Friday, May 14, 2021

நவீன கவிதையில் அறிவியல் போதம் - மனிதமையவாதம் நீங்கிய பிரபஞ்சமளாவும் கவிதை ---- பிரவீண் பஃறுளி

 

  

    

                                                                     நன்றி : புரவி இதழ்

            பிரமிளின் தெற்கு வாசலில்  வரும் அறிவார்த்த திகைப்பென்னும் பதம்  நவீன கவிதையின் விழிப்பெனவும் இருக்கிறது.  அறிவார்த்தமும் திகைப்பும் ஒருங்கே தீவிரம் கொள்ளும் ஒரு தனித்த அறிமுறையில் கவிதை தன்னை இருத்துகிறது . அது நனவிலிக் குரலோ, உணர்ச்சியின் பீறிடலோ , சுயத்தின் கரைதலோ அன்று. ஓர் அதீத விழிப்பின் தவிப்பு என அதன் நவீனபோதம் உருக்கொள்கிறது. அனுபவத்திலிருந்து  விலகி நிற்றலும், அவதானித்தலும், அறிவார்ந்த  வேடிக்கையும்கூட  அதன் உறுதிகள்தான். கவிதை மெய்யறிதல்  மட்டுமல்ல, ஒரு மெய்யுருவாக்கம். அனுபவத்தைப் பகிர்தலாக அல்லாமல், அனுபவத்தை பதிலீடு செய்வதாக , விளையாடுவதாகவும் அது அமையும்.  உண்மையை அறிதல் என்பதிலிருந்து உண்மையை உருவாக்குதல் என மயக்கம் கொள்ளும் இடங்களுக்கு  இன்று அறிவியலும் கவிதையும் சேர்ந்து நகர்கின்றன. கலை இலக்கியங்கள்  அறிவியலின் மெய்காண் முறையை, அதன் அறிவார்த்தத் துணிபுகளை எப்போதும் சந்தேகித்தே வந்துள்ளன. ஆனால் வரலாற்றின் பெரும் விவாதங்கள் நீடித்து ஓய்ந்து , எல்லா எதிரெதிர்ப் புள்ளிகளும் உள்ளார்ந்து  ஒன்றையொன்று  சமன்செய்யும் ஒரு பிற்சிந்தனைக் காலத்தில் அறிவு -உணர்வு, மனம்- உடல் , யதார்த்தம் - புனைவு, படைப்பு - செய்நுட்பம், அகவயம் - புறவயம் என்ற பழைய எதிர்வுகள் பொருளிழக்கின்றன. இந்த எதிரிடைகள்  விவாத சந்தர்ப்பங்கள் மட்டுமே.  இவை எல்லாமும் முயங்கிய ரசவாதத்தில் கவிதைக்குள் பாய்வது மனிதனின் மொத்த ரத்தமும்தான். உள்ளுணர்வு, மனவெழுச்சி, கற்பனை, தரிசனம்  போன்ற தொன்றுதொட்ட  கவிதைக் குணங்கள் அறிவியலுக்கும் அறிவார்த்தம், தர்க்கம், புறநிலைத் தீர்க்கம் எனச்சொல்லப்பட்ட அறிவியல்முறைமைகள் கவிதைக்குமாகப் பரிமாற்றம்கொள்ளும் தளங்கள் எப்போதும் இருந்தே வந்துள்ளன.

             கவிதை ஒரு தனிமனித அந்தரங்க அறிதல், அது முழுக்க உள்ளுணர்வின் ஒரு வெளிச்சம் என்ற வாதங்கள்  இன்று பழுப்படைந்துவிட்டவை. இந்த வாதங்கள் எல்லாம் கவிதையை புனிதப்படுத்தும் அதன் முழுச் சுதந்திரத்தை மறுப்பதுமான தன்மையவை. சமூக பண்பாட்டு மொழித் திரள்களுக்குள் அமையும்,  ஊடாடும் மனித இருப்பில் தனிமனித அலகு என்பது மிக பலவீனமானதொரு வரைவு. உள்ளுணர்வு, அகத்தரிசனம் போன்ற கருத்துருக்களில் சிலிர்ப்பும் சன்னதமும் கொள்பவரைப் புறந்தள்ளி உள்ளுணர்வுக்கும் புலப்படாத ஒரு கணிதத்தின் சாத்தியத்தை அனுமதித்தே அறிவியலின் தேடல் விரிகிறது. சர்வ பிரபஞ்சத்தின் மீதும்  கவிதை வேட்கைகொள்கிறது, தன்னை ஒப்புக்கொடுக்கிறது என்னும்போதே கவிதை காலந்தோறும் தத்துவத்தோடு அறிவுத்துறைகளோடும் தன் உரையாடலை தீவிரப்படுத்தியே  வந்துள்ளது. நவீன காலம் என்ற உருவாக்கத்தில் அறிவியலின் மையம் பிரதானமானது. சமூகம், அரசியல், பண்பாடு  கலை இலக்கியம் என்னும் சகல தளங்களிலும் அதன் அறிவு முறைமைகள் , கண்டறிதல்கள் ஊடுருவிப் பரவுகின்றன. யதார்த்த வாதம் , நடப்பியல், தினசரித்தன்மை, சராசரி தனிமனிதனின் முகம் என்ற இலக்கிய மறுமலர்ச்சிக்குள் அறிவியலின் உலகப்பார்வை  மறைமுகமாக உள்வாங்கப்பட்டிருந்ததை மறுப்பதற்கில்லை. அறிவு  ஓர் அதிகாரம், வன்முறை என விளைந்த காட்சிகளும்  அதிகார விழைவெனும்   மானுட உளக்கூறின், தொன்றுதொட்ட தீமையின் பாற்பட்டதன்றி அறிவியலை தனிப்பொறுப்பாளி ஆக்க முடியாது. அதிகாரத்தின் போகக் கூடங்களில் மயக்கமடைந்து கிடந்த வரலாறுகள்  கலைக்கும் உண்டு.

            மரபுடன் பிணக்குற்ற புள்ளியிலேயே நிதானமும் அறிவார்ந்த விலகலும் நவீன கவிதை வரித்துக்கொண்ட இயல்புகள்.  வாழ்வனுபவம் என்ற குறுந்தளத்துக்குள் அப்பால் உளவியல், தத்துவம், வரலாறு, அறிவியல் என அறிவுத்துறைகள் யாவற்றின் ஞானங்களூடாகவும் உண்மையைத் துணிந்து காணும் விஞ்ஞானம்  நவீன கவிதை என்ற வார்ப்புக்கு ஒரு அடிப்படையாக இருந்துள்ளது. சிற்றிதழ்மரபு போற்றிய தமிழ் நவீனகவிதை எப்போதுமே ஒரு அறிவார்த்த உள்ளியல்பையும் பரிசோதனை குணத்தையும் தக்கவைத்து வந்துள்ளது.  நவீன கவிஞன்  எப்போதும் கவிதையை செய்து பார்ப்பவனாக, கவிதைக்கு வெளியே  நிற்கும் பரிசோதனையாளனாக இருக்கிறான். அசட்டு உணர்ச்சி மலிதல்களுக்கு அப்பால்  எந்த அனுபவத் துணுக்கையும் மனித அறிவுச்சேகரங்களின் மொத்தத்தில் இருந்து ஒரு பிரபஞ்ச தன்மையிலிருந்து ஊடுருவிக் காணும் துணிபு  நவீன கவிதைக்கு உண்டு.






            நவீன காலம் என வரலாற்றைத் துண்டுபடுத்தியதன் புள்ளியிலேயே கவிதைக்குள் அறிவார்த்தம் மையம் கொண்டுவிட்டது. "இருள் என்பது குறைந்த ஒளி" என்ற பாரதியின் காட்சி  ஒரு கவித்துவக் கண்டடைதல் எனலாம்.  அதீத விழிப்பின் முன் இருளும் மெல்லிய ஒளிதான். ஆனால் அந்த  கூற்றின் முன்பின் விரிந்துவரும் பகுதியில் பாரதியின் அத்தருணம்  ஓர் அறிவியல் முறைமை – தர்க்கத்தின் வழி வெளிப்பட்டிருப்பது வியப்பானது. சூரியன் என்ற மகா நெருப்பின் தெறித்த சிலபொறிகளே கோள்களென்றும்  காலத்தில் அக்கங்குகள்  தணிந்து தணிந்து   அவிந்து ஒளி குன்றின . அங்கே இருப்பது இருளல்ல .அது  நலிவுற்ற ஒளி. பிரபஞ்சம் ஓர் ஒளித் திறப்பு. அதன் இருள் யாவும் ஒலியின் ஓய்வு. எனவே இருள் என்பது குறைந்த ஒளி. இப்படிப் போகிறது பாரதியின் தர்க்கம். பாரதியின்  வசன கவிதைத் தொடர் ஒரு அத்வைத  தரிசனம், வேதங்களின் பிரதிபலிப்பு.  ஆனால் பிரபஞ்ச ஒருமை குறித்து அவரது காட்சிகளுக்குள் தவிர்க்க முடியாது நவீன அறிவியல் ஊடுருவி வந்திருப்பது ஒரு முக்கிய கவனம்.  பிரபஞ்சம் ஒரு ஆற்றல் பிரவாகம் எனக் கண்டறிந்த  புத்துலக அறிவியல்  " சக்தி கூத்திலே ஒளியொரு தாளம்/ சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்/ சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்"  எனப் பாரதியில் எதிரொலிக்கிறது. அவர் காலத்து அறியப்பட்டிருந்த  கோள்களின் ஐரொப்பியப் பெயர்களையும் ஒரு வசனத்திலே காணலாம். காற்றெனும் பகுதியில் காற்றென உணரப்படுவது  புவியைச் சுற்றிய புலப்படா பூதத்துகள்களின் சலனமென அதன் பௌதீக இயல்புகளைக் கவிதைக்குள் துலக்கிப் பார்க்கும் இடமும் உண்டு.

           


நவீன கவிதையில் அசட்டு பாவங்களை எள்ளிய அறிவார்த்த விழிப்பின் தீவிரம் அதிரும் இடம் பிரமிள்.  அது  கவிதைத் தன்னிலை ஒரு பிரபஞ்சத் தன்னிலையாக விரியும் இடம்.    தனி மனிதனுக்கும் பிரபஞ்ச பேரிப்புக்குமான உள்ளோட்டங்களை   பேரண்டமாளாவிய  ஓர் ஐக்கியத்தை நாடும் இடம் . அந்த பேரண்ட லயத்தை  அதன்  சாரத்தை  உள்வாங்கித் துடிப்பதுதான் கவிதை என்பார் பிரமிள். ஒருமைப் புள்ளியின் மாவெடிப்பால்  விரிவடைந்து செல்லும் அண்டம்   ஈர்ப்பின் முறியடிப்பால் குறுகத்தொடங்கி  ஒருமையின் மீண்டும் ஒடுங்கும் என்பது  ஓர் அறிவியல் அனுமானம். இதனைச் சுட்டி  பிரபஞ்சம் விரிந்து பெருகுவதும்  பின் சுருங்கி ஒடுங்குவதும் காலாதீதத்தின்ன் சந்நதியில் ஒரு இதயத்துடிப்பு . அந்த இதயத்துடிப்பின் ஒரு  தொலைதூர மங்கிய எதிரொலிதான் கவிதை என்கிறார் பிரமிள். பேரண்ட சுருங்கி விரிதலை ஒரு இதயத்துடிப்பெனப்  பதிலீடு செய்யும் பிரமிள் கவிதையில் எப்போதும் ஒரு பிரபஞ்ச அறிநிலை விழித்திருக்கிறது.  ஐன்ஸ்டீனின்  ஆற்றல் - நிறை சமன்பாடு குறித்த அவரது e = mc2    என்ற புகழ்பூத்த கவிதையை  நினைவுகூரலாம்.  ஆற்றல் என்னும் சூக்குமமும்  நிறை என்னும் ஜடமும் சமன்படுத்தப்பட்டது  ஓர் இயற்பியல் ஊழ் உடைப்பு

e = m c 2  ( e- ஆற்றல் –  m - நிறை/ஜடம்  c - ஒளியின் வேகம் ( நொடிக்கு 3 இலட்சம் கிமீ)

ஆற்றல்(m) = ஜடம்(m) x c2(ஒளியின் வேகம் x ஒளியின் வேகம்)

ஆற்றலும் நிறையும்(ஜடம்) பரிமாற்றமாகும் என்றால் , ஒரு துளி ஜடம் எல்லையற்ற ஆற்றல் வித்து.  ஒரு துளி ஜடம் (m) என்பது அதனுடன் ஒளிவேகத்தை ( 3 இலட்சம் கி.மீ/ விநாடி)  ஒளி  வேகத்தாலேயே பெருக்கி விரியும் பேராற்றலை வெளியிடக்கூடாது. இந்த துளி ஜடத்தின் மகா ஆற்றல் பெருக்கம் தான்  அணுகுண்டு சூட்சுமத்தின் அடிப்படை. புதிய இயற்பியலின் பிறப்பையும்  ஒரு  வரலாறு புரள்வதையும் தடுமாறும் பழைய பிரபஞ்சத்தையும், உருமாறிய அதன் புதிய வரைவையும் இக்கவிதை திறந்து செல்கிறது. அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் அறிவியல் முறைமையை அதன் பின்னான இயற்பியல்  சூக்குமத்தை அதன் படைப்புத் தருணத்தை பிரமிளின் மொழி அள்ளி எடுக்கும் இடம் அபாரமானது.

பிரபஞ்சத்தின் சிறகு குவிந்தால் அணு/ அணுவைக் கோர்த்த உள் அணு யாவும் சக்தியின் சலனம்/ அணுக்கள் குவிந்த  ஜடப்பொருள் யாவும் சக்தியின் சலனம்/  எனச் செல்லும் கவிதையில்  ஐன்ஸ்டீனின் சமன்பாடு இப்படி வருகிறது.

ஒளியின் கதியை ஒளியின் கதியால்

பெருக்கிய வேகம்

ஜடத்தைப் புணர்ந்தால்

ஜடமே சக்தி!

மெக்சிக்கோவில் பாலவெளிச் சோதனை

1945...

 

            காலம் வெளியிலிருந்து துண்டிக்க முடியாத பரிமாணம்.. காலம்-வெளி என்பது ஒருமைப் பரப்பு. கால-வெளி பரப்பின் மீதான வஸ்துக்களின் அழுத்தங்களே ஈர்மப் புலங்களை உருவாக்குகின்றன. ஒளிவேகத்தின்  மாறிலி தன்மையின் பொருட்டு காலம்- நீட்டம் - நிறை இவை நோக்குபவரின் இயங்குநிலை சார்ந்து  திரிபுகள்கொள்கின்றன. இப்படிப் புதிய அறிதல்களின் முன்  அறுதி உண்மைகளின் பழைய பிரபஞ்சத்தை  விபரீதப் படுத்தினார் ஐன்ஸ்டீன்.  காலமும் வெளியும் ஒருமித்த ஐன்ஸ்டைனின் புதிய மெய்ம்மையின் படைப்பூக்ககணத்தை அணுகிப் பார்க்கிறது பிரமிள் கவிதை.  ஒளியே பிரபஞ்சத்தில் உச்சபட்ச வேகத்தில் பயணிக்க கூடிய தென்றாலும் , வினாடிக்கு 3 லட்சம் கி.மீ என்னும்  மகா பாய்ச்சல் கொண்டதெனினும் நட்சத்திரங்களின் பெருந்தொலைவுகளுடன் ஒப்பு நோக்க  அது ஒரு நத்தைப் பயணமே. எனவே  நம் புலனறுவது எப்போதும் ஒரு கடந்தகால விண்ணகம்.  நாம் பார்ப்பது  8.20 நிமிடத்துக்கு முந்தைய,  காலத்தில் இறந்த சூரியனை. இரவு வானின் விண்மீன் கூட்டம்  ஒவ்வொன்றும் வெவ்வேறு காலங்களின் பிரதிபலிப்பு. புவிக்கு மிக அண்மித்த விண்மீன் ஆல்பா செண்டாரியின் சுடரோ 4.5 ஆண்டுகள் முந்தையது. சிரியஸோ எப்போதும் 8 ஆண்டுகள் முந்தைய வானில் சுடர்கிறது. பிரகாசிக்கும் துருவ விண்மீனோ 434 ஆண்டுகள் முந்தைய கணத்தின் இறந்த பிம்பம்.  இரவுவானம் மயங்கும் பல்வேறு கடந்தகாலங்களின் சவவெளி.  இல்லாத இறந்தபோன  விண்மீன்களும் சுடரும்  காலத்தின் புதைபடிவம். 

காலமும் வெளியும் ஒருமித்து ஓடும் ஒற்றை நிழலாறு..

நேற்று நேற்று என இறந்த யுகங்களில்

என்றோ ஒரு நாள் அவிந்த நக்‌ஷ்த்திர கோளங்கள்

ஒளிவேகத்தின் மந்த கதி தரும் நிதர்சனத்தில்

இன்றும் இருக்கின்றன , காலமே வெளி

இன்று கண்டது.  நேற்று கண்டது இன்று

இன்றையது நாளைக்கு

இக்கணத்தின் கரையைத் தீண்டாத

இப்புதிய புவனத்தின் பிரவாகம் வேறொரு பரிமாணத்தில்  

...

ஐன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியுடன் முடியும் இக்கவிதை அறிவு என்னும்  நவீன மனிதனின் புதிய கடவுளையும் , அதன்மீதான விசாரணையையும் சேர்த்தே  வைக்கிறது.


                                    


 நவீன கவிதையில் அறிவுநிலையின் வீச்சு எனப் பேசப்புகும்போது அங்கு பிரம்மராஜன்  மிகச் சரளமாக நடையிட்ட இடம் என்பதை மறந்துவிடமுடியாது. பிரம்மராஜனின் அதீத மொழியும் மரபுமனம் திடுக்கிடும்  அயற்படிமங்களும் கவிதைக்கு  ஓர் அசாதாரணத்தை சூடுபவை. வாழ்க்கையைப் பேசு, அனுபவத்தைப் பேசு போன்ற சனாதனக் குரல்களிடமிருந்து  பிரம்மாராஜன் கவிதைகளை நோக்கி அவை  மொழிக்கூட்டம், செய்நுட்பம்,  ஐரோப்பிய அந்நியம் போன்ற வசைபாடல்கள் ஒலித்தன. ஆனால் விலகி நிற்றல் ,அறிவார்த்தம், கண்காணிப்பு , விளையாட்டு,  பொறியாண்மை    போன்ற அபூர்வ குணங்களின் தனிக்குரலாக அக்கவிதைகள் இருந்தன.  ஏப்ரலில் இசை கவிதையில் ஒரு கோடையில் மாவிலைகளில் பசுமை செறிவதை, "குளோரோபில் கூடுகையில்  மாவிலைக் கொழுந்துகளில் தளுக்கு அழியும்"     எனப் பசுமை சார்ந்த மனிதவய அர்த்தமேற்றங்களின் மரபு  நினைவை ரத்து செய்கிறார் பிரம்மராஜன்.  நல்லுணர்வாகிய‘ பசுமையை எதிர் திசையில் திருப்பும் இக்கவிதை, குளோரோபில் அடர்ந்துவரும் வேறொரு அறிதலுக்குள்ளும் பாய்கிறது.  இரவு சூழந்தும் துயில்கொள்ள முடியாதவனின்  விழித்த பிரக்ஞையை  ” ரேடியம் முட்களென சுடர்விடுகிறது விழிப்பு” என்னும்போதும், பிரிவுற்ற  ஓர் உறவின்  உறைந்த தருணத்தை, காலத்தின் இறப்பை  "நீரில் மூழ்கிய கடிகர முட்களென "  கூறும்போதும்  பிரம்மராஜனின்  படிமங்கள் மரபான ரசனை மனத்தின் சௌகரியப் புலத்தை விபரீதப்படுத்தவே செய்யும்.  இவரது கவிதைகளில்   ஓவியம், இசை போன்ற காண், கேள் புலங்களின் மடைமாற்றங்களையும் காணலாம். கவிதை ஒரு சுய அனுபவ சாட்சி என்ற மரபார்ந்த வரம்பு அங்கு உடைந்துவிடுகிறது.  வரலாறு , தத்துவம், கலை என வாசிப்பின் வழியான ஒரு புனைவுநிலத்தில் எல்லையின்மை கொள்ளும் சுதந்திரத்தை கவிதை வரித்துக்கொள்கிறது.

           


அறிபுனை கவிதை என்னும்போது பிரம்மராஜன் மொழிபெயர்த்த மிரோஸ்லாவ் ஹொலூப் கவிதைகள் ஓர்  அருந்தொகுப்பு.  நமது அன்றாட வாழ்வியல் கோலத்திலிருந்து விடுவித்து கவிதையை அறிவியலின் அசாதாரணமான அறிகளங்களின்மீது  நிகழவைக்கிறார் ஹொலூப்.  மனிதார்த்த வாழ்வனுபவங்களும் அறிவியல்தொழில் நுட்ப அறிதல்களும்  ஊடறுக்கும் வெளிகளில் அவை வினைபுரிகின்றன.  தொற்றுயிரியின் தன்னிலையிலிருந்து எழுதப்பட்ட ஒரு கவிதை மனித மையத்திலேயே சலித்துக்கொண்டிருக்கும் மொத்த நவீன கவிதைக்கும் ஒரு மௌனச் சவால்தான்.

             இங்கு அறிவியல் கவிதை என்பது எங்கு பிரத்யேகம் கொள்கிறது என்பது ஒரு சிக்கலான புள்ளிதான். மழையைப் பாடினால், பறவைகளைப் பாடினால் இயல்பாக இருக்கிறது. ஆனால் அணுவைச் சூழும்  எலெக்ட்ரான முகில்களைப் பாடினாலோ  , ஒரு நுண்ணியிரின் பிரக்ஞையை திறந்து பார்த்தாலோ அது எங்கே செயற்கையாகி விடுகிறது. ஏன் அறிவியல் கவிதை எனப் பிரிந்துவிடுகிறது. மழையைப் போலத்தான் , பொழியும் நியூட்ரினோக்களும்,  பறவைகள் தாவரங்கள் போலத்தான் நம் குடல்பாதைவனத்தின் நுண்ணுயிர் தொகுதிகளும். எல்லாம் அண்டத்தின் துடிப்புகள்தான். மனித வாழ்வனுபவத்துக்குள்ளும் உணர்சிக்குள்ளும் ஊறிவருபவற்றை மட்டுமே கவிதை கருக்கொள்ளும் என்றால் அது மானுடத்தின் நார்சிஸச் சுய இனப்பித்தன்றி வேறென்ன. அறிவார்த்தத்தை உள்வாங்கிய கவிதையில் மனித மையம் உடைந்துவிடுகிறது. மனிதார்த்த அழகியலும் அறவியலும் கூட விடைபெற்றுவிடுகின்றன. கவிதை எல்லாவற்றின்முன்னும் தன்னை திறந்தே வைத்திருக்கிறது. பட்டாம்பூச்சியை மென்னுணர்விய ரொமாண்டிசைஸ் பண்ணும் கவிஞனிடம் ,   தன்  லார்வா பருவத்தில்  இலைகளைத் துணித்துப் புசிப்பதிலும்,  தன் ஊசிக் குழலால்  மலர்களைத் துய்ப்பதிலும் அவற்றின் உயிர் வேட்கை ஒநாய்களின் வன்மத்துக்கும் குருதிவெறிக்கும் நிகரானதுதான் எனக் கூற வேண்டும். மேலும் அதன் சிறகு வண்ணங்களும் புள்ளிகளும் கூட எதிரிகளை மிரளவைப்பதற்கான உருவார்ப்புத் தகவமைப்புகள்தான் என்றும்.  நிலவு  அழகானது, மலர்கள் அழகானவை என்பது  பிரச்சனை இல்லை. ஆனால் அவை ஏன் அழகாகத் தோன்ற வேண்டும். மனிதனின் எந்தப் பரிணாமப் புள்ளியில் எந்த வாழ்விருப்புத் தேவைகளின் பொருட்டு அழகு - அழகின்மை குறித்த தகவமைப்புகள் உண்டாயின என்ற தேடலுக்குள்  ஊடுருவும் வேட்கை கவிதைக்கும் உரித்தானதே. எல்லாவற்றிலும் மனிதப் பண்பேற்றம்தான் மொழிச்செயல்பாடு  என்றால், மனிதனின் மொழிக்கும், உணர்வுக்கும் , அறிதலுக்கும் வெளியே  பெயரற்ற  குருட்டுப் பிரபஞ்சம்  நிலைத்துக் கிடக்கிறது, மனிதப்புல்   தோன்றி மறையும் இடைவெளிக்கு  அப்பாலான முடிவின்மைக்குள்.

            இவ்விடத்தில், தேவதச்சனின், மனிதர்கள் தோன்றியிராத ஒரு யுகத்தின் கவிதையைக் குறிப்பிடலாம். ஒரு யுகத்தின் அயர்வில் கடைசி டினோசர் களைத்து நின்று கொண்டிருக்கிறது. சற்று நேரத்தில் அது குனிந்து விஷக்கற்றாழையைக் கடிக்கப் போகிறது. இன்னும் சற்று நேரத்தில் சாகப் போகும் அது தன் மீது ஊர்ந்து ஏறும் கரப்பானைப் பொருட்படுத்தவில்லை.  கடுங்கோடையின் இலைகள் உதிர்ந்து இலைகளுக்குள் மறைவைதை அது வெறிக்கிறது. இதுவரை பரிமாணத்தில் உயிர் பெற்று வராத எதிர்காலப் பறவைகள் சீக்கிரம் செத்துப் போ என  தொலைவாழ்த்திலிருந்து குரலெடுக்கின்றன. இப்படி ஒரு காட்சி கடைசி டினோசர் கவிதையில். நமது அர்த்தப்படுத்தல்களுக்கும் பண்பேற்றங்களுக்கும் புறத்தே இயற்கையின்  நிர்தாட்சண்யமான பரிணாமப் போக்கை , புலப்படா அதன் தனி சூட்சமத்தை  எந்தத் தன்வயப்பாடுமின்றி இடைவெளியுடன் நின்று வேடிக்கை பார்க்கும் கவிதை.

            இன்று அறிவியல் என்பது தினசரி வாழ்க்கைக்கு வெளியே இயங்கும் அறிவுத்துறையாக இல்லை. நம் அன்றாடத்தின் கலாச்சாரத்தின் செம்பாதித்திசுவாக அது மாறிக்கொண்டிருக்கிறது. மனித இருப்பு ஒரு நுகர்விய இருப்பாக வார்க்கப்பட்டுள்ள காலத்தில் தொழில்நுட்ப உபகரணங்களின் அதீத பரவலாக்கத்தில் எல்லோருமே குறைந்தபட்ச  நிபுணத்துவர்களக இருக்கிறோம்.  நமது தினசரியில் சாத்தியமற்ற அறிவியல் அசாதரணங்கள் யாவும் நுகர்வுக்காக காணொளிகளில்  சாதாராணமாகத் திறந்துகிடக்கின்றன.  திரைப்படக் கேளிக்கை போன்று  பேரண்டக் காட்சிகளிலிருந்து , நுண்ம உலகுகள் வரை  யுடியூப் தளங்களில்  எல்லையிறந்து நுகரப்படுகின்றன. மெய் புனைவு என்பதெலாம் பொருளற்ற எதிர்வுகள்.  இங்குதான்  மனித அனுபவம் என  நாம் அறிந்திருப்பது அதன் பழைய பௌதிகத் தன்மையிலிருந்து விடுபட்டுக்கொள்கிறது.  நிலவையும் , சூரியனையும், இன்னும் பல அண்மைக் கோள்களையும் இருபத்துநான்கு மணிநேர நேரலையில் ஒளிபரப்பும் காட்சித் தளங்களின் வாய்பில்,  பேரண்ட வெளியில் இயங்கும் ஒரு விண்வெளி வீரரை நேரலையில் கைப்ப்பேசித் திரையில் கண்ணுறும் ஒருவரின் அனுபவம் வேறொரு யதார்த்ததுக்குள் குழம்புகிறது.  

 நேசமித்திரனுடைய ஒரு கவிதை சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் வாழும் விண்ணோடி ஒருத்தியின் தினசரி பற்றியது. அங்கு இரவோ பகலோ இல்லை. அது வஸ்துகள்  மேலிருந்து கீழே வீழாத ஈர்ப்பற்ற மிதவை வெளி "கரணம் தப்பினால் மரணமற்ற விண்வெளி ஓடம்" எனத் தொடங்குகிறது அந்தக் கவிதை. அங்கு கழிகிற அவளது ஒருநாள் எப்படி இருக்கும்.  சூனிய ஈர்ப்பில் இயங்கும் அவள் பற்பசையை தானே விழுங்க வேண்டியவளாக, சிறு நீரையும் மாதவிடாயையும்  பிரத்யேக கருவிகளால் உறிஞ்சி வெளியாற்றுபவளாக இருக்கிறாள். ஒரு  நெடுஞ்சாலைப் பயணத்தில் மரங்களை, மலைகளைப் பார்க்கும் இயல்புடன் – அந்தர வெளியில் அவர்கள்  ஸ்வாஸ்திக் வடிவ, மண்டையோட்டு வடிவ நக்‌ஷ்த்திர கோலங்களை, விண்திரள் வடிவங்களைக்  குறிப்பெடுக்கிறார்கள். வெளி உலவி திரும்பும்போது தலைக்கவசம் அகற்றுகையில் அது இரட்டைப் பிரசவத்தின் வலிமிக்க ஒரு சிசுத்தலை வெளியேற்றமாக இருக்கிறது. பொதுவாகவே   நவீன கவிதையின்  பாடுபொருள் யாவும் ஈர்ப்பு விசையில் கட்டுண்ட உயிர்ச்சலனங்களே. முதன்முறையாக ஈர்ப்பு விசைக்கு வெளியே  ஒரு மனித சலனத்தைப் பிரதிபலித்த அடிப்படையில் இக்கவிதை கவனம் ஈர்க்கிறது.   ஆண்மனம் சார்ந்த ஒரு மெல்லிய தன்வயம் இக்கவிதையில் இருக்கிறது. ஈர்ப்பிலா வெளியைப் பேசினாலும் இக்கவிதை புவியார்ந்த உணர்வுநிலையிலிருந்தே  எழுதப்பட்டுள்ளது

            அறிபுனை கவிதையில் தனித்தொகுப்பாகவே வந்திருக்கும்  பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம்  ஒரு முக்கியப் பரிசோதனை. இத்தொகுப்பில் சமகால  வாழ்க்கை , அரசியல், சமூக வெளிகள் இருப்பினும் எல்லாவற்றினூடாக அறிவியல் சார்ந்த ஒரு போதம் தீவிரமாக விழித்திருக்கிறது.  மனிதவய சமூக  யதார்தத்தை அறிவியல் வழங்கும் மெய்மைய்னூடாகச் சுடரேற்றிப் பார்க்கும் ஒரு விளையாட்டு இக்கவிதைகளில் நிகழ்கிறது. மனித நேர்வுகளை அறிவியலின் சட்டகங்களுக்குள் பொருத்தி வேடிக்கை செய்தலின் ஒரு புறனிலைப் பார்வை அது. ஒரு  சிறுமி பூங்காவில் ஓடிக்கொண்டிருக்கிறாள். அது ஏ என்ற புள்ளியிலிருந்து பி என்ற புள்ளிக்கான கிடை மட்ட நகர்வு. அவள் x அச்சில் நகர்கிறாள். அன்னங்கள் சிதறி வானில் ஏகுகின்றன. அது y அச்சில் நிகழும் ஒரு செங்குத்து நேர்வு. இப்படி சிறுமிக்கும் அன்னங்களுக்குமான ஒரு நேர்வை ஒரு கணித வரைகட்டத்துள் பொதிந்துசொல்லும் கவிதை ஒன்று வருகிறது. இங்கு நிகழும் அசாதாரணமான புறவயக் கோணம் - தன்வயத்தை விலக்கி அனுபவத்தை பௌதீகமாக உருட்டிப் பார்க்கும் விசேடம் முக்கியமானது.  நமது வாழ்க்கையின் எல்லா அசைவுகளையும் பௌதீகமாகப் பார்த்தால் புவிப்பரப்பின்மீது அவை நேர்த்தியான சமன்பாடுகளின்மேல் நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடும். 

            ஸ்க்ரோடிங்கரின் பூனை  என்றொரு கவிதை. வாழ்வின் இருவேறு முரண் நிகழ்வுகளின் சம சாத்தியப்பாடுளை ஒரு அறிவியல் விதிக்குள் விளையாடிப் பார்க்கும் கவிதை. இக்கவிதையில் வாகன நெரிசல்மிக்க சாலையைக் கடக்கும்போது  இருப்பு/ இன்மையின் இருவேறு சாத்தியத்துக்குள் நுழைகிறது பூனை.  ஸ்க்ரோடிஙரின் பூனை ஒரு இயற்பியல் உருவகம்.  அணுக்கருவைச் சூழும் எலெக்ட்ரான்கள் ஒரே  நேரத்தில் எல்லா புள்ளிகளிலும் இருக்கும் சாத்தியம் கொண்டது என்கிறது குவாண்டம் இயற்பியல். ஒரு எல்க்ட்ரான் ஒரே காலத்தில் அனைத்து புள்ளிகளிலும் தோன்றும்.  நோக்கியபவரே அதன் நிலையைத் தீர்மானிக்கிறார். அவர் பார்க்கும் வரை அது எல்லா புள்ளியிலும் இருக்கிறது.   நோக்குபவர்தான் யதார்த்தத்தைக் கட்டமைக்கிறார். இக்கருத்துகளின் மீது மறுப்பு கொண்டிருந்த ஸ்க்ரோடிங்கர் மூடப்பட்ட பெட்டிக்குள் பூனை என்ற ஒரு  கற்பனை உருவகத்தை முன்வைத்தார். மூடப்பட்ட பெட்டிக்குள் பூனை. அதனருகே ஒரு கதிரியக்க வஸ்து. அது கசிவதற்கும் கசியாததற்கும் சமவிகித சாத்தியம் . அணுச்சிதைவால் கசிவேற்பட்டால் அதன்  அருகில் ஒரு சுத்தியலை அசைத்து கண்ணாடிக் குப்பி உடைந்து விஷ வாயு பரவும். பூனை இறக்கும். கசியவில்லை என்றால் பூனை இறக்காது. இப்போது பெட்டி திறக்கப்படும்வரை அது உயிருள்ள உயிரற்ற பூனை.  பாம்பாட்டிச் சித்தன் கவிதையில் "நெடுஞ்சாலையின் குறுக்கே பிரவேசிக்கும் கணத்தில் அது ஒரு உயிருள்ள / உயிரற்ற பூனை" யாக இருக்கிறது. மூடியிருக்கும் கணத்துக்குள் எல்லா சாத்தியங்ளும் இருக்கின்றன.  நாம் அறியும் வரை எலெக்ட்ரான் எல்லா இடத்திலும் இருக்கிறது.   நாம் இல்லாத ,  நமது போதம் தீண்டாத பிரபஞ்சத்தில் எல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.  எல்லா சாத்தியங்களும் திறந்திருக்கின்றன.  



            சமகாலத்தில் வலுவான ஓர் அறிவுத்தளம் கொண்டவை சபரிநாதன் கவிதைகள். பிரபஞ்சத்தின்முன் முன் எளிதாகத் திறந்துகொள்ளும், எல்லா அறிதல்களோடும் ஊடாடும் சுதந்திரம் கொண்டவை. செவ்வியல், உணர்வெழுச்சி, நிதானம், மையமின்மை என மாறுபட்ட கூறுகளுடன் மனித  இருப்பின் அபத்தத்தையும் அழகையும்  ஒருங்கே  வியப்பவை. ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு உரையாடலில்,   வேற்றுக்கோள் வாசிகளைத் தேடதீர்கள்,  பூமிக்கு வர நேர்ந்தால் அவர்கள் மனிதர்களைத்  நுண்கிருமிகளெனக் கருதி அழித்துவிடக்கூடும் என எச்சரித்தார். பேரண்டத்தில் மனித இருப்பின் மதிப்பு என்ன. மனித மையத்திலிருந்துதான் நாம் அண்டத்தை , இயற்கையை ,   நம் கனவுகளை, நம் கடவுளர்களைப் படைத்திருக்கிறோம்.  அண்டத்தின் வெவ்வேறு தொலைவாழ்ங்களின் வெவ்வேறு அறிதல்களின் பார்வையில்  நம் இடம் என்ன. தொலைதூர விண்மீன்களின்  பார்வையில் நம் கனவுகளுக்கும் மனிதனின் மகா எம்பல்களுக்கும் என்ன மதிப்பு.சபரிநாதன் கவிதையைப் பார்க்கலாம்.

"..பெரிதாக கனவு காண வேண்டும் /  நூறு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவது / அல்லது  நாலைந்து நதிகளை இணைப்பது / ஏனெனில் விண்ணகத்திலிருந்து காண்கையில்        நம் கனவுகள் நுண் கிருமிகள் எனத் தோன்றக் கூடும் / நம் பிரார்த்தனைகள் அலுப்பு தட்ட கூடும் / தூங்குகிறோம் நாம் விழுங்கியது மருந்துப்போலி என்ற போதும்...."

            அன்பு -  நீதி - அறம் - அழகு போன்ற மனித மதிப்புகளின் ஆழத்தில் உயிர்ப் பரிணாமத்தின் வாழ்விருப்பு இச்சைகளே ஒளிந்துள்ளன.   மனிதன் கழிந்த இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பு,  நம் மொழிபோதத்துக்கும் நுகர்வுக்கும்  அப்பாலான தாவர சங்கமங்கள்,  அசேதனக் கூட்டங்கள்,  நுண்ணுயிர்த் தொகுதிகளின் இடம், புவிமையம் கடந்த முடிவின்மையின் பேரண்ட விரிவுகள் எல்லாவற்றையும் துலக்கிப் பார்க்க அறிபுனை கவிதை வேட்கை கொள்கிறது. கவிதை ஏன் மனித அனுபவம் என்ற புலத்திலேயே நொண்டியடிக்க வேண்டும். பிரபஞ்சத்தின் முன் அது தன்னை எல்லையற்று திறந்து போட வேண்டும். பறவைகளைப் பாடுவதைப் போல ஒரு கவிஞனால்  நுண்ணுயிர்களைப் பாட முடியாது.  ஏனென்றால் அவனது உயிர்வாழ்விருப்பு சார்ந்த அனுபவப் புலத்தில் அவை இல்லை. எனது அனுபவத்துக்கு அப்பால் இந்தப் பிரபஞ்சம் இல்லை என்னும் தன்னறிவின்  அராஜகவாதம்தான் அது. இரவு வானின் விண்மீன்களை  அழகியல், காதல், துயரம், மரணம் எனத் தற்குறிப்பேற்றி மனிதன் கவிதை செய்ய முடியும். ஆனால்  அவனது மூலக்கூறுகளைக் கருத்தரித்த அந்த மகா விண்மீன்களின் தனித்த இருப்பை பேச , அணுக்கூறுகள்  முயங்கி அடரும்  மகாநெரிவை,   வெடிப்பை , எரிந்து தீர்ந்து போகும்  அவற்றின் சூன்யப்பாட்டை , அந்த நாடகத்தைப்  பேச  கவிஞன் முதலில் தன்மையத்தை காலி செய்ய வேண்டும்.  நானற்ற பிரபஞ்சத்தை எழுதும் இடத்திலிருந்தே அறிவியல்புனை கவிதைகளின் சாத்தியப்பாடுகள் திறந்துகொள்கின்றன.