள் இருளை, விபரீத்தத்தை இக்கதை துலக்குகிறது என்றால், ஒரு குழந்தை மீது ஒரு முதியவருக்கு உண்டாகும் வன்மம் என்பது இப்பிரதியில் கரட்டாக பதனிடாத அதன் கொடுந்தன்மையுடன் வைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்வி. அன்பைப் போல் வன்மமும் அத்தனை பச்சையானது. நிஜமானது. தர்க்கங்கள்கடந்த ஒரு புராதன உணர்ச்சி அது. மனிதனின் உள்ளிருட்டைத் ஊடுருவித் துலக்கும் கதை அதன் விபரீதத்துக்குள் போகாமல் ஒரு தத்துவத்தளமிட்டு ஒரு நீதியயல் உரைப்பாக நிறைவுகொள்ளும் இடம் வாழ்வின் விபரீதத்தின் மேல் படைப்பாளி ஏற்ற விரும்பும் அழகியலான ஒரு மதிப்பு என அமைதி காணலாம். ஆனாலும் காயாப்பிள்ளை தன் வக்கிரத்தில் இருந்து மீளவே முடியாது சரிந்தும் விழும் இடமும், வீழ்ச்சிக்கும் மீட்சிக்குமான அவரது தத்தளிப்புமே இக்கதையில் நவீன வாசிப்பு மனம் இயல்பாக சாய்வுகொள்ளும் இடம். *பேரா.கல்யாணராமன் தொகுத்த ஜானகிராமம் நூலில் எழுதிய கட்டுரை







No comments:

Post a Comment