Sunday, August 1, 2021

குறத்தி முடுக்கின் தங்கம் : ஜி.நாகராஜனின் உடலென்னும் போதம் - பிரவீண் பஃறுளி

 

                                                     





                                                                *நீலம் இதழில் எழுதிய கட்டுரை


      இலக்கியப் பிரதிகளில் இடம்பெறும் புனைவு மாந்தர்கள் கற்பனை வார்ப்புகள் என்றாலும் அவர்கள் நிஜத்தை விடவும் கூடுதல் நம்பகத்தன்மை கொண்டவர்களாக,   அசலானவர்களாக நிலைத்து விடுகிறார்கள். வாசிப்பின் அந்தரங்க வெளியில் அவர்கள்  நிஜமாந்தர்களை விடவும் திண்மையும் அதீத இருப்பும் கொண்டுவிடுகிறார்கள். ஆசிரியப் பிரதியோடு அவர்கள் வாசிப்பின் உருவகத்திலும் கற்பனையிலும் உணர்விலும் இருந்து உடலைப் பெற்றவர்கள். நிஜ மலரை விடவும் அதீதமானது புனைவு மலர். நிஜ நிழலை விடவும் அடர்ந்தது புனைவில் வரும் ஒரு நிழல். புனைவு மாந்தர்கள் நமது சுய இருப்பு என்ற சிறுவெளிக்கு அப்பால் விரியும் பரந்த உலகின் சாத்தியங்களிலிருந்து வருபவர்கள். அவர்கள் ஒரு நெடிய சமூகக் கதையாடலுக்கான, நீடித்த பிரதிபலிப்புகளுக்கான உருவகமாக மாறிவிடுகிறார்கள். புனைவில் இடம்பெறும் மாந்தர்களும் பொருள்களும் நேரடி உலகின் பொருளாயத மதிப்பிலிருந்தும் தேய்மானத்திலிருந்தும் அயலானவர்கள். நேரடி உலகில் உருமாறிக்கொண்டிருக்கும் காலம் புனைவிலோ உறைந்து அகப்பட்டுக்கிடக்கிறது. ஓவியத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவை எப்போதைக்குமாக அந்தக் கணத்திலேயே பறந்தபடி இருக்கிறது. ஒரு ரஷ்யப் படைப்பில் வைக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு பீட்டர்ஸ்பர்க்கும் பனிக்காலமும் பருவம் மாறாமல் அப்படியே இருக்கிறது. மேலும், இலக்கியப் புனைவு என்பது புனைவல்ல; அது உண்மையின் ஒரு விசேடமான உருவம். புனைவு என்பது மேலும் ஆழ்ந்த ஓர் உண்மை. நமக்குக் கையளிக்கப்படும் பொது உண்மைகள், சமூகப் பண்பாட்டுப் பொது மதிப்புகளின் ஆழத்தில் புதைக்கப்பட்ட உடைந்த உண்மைகளை அவை உயிர்ப்பிக்கின்றன. எனவேதான் அவற்றின் தெறிப்புகளான புனைவு மாந்தர்கள் நமக்கு உளப் படிமங்களாக மாறிப்போகிறார்கள். நவீனப் புனைகதைகளில் இடம்பெற்ற பல்வேறு மாந்தர்கள் சரித்திர மாந்தர்களுக்கு இணையான நிஜத்தன்மை அடைந்துவிடுவதுண்டு. ஜூலியா கொர்த்தஸாரின் சிறுகதை ஒன்றில் கியூபப் புரட்சியின் போது மலையுச்சியில் சந்தித்துக்கொள்ளும் செ குவே ரா வும் ஃபிடல் காஸ்ட்ரோவும், சரித்திர மாந்தர்களின் மறு பிரதி அல்ல. அவர்கள் கொர்த்தஸாரின் மாந்தர்கள். தஸ்தாயவெஸ்கியின் ரஸ்கோல்நிக்கோவ், தல்ஸ்தாயின் அன்னா கரீனினா, காஃப்காவின் கிரகோர் சாம்ஸா போன்றவர்கள் வரலாற்று மாந்தர்களுக்கு இணையான உருவகங்களாக இருப்பு கொண்டுவிட்டவர்கள்தான்.

            தமிழ்ப் புனைவுகளில் படைக்கப்பட்ட பல்வேறு கதைமாந்தர்களில் ஜி.நாகரஜனின் குறத்தி முடுக்கு நாவலில் இடம்பெறும் தங்கம் ஒரு தனித்த சித்திரம். 'குறத்தி முடுக்கு' அறுபதுகளின் திருநெல்வேலியின் ஒரு விலைமகளிர் வீதி. பெயர் புனைவானதுதான். ஆனால் அந்த வீதியும் அங்கு இருக்கும் வாழ்க்கையும் நிதர்சனம். அங்கு வாழ நேர்ந்தவர்களின் நிராசைகள், துக்கங்களுடன் அவர்களது வாழ்விச்சைகள், இயல்பூக்கங்கள் கனவுகளையும் குறத்தி முடுக்கு பேசுகிறது. பெண்குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் ஒருத்தியின் கர்ப்பம் முரட்டு வாடிக்கையாளனின் கலவியால் கலைந்துபோகிறது. தன்னை ஏமாற்றிப் பணம் பறிக்கும் போக்கிரியை ஒருத்தி விரும்ப்பிக் காதலிக்கிறாள். குறத்தி முடுக்குக்கு வந்து சேர்ந்திருந்த சிறு பிராயத்தினள் ஒருவள் தூக்கிட்டு தற்கொலை செய்யப் போராடுகிறாள். அதற்கு முன்பாக ஒரு வாடிக்கையாளரை அவள் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது. காவல் நிலையத்தில் மொட்டையடித்து ஒருத்தி  விரட்டப்படுகிறாள். குறத்தி முடுக்கு போன்ற விலைமகளிர்க் குடிகள் நவீனச் சமூக ஒழுங்குகளின் கள்ள உருவாக்கங்கள். சுதந்திரம், சட்டம், சமூக ஒழுங்கு, காவல், நீதி, நிர்வாகம் என்ற நவீனக் குடிமை ஒழுங்குகளின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் வன்மங்களையும் சுரண்டலையும் குறத்தி முடுக்கு உடைத்துக் காட்டுகிறது.

  பொதுவாகவே  நவீனத் தமிழிலக்கியப் பதிவுகளில் 'பாலியல் தொழில் பெண்டிர்' பற்றிய சித்திரங்கள் உள்ளிருந்து ஒலிக்காத - ஓர் அயல்விழியின் கனவுருவார்ப்புகளாகவோ, உன்னதப்படுத்தல்களாகவோ, மத்தியதர வர்க்கப் பச்சாதாபத்துடனோ உருவாக்கப்படுவதுண்டு. குறத்தி முடுக்கு அப்படி ஏதும் மேலான சித்திரங்களின்றி அந்தப் பெண்களின் அன்றாடத்தை அதன் இயல்புக்கோலத்தில் நெருங்குகிறது. அலங்காரமற்ற அதன் அயற்சியான பகற்பொழுதுகளையும் அது பேசுகிறது. குறத்தி முடுக்கின் பெண்கள் தன்னிருப்புக்கான தந்திரங்கள், பேரங்கள், ஆற்றாமை, கள்ளம், வாழ்வைப் பற்றிக்கொள்வதற்கான போராட்டத்துடன் காதலும் அழகியலும் ஆசைகளுடனும் இயைந்து ஊடாடுபவர்கள்தான்.

            தங்கம் குறத்தி முடுக்கின் பிரஜைகளில் ஒருத்தி. பல ஏமாற்று வேலைகள் செய்து பிழைக்கும் தன் கணவனால் குறத்தி முடுக்குவில் விடப்பட்டவள். தங்கத்துக்கும் பெயர் குறிப்பிடப்படாத பத்திரிகையாளன் ஒருவனுக்கும் மரபான பொது வரையறைகளில் பிடிபடாத `காதல்' போன்ற ஒன்றின் சலனம் நாவலின் மையம். இந்தப் பத்திரிகையாளன் வாழ்க்கையைப் பற்றிச் சில தெளிவுகள் கொண்டவன். சுதந்திரத்துக்கும், அதையொட்டிய சமூக ஓட்டங்களுக்கும் பிந்தைய ஒரு யதார்த்தத்தில், தினசரி வாழ்க்கைதான் எல்லோர்முன்னும் நிதர்சனமான ஒன்றாக இருக்கிறது. எனவே, இலட்சியவாதிகள்-சமூக விரோதிகள், நல்லவர்கள்-கெட்டவர்கள், பெரிய புத்திக்காரன் - சிறிய புத்திக்காரன் என மனிதர்களை அணுகுவது தேவையற்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரு ரகம். ஒவ்வொருவனுக்கும் தன்னிருப்பும் உயிர்ப்பிழைப்பும் முக்கியம். ஒருவனது தேவைகளைப் பூர்த்தி செய்து நாமும் என்ன பிரதிபலனைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான் நடைமுறைவாதம். இதனைத் தனது புதிய கண்டுபிடிப்பு என்றே கூறிக்கொள்கிறான் அந்தப் பத்திரிகையாளன். மனிதர்களைப் பற்றிய பார்வை மாறும்போது தனது வாழ்க்கைப் பற்றிய பார்வையும் மாறிவிட்டது என்கிறான். ஒரு மூன்றாந்தரப் பத்திரிகையில் வேலை செய்யும் அவன், சமூகப் பொது ஒழுங்குகளுக்கும் தனிமனிதனின் அந்தரங்க இருப்புக்குமிடையிலான பெரும் பள்ளத்தாக்குகளைக் கண்டுகொள்கிறான். காதல், திருமணம் போன்ற சமூக நெறிகளும் அவற்றைத் தெய்வீகப்படுத்தலும் பித்தலாட்டங்கள். ஆண் பெண் சேர்க்கை என்பதை இச்சைத் தணிப்பு என்னும் உடல்சார் இயற்கைத் தேவைக்கு அப்பால் எதில் எந்த வர்ணங்கள் ஏற்றப்படுவதையும் அவன் வெறுக்கிறான். 



 

            ஆனால் தங்கத்துடனான சந்திப்பில் அவனது உறுதிகள் தடுமாறுகின்றன.    எப்போதும்போல தன் இயற்கைத் தணிப்புக்குக் குறத்தி முடுக்கு செல்பவன் தங்கத்தின் மாறுபட்ட உபசரிப்பாலும் அரவணைப்பாலும் குழப்பமடைகிறான். தங்கம் அவனை உரிமையுடன் காதலன் போல நடத்துகிறாள். அங்குள்ள வழக்கங்களுக்கு மாறாக தனது உண்மையான பெயரைச் சொல்கிறாள். அவன் மைனர் போல ஜோராக இருப்பதாகவும் அவனை முன்பே அத்தெருவில் கவனித்திருப்பதாகவும் கூறுகிறாள். அவனை மடியில் கிடத்திக்கொண்டு, ஏன் முடியை இவ்வளவு நீளமாக வச்சிருக்கீங்க என்று உரிமையுடன் கேட்கிறாள். இதெல்லாம் அவளது தொழில் சார்ந்த சாகசங்கள், பாசாங்குகள் என நினைக்கும் அவன் எச்சரிக்கையுடன் பர்சைத் தொட்டுப் பார்த்துக்கொள்கிறான். ஆனால், அவளுடனான பாலுறவில் அவளது தூண்டல்களில் சடங்குத்தனம் கடந்த காமத்தின் உயிர்ப்புமிக்க திளைப்பைக் கண்டுகொள்கிறான். அவன் கிளம்பும்போது தங்கம் சிறு பிள்ளையைக் கேட்பது போல "சந்தோஷம் தானே" என்கிறாள். அவன் மீண்டும் மீண்டும் தங்கத்திடம் வருகிறான். அவள் மீதான காமத் திளைப்பு காதலாக மாறுகிறது. தங்கம் தன்னை வாடிக்கையாளர் போல நடத்தவில்லை, தான் அவளுக்கு விசேஷமானவன் என நினைக்கிறான். அவள் தன்னிடம் நடந்துகொள்வதுபோலதான் மற்றவர்களிடமும் நடந்துகொள்வாள் எனவும் நம்ப விரும்புகிறான். அவளுடனான சந்திப்புகளில் பாலுறவுக்கு முன்பும் பின்புமான வெளிகள் மெல்ல விரிவுகொள்கின்றன. காமத்துக்குப் பிறகு வெகுநேரம் கதையாடுபவர்களாக, காதலர்கள் போலவே பழகிக் களிப்பவர்களாக அவர்கள் மாறிப்போகிறார்கள். தங்கம் அவனுக்காவே எடுத்துவைத்திருந்த ஒரு விலைமதிப்பான சிகரெட்டைக் கொண்டுவந்து தருகிறாள். அவளது முழுமையான அன்பு அவனைப் பதற்றப்படுத்துகிறது. அவளது மனதின் மூலையில் எங்காவது பாசாங்கையும் வெறுப்பையும் கண்டுபிடித்து அதன்வழி தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறான். அது சாத்தியப்படவில்லை. அவளது பாசாங்கற்ற காமவெளியும் திறந்த அன்பும் அவனால் தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது. அவன் தங்கத்துடனேயே வாழ விரும்புகிறான். திருமணம் போன்ற பெரிய உறுதிப்பாட்டுக்கும் தீர்மானமாக முடியாமல் தடுமாறுகிறான்.  

                ஒருமுறை அவளிடம், நான் ஒரு வீடு எடுக்கறேன், கூடவே வந்துவிடு என்பவன், சற்று மௌனத்துக்குப் பிறகு மூன்று மாதங்களோ, கூடவோ பிரியப்படி இருக்கலாம் என்கிறான். அவள் சிரிக்கிறாள். நல்லவேளை எப்பவுமே சேர்ந்திருப்போம்னு சொல்லிடுவீங்களோனு பயந்துட்டேன் என்கிறாள். தங்கத்தின் அலட்சியம் அவனுக்கு வியப்பளிக்கிறது. தங்கம் சுயபச்சாதாபம் கொண்டவளில்லை என்பதும், குறத்தி முடுக்கிலிருந்து குடும்ப உறவு சார்ந்த மீட்சிக்கு அவள் ஏங்கியிருக்கவில்லை என்பதும் வெளிப்படுகிறது. எப்போதும் சேர்ந்திருந்தால் என்ன என்பவனிடம் தான் மணமானவள் என்பதையும் தனது புருஷன்  நடராஜனைப் பற்றியும் சுட்டிக் காட்டுகிறாள்.   நடராஜன்தானே அவளைக் குறத்தி முடுக்கில் விட்டுச் சென்றவன், தன் முதலாளியிடமே அவளைக் கூட்டிக் கொடுத்தவன் என்பதை அவன் கிண்டலாகச் சுட்டுகிறான்.  நடராஜனின் ஏமாற்றுத்தனங்களும் களவுகளும் தனக்குப் பொருட்டில்லை என்பதுபோலவும் அவளுடைய ஆசைகளுக்காகதான் அவன் அவ்வழி பிறழ நேர்ந்தது  என்றும் தங்கம் பேசுகிறாள். .

அவளுடைய பதில்களை அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இருவருமே சேர்ந்து வாழக் கூடிய ஓர் எதிர்காலம் பற்றி அவ்வப்போது கற்பனையான எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன. தங்கம் எல்லாவற்றின்மீதும் பட்டுக்கொண்டும் படாமலும் இருக்கிறாள். தங்கத்துடனான உறவில் அந்தப் பத்திரிக்கையாளனின்  தர்க்கங்களும் தெளிவுகளும் குழப்பமடைந்தந்தபடியே வருகின்றன. இச்சை என்ற எளிய கோலத்தில் தொடங்கும் அவன் தங்கத்துடனான உறவில் மெல்ல காதலின் படி நிலைகளைக் கண்டடைகிறான். ஆனால் இவனுக்கு நேரெதிரான குணவார்ப்பாக தங்கம் இருக்கிறாள். அவள் இறுதி வரை சமநிலை குலையாத உணர்ச்சிகளின் முகடுகளும் அகடுகளும் அற்ற ஒரு நேர்க்கோடாக இருக்கிறாள். அவன் நாவல் முழுக்க இடறிக்கொண்டே இருக்க சலனமற்ற ஒரு புதிராக தங்கம் இறுதிவரை நிலைகொள்கிறாள்.

            குறத்தி முடுக்கின் பெண்கள் அவ்வப்போது போலீஸில் பிடிபட்டு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்துவது வாடிக்கை. தங்கத்திற்கும் அது வழக்கம்தான். ஆனால் ஒருமுறை அபராதம் கட்ட மறுத்து அவள் வழக்கை நடத்த விரும்புகிறாள். தான் பாலியல்தொழில் செய்பவள்தான் என்றாலும் யாரையும் வீதியில் பலவந்தமாக அழைப்பவளில்லை என்பதை நிரூபிக்கப் பார்க்கிறாள். தனக்குச் சாட்சி சொல்ல அந்தப் பத்திரிகையாளனை அழைக்கிறாள். அவனால் அவளது அவேசத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அங்குதான் தங்கத்தின் குணவிசேஷம் பளிச்சிடுகிறது. வாழ்வின் சுழல்களுக்கு ஒப்புக்கொடுத்து அதன் போக்கில் செல்பவள்தான் தங்கம். தன்நிலை குறித்து அவள் விசனப்படுபவளில்லை. ஆனாலும் காலிப்பயல் சேதுவை தான் அழைத்ததாக ஜோடிக்கப்பட்ட பொய் அவளது சுயத்தைச் சீண்டுகிறது. தன் சுயம் களங்கப்பட்டதாக நினைக்கிறாள். தன் சுயமரியாதையை நிறுவ எத்தனிக்கிறாள். நீதிமன்றத்தில் பத்திரிகையாளன் அவளுக்காகச் சாட்சி சொல்கிறான். அவளோடு வாழ்ந்து வருவதாகவும் அவளை மணக்க உள்ளதாகவும் சொல்கிறான்.

            பின்னொரு நாள் தங்கத்தைச் சந்தித்து தான் உண்மையிலேயே அவளைக் கல்யாணம் செய்ய விரும்புவதாகச் சொல்கிறான். அவள் சிரித்தபடி பிடிகொடுக்காமல் இருக்கிறாள். தான் எப்போதும் அப்படி நினைத்ததில்லை என்றும் அப்படி எந்த நம்பிக்கையும் அவனுக்கு அளித்ததில்லை என்றும் கூறுகிறாள். அவன் தங்கம் தன்னை அவமதித்து விட்டதாக ஆற்றாமையோடு திரும்புகிறான். பின் ஒரு நாள் குறத்திமுடுக்கிலிருந்து தங்கம் காணாமல் போகிறாள்.

            . தனக்குள் காதலின் தீராத வேட்கையைக் கிளர்த்திவிட்டுத் தன்னை விட்டுப் போய்விட்ட தங்கத்தைத் சில காலத்துக்குப் பிறகு திருவனந்தபுரத்தின் வீதியில் ஒரு குழாயடியில் அவன் தற்செயலாகப் பார்க்கிறான்.  அவள் தனது குடிசைக்கு அவனை அழைத்துச் செல்கிறாள். அங்கு  ஒரு விருந்தாளியின் அசௌகரியத்தோடும் அந்நியத்தோடும் இருக்கும் அவன்  தங்கம் எத்தனை மாறிவிட்டாள் என்பதைப் பார்க்கிறான். குறத்தி முடுக்கில் விசாலமான வீட்டில் சௌகரியங்களுடன் இருந்த அவள் அந்தப் புகை மண்டிய குடிசைக்குள் மிகவும் ஒடுங்கிப் போயிருக்கிறாள்.  தங்கத்தின் கழுத்தில் புதிதாக மஞ்சள் கயிறு இருக்கிறது. அவள், தான் நடராஜனோடு வாழ்ந்து வருவதாக சொல்கிறாள். அவன் "பெரிய தப்பு" ஒன்று பண்ணிவிட்டு போலீஸிடம் இருந்து தலைமறைவாக இங்கு அவளுடன் இருப்பதாகச் சொல்கிறாள்.   நடராஜன் அவளை முறையாக கல்யாணம் செய்திருக்கவில்லை என்பதும் தற்போதுதான் தாலிகட்டியிருப்பதும் தெரிகிறது. நடராஜன் ஏற்கெனவே திருமணம் ஆனவன் என்றும் அந்த முதல் மனைவிக்கு குழ்ந்தைகளும் இருப்பதாகத் தங்கம் சொல்கிறாள். தான் ஒரு பாவியென்றும், ஒரு குடும்பத்தைப் பாழ்படுத்திவிட்டதாகவும்  நடராஜனை எப்படியாவது அவனது முதல் மனைவியுடன் சேர்ப்பித்துவிடவேண்டும் என்றும் சொல்லி அழுகிறாள். தங்கத்தின் விசித்திரங்கள் அந்தப் பத்திரிகையாளனைக் கிறுகிறுக்கச் செய்கிறது. அவளது தேர்வுகள் அவனது தர்க்கங்கள் அனைத்தையும் சிதறடிக்கின்றன. வாழ்வின் தன்னிச்சையான போக்குகளின்மீது எந்தக் கட்டுப்பாடும் அதிகாரமும் இன்றி மிதந்துசெல்லும் அவளது இயல்பின்முன் அவன் கொந்தளிக்கிறான். வாழ்வின் தெரிவுகள் முன் அவள் எப்படி இயல்பாகத் திறந்து செல்கிறாள். அவள் ஒவ்வொரு கணத்தின் மீதும் எப்படி,  பட்டும் விலகியும் இருக்கிறாள். அவனுக்குத் தீராத ஏமாற்றம் ஆற்றாமை. தன் அறைக்குத் திரும்பும் அவன் உறக்கமின்றி தங்கத்தின் நினைவுகளால் ஆகர்ஷிக்கப்படுகிறான். நாவலின் தொடக்கத்தில் ,  ஒரு வேட்கைத் தீர்ப்புக்கு அப்பால் ஒன்றுமில்லை என்பதான காமம், காதல் , உறவு பற்றிய அவனது  எளிய வரையறைகளும் சுய பிம்பங்களும் நொறுங்கிப் போக  அவன்  காதல்முறிவின் மீளாத இருளுக்குள் செலுத்தப்படுகிறான்  . அறையிலிருந்து  இறங்கி வெளியே நடக்கிறான்… தொலைவில் ஒரு மின்னல் வெட்டுகிறது. தொலைவில் நிகழ்ந்த ஒரு மின்பரிமாற்றம்’என்கிறார் ஜி.நா. அது அவனுக்குள் நிகழ்ந்துள்ள பெரும் குணமாற்றத்தின் சூசகம். மின்னல் வெட்டிவிட்டது. ஆனால் இடிச்சத்தம் இன்னும் கேட்கவில்லை. தான் எவ்வளவு மாறிவிட்டோம் என்பதை அவன் உணர்கிறான். ஆனால் அதன் தர்க்கம் புலப்படவில்லை. மழை அடித்துப் பேய வேண்டும் என நினைத்துக்கொள்கிறான். அவன் மனதின் வெக்கையை அது ஒன்றே அப்போதைக்குப் போக்க முடியும். தங்கத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளின் இருப்பு ஏன் விளக்கப்படவேண்டும். தங்கத்தின் குணவார்ப்பு என்பது நிகழ்கணத்தின் சுழல்களின் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுப்பதாக இருக்கிறது. குறத்தி முடுக்கில் அவன் மீதான அவளது பிரத்யேக அன்பும் அதன் வெளிப்பாடாக இருக்கலாம்.  

             குறத்தி முடுக்கில் அவன் தங்கத்திடம் கண்டடைந்த உணர்வு காதல், திருமணம் என்ற சமூக சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டது. அவன் அதை ஓர் ஆசை என்பதாகவே சொல்ல விரும்புகிறான். காதல், கல்யாணம் என்பவை சௌகரியமானவர்களின் ஆடம்பரச் சொற்கள் என்கிறான். தங்கம் அவனுக்குக் காமத்தைக் கற்றுத் தந்தவள், உடலின் வெளிகளைத் திறந்தவள். உடலே அறிவெளியாக, உடலே போதமாக இருக்கிறது. அதனைத் தங்கத்திடம் கண்டுகொள்கிறான். சமூகப் பண்பாட்டு அதிகார நெறிகளால் பதற்றங்களும் தன்முனைப்பும் நிறைந்த நாடகீயமான காமத்தின் ஆழத்தில் மனிதத்துவத்தின் துடிப்புமிக்கப் பால் விழைவை ஜி.நாகராஜனின் எழுத்து எப்போதும் மீட்டெடுக்கிறது. அரசியல்மயமாக்கப்பட்ட பாலியலை திரைவிலக்கி அதன் ஆழத்தில் துளிர்க்கும் ஆதிமனத்தின் விழைவை அது எப்போதும் தொடுகிறது. அதுதான் தங்கத்தையும் அந்தப் பத்திரிகையாளனையும் பிணைக்கிறது. சமூக மதிப்பீடுகளை, கலாச்சாரக் கற்பிதங்களை அதன் ஒழகலாறுகளை, நடத்தை விதிகளைப் பிரதிபலிக்கும் கலமாக மனித உடல்கள் வார்க்கப்படுகின்றன. இதிலிருந்து உடைத்து வெளியேற எத்தனிக்கும் உடலின் இயல்பான திளைப்பை ஜி.நாகராஜனில் காணலாம். தமிழ் நாவல் வெளியில் மனோவெளியின் நூற்றுக்கணக்கான கோலங்கள் காணக்கிடைக்கும் அளவுக்கு உடலின் ஓசைகளை அதன் உள்ளர்ந்த குரல்களைக் கேட்பது அரிது. உடலின் மீதான   சமூகக் கலாச்சார நிறுவனங்ளின் ஏவுதல்கள், தணிக்கைகளைப் பேசவும், உடலின் இயல்பூக்கங்களை அதன் உள்ளார்ந்த விழைவுகளைப் பேசவுமான துணிபுகள் குறைவே. ஜி.நாகராஜன் எழுதிய காலகட்டங்களில் அது மிகவும் அரிது. தான் எழுதுவது ஒரு விளிம்பு உலகம் என்பது போன்ற எந்தத் தோரணையுமின்றி அந்த யதார்த்தங்களின் உள்ளிருந்தான சரளமான வெளிப்பாடாகக் குறத்தி முடுக்கு இருக்கிறது. 

            தங்கம் தமிழ்ப்புனைவு அரும்பி வளர்ந்த காலத்திலேயெ வார்க்கப்பட்ட ஓர் அரிதான சித்திரம். ஆனால் தங்கம் ஏன் சுயதெரிவுகள் அற்றவளாக இருக்கிறாள். அவள் ஏன் மீண்டும் கணவனோடு பிணைக்கப்படுகிறாள். குடும்பம் என்ற வரையறைக்குள் செலுத்தப்படுகிறாள். அவள் ஏன் குறத்தி முடுக்குப் பெண்களில் வேறுபட்டவளாய் இருக்க வேண்டும். தன் வாடிக்கையாளனிடத்தில் அவள் ஏன் பாசாங்கற்ற பேரமற்ற களங்கமில்லா காமத்தையும் அன்பையும் பொழிய வேண்டும். தங்கம் என்ற குணவார்ப்பின் மீது இந்த நிர்ப்பந்தங்களும் தூய்மை நிலையும் ஏன் ஏற்றப்படுகின்றன என்ற கேள்விகளுடன் குறத்தி முடுக்கு என்னும் பிரதியை வேறு விமர்சன திசையிலும் ஒருவர் வாசித்துச் செல்லலாம்.